சிறப்புச் செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வில் இனி அதிர்ஷ்டத்திற்குத்தான் வாய்ப்பு? தேர்வர்கள் குமுறல்!

கோமதி எம். முத்துமாரி

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நேற்று (மே 28) நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தேர்வின் வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டிருந்ததாகவும் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது. 

இதில் நடப்பு ஆண்டுக்கான 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை, கடந்த பிப்.1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து, பிப்.21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மே 28, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்நிலைத் தேர்வினை நாடு முழுவதும் இருந்து 7 லட்சம் போ் எழுதினா். தமிழ்நாட்டில் 50,000-க்கும் மேற்பட்டோர் எழுதினர். காலை 9.30 முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவுத் தோ்வும் நடைபெற்றது.

இந்நிலையில் தேர்வுத்தாள் இந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்ததாகவும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டிருந்ததாகவும் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வரலாறு பாடத்தை பொருத்தவரை, வழக்கமாக நவீன இந்தியா வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில் இந்தாண்டு பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றில் 10 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் நவீன இந்தியா பாடத்தில் வெறும் 3 கேள்விகள் மட்டும் இருந்தன. 

கடந்த ஆண்டு உறுதிப்படுத்துதல் மற்றும் பகுத்தறியும் திறன் (assertion and reasoning) ஆகியவற்றில் இரண்டு கேள்விகளே கேட்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 

சமீப காலமாக  யுபிஎஸ்சி தனது கேள்வி முறையை ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருவதாகவும் இந்த ஆண்டு அதிகமாக மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆண்டில் பாடவாரியாக என்று எடுத்துக்கொண்டால் பொருளாதாரத்தில் 12, புவியியலில் 8, விளையாட்டில் 2, அரசியலில் 13, சுற்றுச்சூழல் 15 - 16, வரலாற்றில் 3, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 5 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. 

சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியாளர் எஸ். கணேஷ் இதுகுறித்து கூறுகையில், 'கடந்த ஆண்டுகளில் நவீன இந்தியாவில்  6 முதல் 10 கேள்விகள் இருக்கும். இடைக்கால இந்தியாவில் 3-5 கேள்விகளும், பண்டையகால இந்தியாவில் 2 கேள்விகளும் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு நவீன இந்தியா குறித்த கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளன' என்றார். 

முதல்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த கேள்வித் தாள் மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்றும் பயிற்சியாளர்களே கூறுகின்றனர். 

தேர்வர் ஆர். கோவிந்தராஜ் என்பவர் இதுகுறித்து, 'இந்த முறை,  உறுதிப்படுத்துதல் மற்றும் பகுத்தறியும் திறன் (assertion and reasoning) பிரிவில் அதிக கேள்விகள் இருந்தன. இதில் சுமார் 18 கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் மட்டுமே இருந்தது. தேர்வர்களைக் குழப்புவதற்காகவே இவ்வாறு கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்வு எழுதியோர் குழப்பமடைந்திருப்பார்கள்' என்றார். 

இதற்கு முன்னர், கடந்த 2011, 2012-ஆம் ஆண்டுகளில்தான் உறுதிப்படுத்துதல் மற்றும் பகுத்தறியும் திறன் (assertion and reasoning) பிரிவில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாகக்  கூறுகின்றனர். சர்வதேச வரைபட அடிப்படையிலான கேள்விகளில், உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அருகிலுள்ள நாடுகளைப் பற்றி 3 கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுத் தற்போது பணியில் இருக்கும் அலுவலர்களே நேற்றைய தேர்வுத் தாள் குறித்துத் தங்கள் வியப்புகளைப் பகிர்ந்துள்ளனர். 

'இது என்ன கேள்வித் தாள்?' என மதுரை துணை ஆட்சியர் திவ்யான்ஷு நிகாம் கூறியதற்கு பதில் அளித்துள்ள ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஷ் நாரணவாரே, 'இத்தகைய கேள்வித் தாள், யுபிஎஸ்சி தேர்வுக்கு புதிதாகத் தயாராகும் மாணவர்களை ஊக்கமிழக்கச் செய்கிறது. யுபிஎஸ்சி தேர்வு பல வழிகளில் மர்மமானது' என்று ட்வீட் செய்துள்ளார். 

இதற்கு திவ்யான்ஷு நிகாம், 'கரெக்ட் சார்!! இப்படிப்பட்ட கேள்வித் தாளுக்கு ஒருவர் எப்படித் தயாராக முடியும்? இறுதியில் அதிர்ஷ்டம் மற்றும் யூகத்திற்கே வந்து முடிகிறது' என்று கூற, 'உண்மை. கடினமாக இருப்பதற்கு ஒரு மனிதாபிமான வரம்பு இருக்க வேண்டும். இதனால் சராசரி மாணவர்கள் இதிலிருந்து (ஐஏஎஸ் தேர்வுகளை எழுதுவதிலிருந்து) அகற்றப்படுவார்கள்' என்று மணீஷ் நாரணவாரே கூறியுள்ளார். 

அனுபவம் இருப்பவர்கள் ஓரளவு சமாளிக்க முடியும் என்றும் முதல்முறையாகத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள் என்றும் நன்கு பயிற்சியான தேர்வர்கள் கூறுகின்றனர். 

முன்னதாக, கேள்விக்கான விடைகளில் 'நீக்குதல் முறை'யில் சில ஆப்ஷன்களை நீக்கி விடையளிக்க முடியும். ஆனால், சமீபமாக யுபிஎஸ்சி தேர்வுகளில் கேள்விகளில் கொடுக்கப்படும் கூற்றுகள் அனைத்தும் தெரிந்தால் மட்டுமே சரியான விடையளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய கேள்வித்தாளில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் இவ்வாறு இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர். 

வழக்கமாக பொருளாதாரம் மற்றும் நடப்பு நிகழ்வில் கேள்விகள் அதிகம் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளிலும் கேள்விகள் குறைவாக இருந்ததாகவும் தெரிவித்தனர். 

தேர்வுத்தாள் கடினமாக இருந்ததால் இந்த ஆண்டு முதன்மைத் தேர்வுக்குச் செல்லும் கட்-ஆப் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐஏஎஸ் தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களுக்கு ஏதேனும் ஒருவித ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால், எந்த வரன்முறைக்குள்ளும் இல்லாமல் திட்டமிடப்படும் தேர்வுகளால் எதிர்காலத்தில் தேர்வர்கள் மிகவும் குழம்பிப் போய்விடும் நிலையே ஏற்படும்.

இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இயன்றவரை செலவு செய்துகொண்டு நம்பிக்கையுடன் இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள். நிலைமை இதேபோல தொடருமானால் பொருளாதாரப் பின்னணி இல்லாத இவர்களைப் போன்ற யாரும் எட்டியும் பார்க்க முடியாத நிலையே ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT