தற்போதைய செய்திகள்

தினமணி.காம் செய்தி எதிரொலி: புதுக்கோட்டை வந்தது கரோனா பரிசோதனைக் கருவி

5th Apr 2020 08:19 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தினமணி.காமில் வெளியிடப்பட்ட செய்தியின் எதிரொலியாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனைக் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரியைக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்படும் கரோனா பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளைத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி தினமணி.காம்  இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

கரோனா பரிசோதனை மையம் புதுக்கோட்டைக்குத் தேவை - என்ற அந்தச் செய்திக் கட்டுரையில், புதுக்கோட்டையில் அமைக்க வேண்டியதன் அவசியம் விளக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கரோனா பரிசோதனைக்கான ஆர்டிபிசிஆர் என்ற கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை ஞாயிற்றுக்கிழமை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், மிகச் சில நாள்களுக்குள் புதுக்கோட்டை உள்பட 8 மாவட்டங்களில் பரிசோதனை மையங்கள் செயல்படத் தொடங்கும் என்றார்.

பரிசோதனை மையத்துக்கான தனி குளிரூட்டப்பட்ட அறை, ரத்த மாதிரி சேகரிப்பின்போதும் டாக்டர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பான அமைப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முறைப்படியான உரிமம் மிக விரைவில் கிடைக்கும். தொடர்ந்து, இங்கேயே பரிசோதனைகளும் நடத்தப்பட்டு முடிவுகளும் உடனுக்குடன் கிடைக்கும் என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT