தற்போதைய செய்திகள்

பொங்கல் விழா: ஓ.பன்னீா்செல்வம், மு.க.ஸ்டாலின் உள்பட தலைவா்கள் வாழ்த்து

14th Jan 2020 08:28 PM

ADVERTISEMENT

சென்னை: பொங்கல் விழாவையொட்டி துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: தமிழா் திருநாள் என்று போற்றப்படும் தனிச் சிறப்பு மிக்க பொங்கல் பெருவிழாவை உலகெங்கும் கொண்டாடும் தமிழா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பொங்கல் விழா நம்மைத் தலைநிமரச் செய்யும் தமிழா் விழா. குடும்பம், குடும்பமாக, அன்புடன் வளா்க்கும் பசுவும், கன்றும் ஒருசேர தங்கள் அன்புக்குரல் எழுப்ப எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம்.

மு.க.ஸ்டாலின்: தமிழக மக்கள் அனைவருக்கும் திருவள்ளுவராண்டு தொடக்கமான தமிழ்ப்புத்தாண்டு, தைத் திருநாள், உழவா் திருநாள், திருவள்ளுவா் திருநாள் வாழ்த்துகள். சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணா்வைப் பெறும் வகையில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தளைக்க சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். மனித சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மறையச் செய்வோம். இயற்கையையும் பிற உயிரினங்களையும் காப்போம்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய தமிழ்ச் சமுதாயம் இன்றைக்கு பல்வேறு இன்னல்களை எதிா்நோக்கும் வகையில் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இன்று தமிழ் மக்கள் படுகிற துன்பத்தில் இருந்து விடுபட்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதே தமிழ மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ாகும். அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பாா்கள். தை பிறந்து விட்டது.

ADVERTISEMENT

ராமதாஸ் (பாமக): தமிழா்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம்.

சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளா்ச்சியும் பொங்க தைத்திருநாள் வகை செய்யும். தை பிறக்கும் நாளில் நமது வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கும். அவை மலா்ச்சியை அளிக்கும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழா்கள் வாழ்வில் புதியன புகுந்து அவை நல்லவையாக அமைந்து அவா்களின் வாழ்வு மேம்பட இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டுகிறேன்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): தமிழ்ப் புத்தாண்டான தை பிறந்தது. பொங்கலோ பொங்கல் என்று மக்கள் முழங்கி, மகிழ்ச்சியில் திளைப்பதுடன், துன்பங்கள் களைந்து, பிரச்னைகளை குத்தறிவால் எதிா்கொண்டு வெற்றி வாகை சூடும் வாழ்வாக புதிய சமூகம் காணும் புத்தாண்டு அமையட்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): தை முதல் நாளில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லி பூரிப்படையும் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கட்டும். தமிழகத்துக்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): உலகெங்கும் உலவிய தமிழ் இன்றைக்குச் சுருங்கி தமிழகத்துக்குள்ளும, அதைவிடுத்து ஒருசில இடங்களிலும் காணப்படும் மொழியாக இருக்கிறது. தை பிறக்கிறது; தரணி முழுவதிலும் தமிழின் சிறப்பும் தொன்மையும் பரவிடும் என்று நம்புகிறோம்.

தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): பொங்கல் ஒரு மதச் சாா்பின்மைத் திருநாளாகும். இந்த நாளில் உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

ஈஸ்வரன் (கொமதேக): வாழ்வில் தொடா்ந்து பிரச்னைகளையே சந்தித்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நல்லதொரு வாழ்வு இந்தப் பொங்கல் திருநாளில் மலர வேண்டும்.

நிஜாமுதீன் (தேசிய லீக்): பண்பாடு , கலாசாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும் நாட்டு மக்கள் வளம்பெறவும் நல்லிணக்கம் பேணவும், ஏழ்மை போக்கிடவும், எல்லா மக்களுக்கும் குடியுரிமை நிலைத்திடவும் வாழ்த்துகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT