சிறப்புச் செய்திகள்

நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர்! மக்கள் மகிழ்ச்சி!!

27th Oct 2023 12:53 PM | எஸ். சந்தானராமன்

ADVERTISEMENT


நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீடாமங்கலத்தில் ரயில்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நெடுஞ்சாலை பயணிகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு நிரந்தர தீர்வு மாற்றுவழி பாதைகள் தான் என அதற்கான கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு விடுக்கப்பட்டு வந்தது. 

கடந்த கால திமுக, காங்கிரஸ் மத்திய கூட்டணி ஆட்சியில் அப்போதைய மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் ஆகியோரின் சீரிய முயற்சியின் பேரில் சுற்றுச்சாலை அமைக்க முதலில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. 

பின்னர், நான்கு வழிச்சாலைத்திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலைத் திட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

மூடப்பட்ட நீடாமங்கலம் ரயில்வே கேட்

நான்கு வழிச்சாலைத்திட்ட பணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சாவூர் வரையிலான பணி முதலில் நிறைவடைந்தது.

தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பணிகள் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலைத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

அந்த பணியும் முழுவதுமாக நிறைவே்ற்றபடாமல் இருந்தது. மீண்டும் பணிகள் தொடங்கி பெருமளவில்  நடந்துள்ளது. நீடாமங்கலம் பகுதியில் கோவில்வெண்ணி முதல் கப்பலுடையான் பகுதிவரை சாலைபணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளது. எஞ்ஜிய பகுதியில் உள்ள பணிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

இதையும் படிக்க | ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதிய நிதி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மேம்பாலம் திட்டம்
இதற்கிடையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக அரசின் 110-வது விதியின் கீழ் முதல் கட்டமாக ரூ.20 கோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மண்பரிசோதனை செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையால் திட்டவரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக 2015-2016ம் நிதியாண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்துள்ளது. நிதி ஒதுக்கீடு தொகை ரூ.53 கோடியே 92 லட்சம் நிதியை ரயில்வே தன்பங்கிற்கு செலவிட திட்டமிட்டுள்ளது. 

அதே ஆண்டில் 2015-2016 முதல் தொடர்ந்து மத்திய அரசு நிதியும் ஒதுக்கியுள்ளது. திட்ட  பணிகள் தொடங்காத காரணத்தால் ரயில்வே தனது பங்கிற்கானரூ. 53 கோடியை விடுவிக்காமல் இருந்தது. இதில் தேய்மான நிதியாக ரூ.44 கோடியே 95 லட்சம், மூலதன நிதியாக ரூ.8 கோடியே 97 லட்சமும் செலவிட திட்டமிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சிறு,சிறு தொகையாக ஒதுக்கீடு செய்துள்ள நிதி உள்ளது. ரயில்வே மேம்பாலம் பணிதொடங்கும் பட்சத்தில் இந்த தொகையை ரயில்வே துறை வழங்கும் என கூறப்பட்டது.

நீடாமங்கலம் ரயில்வேகேட் மூடப்பட்டபோது சாலையில் அணி வகுத்த வாகனங்கள்.

கிடப்பில் போடப்பட்ட நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் திட்ட பணியை தொடங்கிட பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, தற்போதைய அமைச்சர், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவின் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததன் பேரில் அமைச்சர் ஏ.வ.வேலு பேரவையில் மத்திய அரசின் அனுமதி பெற்று மேம்பாலம் பணி தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு ரூ. 170 கோடி செலவில் மேம்பாலம் கட்ட முன்வந்துள்ளது.

இதன்படி,  நீடாமங்கலம் வட்டம் பரப்பனாமேடு, சித்தமல்லி கிராமங்களில் 2.60 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலத்திற்குரியவர்களுக்கு ரூ.36 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்து முடித்துள்ளனர்.

மேம்பாலம் பணிக்கான டெண்டர் 3.10.2023 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டு வரும் 22.11.2023 ல் மதியம் 3 மணிக்குள் டெண்டர் முடிவடைகிறது.

எனவே, வரும் ஜனவரி மாதத்தில் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாலம் கட்ட மத்திய மாநில அரசுகள் முன்வர பத்திரிகைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினர் எம்.செல்வராஜ் நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர். நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் படும் துயரம் குறித்து அவ்வப்போது எம்.செல்வராஜ் மத்திய அரசுக்கு தெரிவித்து மாற்றுப்பாதைத் திட்டத்தினை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீடாமங்கலம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று மேம்பாலம் கட்டும் பணியை நிறைவேற்ற முன்வந்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு நீடாமங்கலம் பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இருவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்திடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT