தற்போதைய செய்திகள்

அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமிரா வைக்க டி.எஸ்.பி வேண்டுகோள்

2nd Feb 2020 08:47 PM

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 61 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 81 வருவாய் கிராமங்களிலும் கண்காணிப்பு கேமிரா வசதியை ஏற்படுத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

கும்மிடிப்பூண்டியில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வென்ற ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்பினருடன் போலீஸாரின் ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டியில் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், கும்மிடிப்பூண்டி உதவி ஆய்வாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது அமைப்பினர் மத்தியில் பேசிய கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் அனைத்து ஊராட்சிகளின் எல்லை துவக்கம், முடிவு பகுதிகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமிரா வைக்க வேண்டும். மேலும் பள்ளி மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமிரா வைக்க ஏற்பாடு செய்து சமூக விரோத செயல்களை முழுமையாக தடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

வேலையின்றி உள்ள இளைஞர்கள் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் அவர்களை கிராம மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தவும், உள்ளூர் சிறார்களின் கல்வியை வளர்க்க இரவு நேர பாடசாலையை அவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும், ஊருக்குள் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர் 6 கிராமங்களுக்கு ஒரு காவலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தினமும் மக்களை சந்தித்து புகார்களை நேரில் பெறுவார் என்றும், ஊராட்சிகளில் இளைஞர்களை நல்வழிப்படுத்த உடற்பயிற்சி மையம் ஏற்பாடு செய்தல், பெண்களுக்கு காவல் நிலையங்களின் தொடர்பு எண்ணை தெரிவிக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் பைக்கில் செல்லும் போது கட்டாயம் தலைகவசம் அணிந்து முன்னுதாரணமாக செல்ல வேண்டும் என்று அறிவுத்தினார்.

தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தினர் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்தும் போஸ்கோ சட்டம் குறித்தும் விளக்கினார்.

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எகுமதுரை ஸ்ரீபிரியா மகேந்திரன், கீழ்முதலம்பேடு நமச்சிவாயம், சூரப்பூண்டி வாணிஸ்ரீ,பூவலம்பேடு வெங்கடாசலபதி, மாதர்பாக்கம் சீனிவாசன், பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, மாநெல்லூர் லாரன்ஸ், தண்டலச்சேரி ஆனந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

அதன்படி சிப்காட்டில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய மாதர்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்படும் கஞ்சா விற்பனையை போலீஸார் தடுக்க வேண்டும், பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை மாலை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், தண்டலச்சேரியில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் போலீஸார் முன் வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT