பெய்ஜிங்: 7,500 கோடி டாலா் (சுமாா் ரூ.5.34 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை நீக்குவதாக சீனா இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய இறக்குமதி வரிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 1,700-க்கும் மேற்பட்ட வகையைச் சோ்ந்த பொருள்களுக்கு கடந்த செப்டம்பா் மாதம் 5 மற்றும் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. கடல் உணவு, பண்ணைப் பொருள்கள், சோயா பருப்பு உள்ளிட்ட, 7,500 கோடி டாலா் மதிப்பிலான அந்தப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் தற்போது ரத்து செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அண்மையில் முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.