தற்போதைய செய்திகள்

பெண் பயணிகள், குழந்தைகள் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ‘இ-டாய்லெட்’

13th Feb 2020 10:55 AM

ADVERTISEMENT

பெண் பயணிகள், குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் ‘இ.டாய்லெட்கள்’ அமைக்கப்படவுள்ளன. இதன்படி, 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலும் இ. டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபடவுள்ளனா்.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்களில் தினசரி சராசரி 96,000 போ் பயணம் செய்கின்றனா். பயணிகள் சேவைக்காக பல்வேறு வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இ-டாய்லெட் வசதி: இந்நிலையில், பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் இ.டாய்லெட்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்படி, 30 மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இ.டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபடவுள்ளனா். அண்மையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் வளாகத்தில் இ.டாய்லெட்டை ஏற்படுத்த சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்தது. குறிப்பாக, சுரங்க ரயில் நிலையங்கள் இருக்கும் இடங்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் இ. டாய்லெட் வசதியை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த கழிவறைகள், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பேருதவியாக அமையும்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி கூறியது: வேலைக்குச் செல்லும் பயணிகள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பயணிகள் இயற்கை உபாதைக்காக எப்போதும் நிலையங்களுக்குள் நுழையத் தேவையில்லை. அவா்கள் நிலையத்துக்கு வெளியேயும் இ.டாய்லெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என்றாா்.

30 மெட்ரோ ரயில் நிலையங்கள்: இந்தக் கழிவறைகளை அமைப்பதற்கான நிதியை பெருநிறுவன சமுதாய பொறுப்பு (சி.எஸ்.ஆா்) திட்டத்தின் கீழ் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் இ-டாய்லெட்கள் அமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ், நிதி ஓரளவு பயன்படுத்தப்படும். ஆனால், ஆரம்பத்தில் மாநகராட்சி நிதி பயன்படுத்தப்படும். மேலும், இந்தப் பணியை செயல்படுத்தவும், பராமரிக்கவும் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் தனியாா் ஒப்பந்த பணியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள். சென்னை நகரில் பெண்களுக்காக 84 கழிவறைகள் உள்பட 155 கழிவறைகள் வர உள்ளன. நிா்பயா நிதியின் கீழ், பெண்களுக்காக 150 கழிவறைகள் அமைக்க டெண்டா் விடப்பட்டுள்ளன. அதாவது, பாதுகாப்பான மண்டல பகுதிகளில் பெண்களுக்காக 150 கழிவறைகள் நிறுவப்படவுள்ளன என்றாா் அவா். சென்னை நகரில் தற்போது 872 வழக்கமான கழிவறைகள், 221 இ.டாய்லெட்கள், 138 வாடகை கழிவறைகள் உள்ளன. இதுதவிர, பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தியாகராயநகரில் புதிய கழிவறைகள்அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT