சிறப்புச் செய்திகள்

அமெரிக்காவில் 4 அணைகள் தகர்க்கப்படுவது ஏன்?

29th Sep 2023 05:10 PM | ஜானதன் லிவிங்ஸ்டன் ஸீகல்

ADVERTISEMENT

 

ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிட்டு அணைகளைக் கட்டுவார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மூவாயிரம் கோடிகளுக்கும் மேல்  செலவிட்டு அணைகளை இடிக்கப் போகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பெரிய அளவில் 4 அணைகளைத் தகர்க்கும் திட்டம், கலிபோர்னியா – ஓரெகன் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் தற்போது செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிளேமத் ஆற்றில் 4 அணைகள்

ADVERTISEMENT

இந்த நான்கு அணைகளும் கிளேமத் என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கின்றன. அரசின் திட்டப்படி, இந்த அணைகள் தகர்க்கப்படவுள்ளன. இவற்றில் சிறிதாக இருக்கும் அணையைத் தகர்க்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அடுத்தாண்டில் அடுத்தடுத்து மற்ற மூன்று அணைகளும் தகர்க்கப்பட்டுவிடும்.

அமெரிக்கா முழுவதிலும் ஆறுகள் மற்றும் பேரோடைகளின் இயற்கையான போக்கைத் தடுத்து நிறுத்தும் அணைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே  இந்த அணைகள் தகர்க்கப்படுகின்றன.

ஏன் அகற்றப்படுகின்றன?

இந்த அணைகள் யாவும் மின்னுற்பத்தி செய்வதற்காக சில, பல பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை இயற்கையான ஆற்றோட்டத்தைத் தடுத்து நிறுத்துவதுடன் சால்மன் (கிழங்கான், காலா) மீன்களின் இருப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. இந்தப் பகுதியிலுள்ள பல்வேறு அமெரிக்கப் பூர்வகுடி மக்களைப் பொருத்தவரை பண்பாட்டுரீதியிலும் ஆன்மிகரீதியிலும் இந்த மீன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

செத்த மீன்கள்

2002 ஆம் ஆண்டில் அணைகளில் நீர்மட்டங்கள் குறைந்தது, வெப்பமான சூழ்நிலை நிலவியது ஆகியவற்றின் காரணமாகப் பெருந்தொற்று ஏற்பட்டு, 34 ஆயிரத்துக்கும் அதிகமான மீன்கள் செத்துவிட்டன. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பூர்வகுடி மக்கள், இந்த அணைகளைத் தகர்த்து அகற்ற வேண்டும் என இயக்கங்கள் தொடங்கினர்.

நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில், இந்த அணைகளைத் தகர்க்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

எப்போது அகற்றப்படும்?

காப்கோ 2 எனப்படும் இருப்பதிலேயே சிறிதான அணையை அகற்றும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. மற்ற மூன்று அணைகளும் பெரியவை என்பதால் அவற்றைத் தகர்க்கக் கூடுதலான காலம் தேவைப்படும். எனவே, வரும் ஜனவரியில் பணியைத் தொடங்கி, 2024 ஆண்டு இறுதியில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அணைகளை எப்படி அகற்றுவார்கள்?

இந்த அணைகளை பெரிய அளவில் வெடிவைத்து ஒரேயடியாகத் தகர்க்கும் திட்டமில்லை. பதிலாக, இந்த வசந்த காலத்தில் அணைகளில் நிறுத்தப்பட்டுள்ள தண்ணீரை ஒட்டுமொத்தமாகத் தொழிலாளர்கள் வடித்துவிடுவார்கள். அணை நீர் காலியானதும், அணைகளைச் சிறிய அளவில் வெடிகளை வைத்தும், பெரும் எந்திரங்களைக் கொண்டும் உடைக்கத் தொடங்குவார்கள்.

இந்தத் திட்டத்தின் பணி வெறுமனே அணைகளை இடித்துவிடுவது மட்டுமல்ல. இந்த அணைகள் கட்டப்படுவதற்கு முன் இந்தப் பகுதியில் எத்தகைய சுற்றுச்சூழல் நிலவியதோ அதே சூழலை மீளவும் ஏற்படுத்தவும் தொழிலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

காலங்காலமாக பூர்வகுடி மக்கள், இந்தப் பகுதிகளில் இயற்கையாக வளரும் தாவரங்களின் விதைகளைச் சேகரித்துவைத்திருக்கின்றனர். இந்த விதைகள் அனைத்தும் நாற்றங்கால்களுக்கு அனுப்பப்பட்டு கன்றுகளாக வளர்த்தெடுத்து இந்த கிளேமத் ஆற்றின் கரையோரங்களில் நடப்படவுள்ளன.

இந்த அணைகள் தகர்ப்புத் திட்டத்துக்கான செலவு மதிப்பீடு இந்திய மதிப்பில் ரூ. 3736.87 கோடி.

தடைகளை அகற்றி ஆற்றைத் தன் வழியில் ஓட விடுவதற்காகச் செய்கிறார்கள்  செலவு!

ADVERTISEMENT
ADVERTISEMENT