சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: சிறுநீர் அடங்காமை உபாதைக்கு தீர்வு தருமா ‘தொட்டால்வாடி’..?  

மரு.சோ.தில்லைவாணன்

மாறிவிட்ட நவீன வாழ்வியலில் அகவை முப்பதிலேயே ஆரோக்கியம் சிதைந்துவிடுகிறது. இதில் அறுபதுக்கு பின்னர் ஆரோக்கியம் இன்னும் கேள்விக்குறி தான். நமது மூதாதையர்கள் அகவை எழுபது, எண்பதுகளிலும் ஆரோக்கியமாக வாழ்ந்ததை கண்ணெதிரே பார்த்தவர்கள் கனாவாக எண்ணி வியக்கும் காலம் வந்துவிட்டது. சரி, இது ஒருபுறமிருக்க, அறுபதுகளில் உண்டாகும் ஆரோக்கிய சீர்கேடுகள் பல. நீரிழிவு, இருதய நோய்கள், மூட்டு வாத நோய்கள் ஆகிய தொற்றா நோய்களை அந்த வரிசையில் அடுக்கிக்கொண்டே போகலாம். 

தொற்றா நோய்களையும் கடந்து இன்னும் பல சிறு சிறு உபாதைகள் அறுபதுக்கு பின்னர் ஒன்றுகூடி உடல் மற்றும் மனதளவில் பல சிரமங்களை உண்டாக்கும். அந்த வகையில் வயதான பெண்களை மட்டுமின்றி, வயதான ஆண்களையும், அதிகம் பாதித்து வாழ்வியலில் கடினமான சூழலை உண்டாக்கும் நோய் நிலைகளுள் சிறுநீர் சார்ந்த உடல் உபாதைகளும் ஒன்று. 

அறுபது வயதைக் கடந்த 9 முதல் 39 சதவீதம் வரையிலான பெண்களுக்கு இந்த அவசர சிறுநீர்கசிவு (urine incontinence) பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதில் சரி பாதி சதவீத பாதிப்பு அறுபதைக் கடக்கும் ஆண்களுக்கும் உண்டு என்கின்றன ஆய்வுகள். அறுபது வயதுக்கு மேல் ஆரோக்கியத்தை தேடி நிற்கும் பலருக்கு இது முக்கிய பிரச்னையாக உள்ளது.

நிம்மதியாக உறக்கமும் இல்லாமல், ஓய்வும் இல்லாமல் பகலில் மட்டுமின்றி இரவிலும் அடிக்கடி சிறுநீரை சிறுக சிறுக கழித்து வெறுத்து போகும் வயதானவர்கள் ஏராளம். சிறுநீர் கழித்து முடித்த சிறிது நேரத்திலேயே திரும்ப சிறுநீர் கழிக்கும் எண்ணம், சிறுநீர் சொட்டு சொட்டாக கழித்தல், தனக்கே தெரியாமல் சிறுநீர் கசிந்து இருத்தல், இதனால் அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று ஆகிய பல குறிகுணங்களை உண்டாக்கி பாதிக்கப்பட்டவர்களை துன்பப்படுத்தி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும்.

அத்தகைய அடக்க முடியாத அவசர சிறுநீர்கசிவுக்கு நீரிழிவு நோயும், சிறுநீரகப்பாதை நோய்களும், காபி அதிகம் குடிக்கும் பழக்கமும் இன்னும் பல நோய்நிலைகளும், உணவு முறைகளும் காரணமாகின்றன. முக்கியமாக அதிக பெண்களைப் பாதிக்க காரணம் அறுபது வயதில் வலுவிழந்த போன சிறுநீர்ப்பையும், பலவீனமான நரம்புகளால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சியும் காரணமாவது குறிப்பிடத்தக்கது.

தொட்டால்சிணுங்கி

மேற்கூறிய காரணங்களால் சிறுநீரை அடக்கமுடியாமல் தவித்து அவதியுறும் வயதான ஆண்களுக்கும்,  மங்கையர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வண்ணம் நரம்பினை வலுப்படுத்தி குறிகுணங்களை குறைக்க பல சித்த மருத்துவ மூலிகைகள் உள்ளன. அதில் வீட்டின் அருகே எளிமையாக கிடைக்கும் ஒரு மூலிகை தான் ‘தொட்டால்வாடி’ எனப்படும் ‘தொட்டால்சிணுங்கி’.

சித்த மருத்துவ கூற்றுப்படி, அவசர சிறுநீர்கசிவு எனும் நோய்நிலையானது வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதம் குற்றம் பாதிப்படைந்து உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. நம் உடலில் எலும்பு, நரம்பு, தசை ஆகியவைகள் வாதத்தின் கூறுகளாக சித்த மருத்துவம் பாவிக்கின்றது. யூரின் இன்கான்டினென்ஸ் (Urine Incontinence) எனும் அவரச சிறுநீர்க்கசிவுக்கு அதிகரித்த வாதத்தை தன்னிலைப்படுத்தி நரம்புகளை வன்மைப்படுத்தும் மூலிகைகள் நற்பலன் தரும்.

தொட்டால்சிணுங்கி எனும் எளிய மூலிகை அறுசுவைகளுள், மூன்று சுவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. வெப்பத்தன்மை உடைய இதன் இலைகள் வாதத்தை குறைத்து உடலுக்கும், நரம்புகளுக்கும் நன்மை தரும். 

தொட்டால்சிணுங்கி இலை மற்றும் வேர் இரண்டையும் மருத்துவ குணத்திற்காக சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. தொட்டால் சிணுங்கியில் நார்-எபிநெப்ரின், டி-பினிடோல் மற்றும் பி-சிட்டோஸ்டிரால், அல்கலாய்டுகள் ஆகியவை உள்ளன. 

தொட்டால்வாடியின் இலையில் முக்கியமாக மருத்துவ குணமளிக்கும் டெர்பீனாய்டுகள், ஃபிளவனாய்டுகள், கிளைகோசைடுகள், அல்கலாய்டுகள், குயினோன்கள், பீனால்கள், டானின்கள், சபோனின்கள் மற்றும் கூமரின்கள் போன்ற தாவர மூலக்கூறுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், நாள்தோறும் 4 கிராம் வரை இதன் இலைகளை உலர்த்தி பொடித்து பாலுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள நீரிழிவு நோயில் சர்க்கரை அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக நீரிழிவு நோயில் உண்டாகும் ‘டயாபெடிக் நியூரோபதி’எனும் நரம்பு கோளாறுகளையும் தடுப்பதாக இருப்பது இதன் சிறப்பு. இதனை 'மேகநீரை தடுக்கும் மேதினியில்' என்ற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம்.

தொட்டால்வாடியின் இலைகளில் இயற்கை நிறமிச்சத்துக்கள் (பிளவனாய்டுகள்) உடையதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் கொல்லியாகவும், வீக்கமுருக்கியாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், வலிப்பு வராமல் தடுப்பதாகவும், மன அழுத்தத்தைப் போக்குவதாகவும், மன பதட்டத்தை நீக்குவதாகவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், புண்களை ஆற்றும் தன்மையும், வயிற்று புழுக்களை கொல்வதாகவும் உள்ளதாக பல்வேறு சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. நரம்புகளை பலமாக்குவது இதன் தனிச்சிறப்பு.

யூரின் இன்கான்டினென்ஸ் எனும் அடக்க முடியாத சிறுநீர் உபாதை நிலையில் தொட்டால்வாடியை நாடுவது என்பது, வாடி போய் நிற்கும் வயதானவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும். பற்ப செந்தூர முறைகளை அடுக்கி சொல்லும் சித்த மருத்துவத்தில், இது மிக எளிய மருத்துவ முறை தான். இருப்பினும் வலிமையான மருத்துவ முறை.

மருத்துவரின் ஆலோசனைக்கு: இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT