சிறப்புச் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க பன்றிச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!

16th Sep 2023 03:05 PM | ஜானதன் லிவிங்ஸ்டன் ஸீகல்

ADVERTISEMENT

 

உலகெங்கும் நீரிழிவு போன்றவற்றாலும் வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் சிறுநீரகச் செயலிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சிறுநீரகங்கள் செயலிழந்தவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள், கொடையாளிகளிடமிருந்து அல்லது மூளைச் சாவுற்றவர்களிடமிருந்து பெறப்படும் மாற்றுச் சிறுநீரகங்கள் மூலம் மறுவாழ்வு கிடைக்கிறது. எனினும், இன்னமும் கொடையாகச் சிறுநீரகங்கள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

இந்த நிலையில் உலகெங்கும் மனிதர்களுக்கு விலங்குகளின், குறிப்பாக, பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்த முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இத்தகையதொரு முயற்சியாக அமெரிக்காவில் மூளைச் சாவுற்ற ஒருவரின் உடலில் இரண்டு மாதங்கள் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது இயல்பாகச் செயல்படுவதை, வெற்றிகரமாக மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.

நியு யார்க் பல்கலைக்கழகத்தில் லாங்கோன் நலவாழ்வுப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்தது. மூளைச் சாவுற்ற மோரிஸ் மோ மில்லர் என்பவரின் உடலில் பொருத்திச் சோதனை செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அகற்றிவிட்டு, அவருடைய உடலை எரியூட்டுவதற்காகக் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். 

மூளைச் சாவுற்றவரின் உடல் என்றபோதிலும் மனித உடலுக்குள் பொருத்தப்பட்ட பன்றிச் சிறுநீரகம் நீண்ட நாள்களாகச் செயல்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இறந்தவரை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்றாலும், இந்த வெற்றியானது  வாழ்ந்துகொண்டிருப்போருக்கும் பொருத்திப் பார்த்து சோதிப்பதற்கான நம்பிக்கையை அளித்திருக்கிறது. இந்த சோதனையில் அறிய வந்தவற்றை விரைவில் அமெரிக்க மருத்துவத் துறையிடம் இந்த மருத்துவக் குழுவினர் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.

கடந்த பல பத்தாண்டுகளாகவும் நடத்தப்பட்டுவரும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உடல் உறுப்புகளை மாற்றும் சோதனை முயற்சிகள் வெற்றி பெறவில்லை. வெளிப்பொருளாகக் கருதி விலங்குகளின் திசுக்களை, மனித உடலிலுள்ள நோயெதிர்ப்பு அமைப்பு உடனடியாக அழித்துவிடுகிறது. இந்த முறை மனிதர்களுடையதைப் போன்றே இருக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உறுப்புகளைக் கொண்டு சோதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின் மூலம், விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்துவது உண்மையில் சாத்தியமான ஒன்றுதான் எனக் கற்றுக்கொண்டிருப்பதாக நியூ யார்க் பல்கலைக்கழக மருத்துவமனையின் மாற்று அறுவைச் சிகிச்சை நோயெதிர்ப்பு நிபுணர் மாஸ்ஸிமோ மஞ்ஜியோலா குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு, இறந்துகொண்டிருந்த ஒருவருக்குப் பன்றியின் இதயத்தைப் பொருத்தி மேரிலாந்து பல்கலைக்கழக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் காப்பாற்ற முயன்றனர் - ஆனால் அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். பன்றி இதயம் செயலிழந்துவிட்டது. அதற்கான காரணங்களை உறுதியாகக் கூற  முடியவில்லை.

இத்தகைய நிலையில்தான், சிறுநீரக ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.

திடீரென ஒரு நாள் மில்லர் மயங்கிவிழுந்து மூளைச்சாவுற்றார். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருடைய உறுப்புகளைத் தானம் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, பன்றிச் சிறுநீரக பரிசோதனைக்காகத் தன்னுடைய சகோதரர்  மில்லரை சகோதரி மில்லர் டஃப்பி வழங்கினார்.

ஜூலை 14 ஆம் தேதி, மில்லரின் 58-வது பிறந்த நாளுக்குச் சில நாள்களுக்கு முன், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மில்லரின் சிறுநீரகங்களை அகற்றிவிட்டு, ஒரு பன்றிச் சிறுநீரகத்தையும் கூடவே, நோயெதிர்ப்பு செல்களைக் கையாளும் பன்றியின் தைமஸ் சுரப்பியையும் பொருத்தினர்.

முதல் ஒரு மாதம், அந்தச் சிறுநீரகம் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் செயல்பட்டது. இரண்டாவது மாதம் தொடங்கியபோது, பிரியும் சிறுநீரின் அளவு  சற்றுக் குறைவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, பன்றிச் சிறுநீரகத்தை மனித உடல் நிராகரிக்கத் தொடங்குவதை திசு பரிசோதனை மூலம் மருத்துவர்கள் அறிந்தனர்.

ஆனால், இதுவே நிராகரிப்புக்கு சிகிச்சையளிக்க முடியுமா என்பதைக் கண்டறியும்  வாய்ப்பை மருத்துவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. நோயாளிகள் தற்போது பயன்படுத்தும் வழக்கமான நோயெதிர்ப்புக் குறைப்பு மருந்துகளின் உதவியுடன் சிறுநீரகம் மீண்டும் நன்றாகச் செயல்படத் தொடங்கியது.

மனித ஹார்மோன்களுக்கு எதிர்வினையாற்றியதிலும் நோய்க் கிருமி எதிர்ப்பு மற்றும் மருந்துகள் தொடர்பான பக்க விளைவுகளைக் கையாண்டதிலும் மனித சிறுநீரகத்துக்கும் இந்தப் பன்றிச் சிறுநீரகத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு விலங்குகளின் உறுப்புகளைப் பொருத்தும் முயற்சியில் இதுவொரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT