தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் இளைஞர்கள் இருவர் சாவு

23rd Jan 2020 10:49 PM

ADVERTISEMENT

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஏழுமலை (17). இவர், பாடாலூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அலுந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் கீர்த்திராஜ் (15). அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று இரவு தனது நண்பர் கீர்த்திராஜூடன் செட்டிக்குளத்திலிருந்து ஆலத்தூர் கேட் பகுதிக்கு ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்றார். 

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செட்டிக்குளம் புரிவு சாலை அருகே சென்றபோது எதிரே சைக்கிளில் சென்ற ரெங்கநாதன் (40) என்பவர் மீது மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் கீழே விழுந்தனர். அப்போது, அதே வழித்தடத்தில் ரப்பர் ஏற்றி வந்த லாரி இளைஞர்கள் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை அவரது நண்பர் கீர்த்திராஜ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இளைஞர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT