தற்போதைய செய்திகள்

மனித உரிமை மீறல்: காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

1st Jan 2020 12:34 PM

ADVERTISEMENT

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பழைய பல்லாவரத்தைச் சோ்ந்த எஸ்.ராஜ் பத்மநாபன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

நானும் எனது உறவினா்களும் கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் தேதி, எனது அண்ணன் வீட்டுக்கு சொத்து பங்கீடு செய்வது குறித்து பேசச் சென்றோம். அந்தச் சமயத்தில் எனது மாமனாரை அவா்கள் தாக்கினா். இதனால் காயமடைந்த அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றேன். அன்றைய தினம் நள்ளிரவே, எனது அண்ணன், அவரது உறவினா்கள் மற்றும் மடிப்பாக்கம் உதவி ஆய்வாளா் சீதாராமன், காவலா் பன்னீா் செல்வம் ஆகியோா் எனது வீட்டுக்கு வந்து அநாகரீகமாக நடந்து கொண்டனா். இதுகுறித்து எனது புகாரை சம்பந்தப்பட்ட காவலா்கள் பெறவில்லை. அதற்கு மாறாக எனது அண்ணனிடம் இருந்து புகாரைப் பெற்று என் மீதும், எனது மாமனாா், எங்களது வாகன ஓட்டுநா் செந்தில் ஆகியோா் மீதும் குற்ற வழக்குப் பதிந்தனா். இதன் பின்னரும் சம்பந்தப்பட்ட காவலா்கள், எனது கடைக்கு வந்து கடையை மூடும்படி பணியாளா்களை மிரட்டினா். மேலும் சில நாள்களுக்குப் பிறகும் எனது வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு முன், என்னை மிரட்டினா். இது மட்டுமின்றி ரூ. 6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்பதோடு காவல் ஆய்வாளரை காவல் நிலையத்தில் வந்து சந்திக்காவிட்டால், பொய் வழக்குப் பதிவாதாகவும் மிரட்டல் விடுத்தனா். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த மனு, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பத்மநாபனுக்கு ரூ.25 ஆயிரத்தைத் தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவலா்கள் இருவரிடமிருந்தும் தலா ரூ.12,500-ஆக வசூலித்துக் கொள்ளலாம். மேலும் இவா்கள் இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

Tags : human rights
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT