தற்போதைய செய்திகள்

ஒரு ஆண்டுக்கு மேலாக பூட்டி கிடக்கும் மண்ணுக்கு முண்டான் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க கோரிக்கை

11th Jul 2020 07:05 PM

ADVERTISEMENT

 

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள மண்ணுக்கு முண்டான் கிராம நிர்வாக அலுவலகம், ஒரு ஆண்டுக்கு மேலாக பூட்டிக்கிடப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக, அலுவலகத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மன்னார்குடி முத்துப்பேட்டை சாலையில் 23 கி.மீ. தூரத்தில் உள்ள பெருகவாழ்ந்தானிலிருந்து பிரதானசாலையின், இடதுபக்கம் 4 கிமீ தூரத்தில் உள்ளது மண்ணுக்கு முண்டான் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. மன்னார்குடி வருவாய் வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், பெருக வாழ்ந்தான் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு உள்பட்ட மண்ணுக்கு முண்டான் கிராம நிர்வாக அலுவலகம் ஆகும். இந்த அலுவலகம் மண்ணுக்கு முண்டான், தெற்கு மண்ணுக்கு முண்டான், கர்ணாவூர், ஏரிக்கரை, பட்டிமார் உள்ளிட்ட கிராமங்களை அடங்கியுள்ளது.

இந்த அலுவலகத்தில், பணியாற்றி வந்த உதவியாளர்கள் அடுத்தடுத்து பணி ஓய்வு பெற்றதையடுத்து, கிராம நிர்வாக அலுவலகம், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால்,கிராம நிர்வாக அலுவலர் மண்ணுக்கு முண்டான் அலுவலகத்திற்கு வருவதில்லை.

ADVERTISEMENT

இப்பகுதியை சேர்ந்தவர்கள், அனைவரும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விவசாயத்திற்காக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களில் பயனாளிகள் ஆவதற்கும், மாணவர்கள் கல்வி பயில அரசின் சலுகை பெறுவதற்காக மனு அளிக்கவும், பிறப்பு, இறப்பு, திருமண உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றுக்கான கையொழுத்து பெறவும், 4 கி.மீ. தூராம் உள்ள பெருகவாழ்ந்தானுக்கு சென்று, கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வேண்டியதாக உள்ளது.

காலை, மாலை என இரு வேளை மட்டும் அரசுப் பேருந்து மட்டும் மண்ணுக்கு முண்டான் வந்து செல்லுவதால், அவசர தேவைக்கு இருசக்கர வாகனத்திலோ அல்லது பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டியிருப்பதாகவும், மழைக்காலத்தில் பெருகவாழ்ந்தானுக்கு செல்லமுடியாமல் முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஆண்டுக்கு மேலாக கிராம நிர்வாக அலுவலகம் பூட்டிக்கிடப்பதால் கால்நடைகள் கட்டும் இடமாக மாறிவருவதுடன், இரவில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறது. கட்டடமும் பராமரிப்பு இன்றி தேடமடைந்து வருகிறது. எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மண்ணுக்கு முண்டான் கிராம நிர்வாக அலுவலகத்தை உடனடியாக திறப்பதுடன், காலியாக உள்ள இரண்டு உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பி, கிராம நிர்வாக அலுவலர் தினசரி அலுவலகத்திற்கு வருகைதந்து முழுமையாக அலுவலகம் செயல்பட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT