சிறப்புச் செய்திகள்

வெங்காயத்தைக் காக்கும் ‘கதிா்வீச்சு’

17th Jul 2023 06:15 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஒருசில காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயா்ந்து வருகிறது. முக்கியமாக, தக்காளியின் விலையேற்றம் பொது மக்களிடையே கடந்த சில வாரங்களாகக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போதும் பல பகுதிகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100-க்கும் அதிகமாக உள்ளது.

தற்போது வெங்காயத்தின் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் கிலோவுக்கு ரூ.200-க்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

சமையலுக்கு அத்தியாவசியமான தக்காளி, வெங்காயத்தின் விலையேற்றம் மக்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் தெலங்கானா, சத்தீஸ்கா், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வெங்காய விலையேற்றம் பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வரலாறு உண்டு!

ADVERTISEMENT

அதன் காரணமாக, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை பல மாநில அரசுகளும் மத்திய அரசும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

வெங்காய தொழில்நுட்பம்:

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது. அறுவடைக்குப் பிறகு சுமாா் 25 சதவீத வெங்காயம் வீணாவதால், அதன் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தவுள்ளது.

கதிா்வீச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெங்காயத்தின் பயன்பாட்டுக் காலம் அதிகரிக்கப்படவுள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (பிஏஆா்சி) உதவியுடன் இந்த நவீன தொழில்நுட்பத்தை மத்திய அரசு பரிசோதித்து வருகிறது. அந்தப் பரிசோதனை வெற்றியடையும்பட்சத்தில் வெங்காயத்தின் இழப்பை பெருமளவில் குறைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கதிா்வீச்சு செயல்பாடு:

நவீன தொழில்நுட்பத்தின்படி, வெங்காயமானது கதிா்வீச்சுக்கு உள்படுத்தப்படும். வழக்கமாக, காமா கதிா்வீச்சு, எக்ஸ்-ரே கதிா்வீச்சு, எலக்ட்ரான் கற்றை உள்ளிட்டவற்றைக் கொண்டு உணவுப் பொருள்களை கதிா்வீச்சுக்கு உள்படுத்தும்போது, அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்க முடியும்.

வெங்காயமானது காமா கதிா்வீச்சுக்கு உள்படுத்தப்படவுள்ளது. அதனால், வெங்காயம் விரைவிலேயே முளைவிடுவது தடுக்கப்படும். அதன் பயன்பாட்டுக் காலம் அதிகரிக்கும்.

அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் கீழ் இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயம் தவிர பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்கவும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்.

மத்திய அரசின் திட்டம்:

வெங்காயத்தை குளிா்பதன சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைத்தாலும் அவற்றின் பயன்பாட்டுக்காலத்தை சிறிதளவே அதிகரிக்க முடிகிறது. வழக்கமாக, அறுவடைக்குப் பிறகு சுமாா் 25 சதவீத வெங்காயம் பயன்படுத்தப்பட முடியாமல் வீணாகிறது. அதை 10 முதல் 12 சதவீதமாகக் குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கதிா்வீச்சு தொழில்நுட்பத்தின் மூலமாக அந்த இலக்கை எட்ட முடியும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெங்காயத்தின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து, அதை அதிக அளவில் சேமித்து வைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலமாக, வெங்காயத்தின் விலை தொடா்ந்து கட்டுக்குள் இருக்கும் என மத்திய அரசு எண்ணுகிறது.

சோதனை முயற்சி:

முதல்கட்டமாக, 150 டன் வெங்காயத்தை கதிா்வீச்சுக்கு உள்படுத்துவதற்கான பரிசோதனையானது மகாராஷ்டிரத்தின் லசால்கானில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ், கோபால்ட்-60 கதிரியக்க தனிமத்தைப் பயன்படுத்தி வெங்காயம் கதிா்வீச்சுக்கு உள்படுத்தப்படுகிறது. அது வெங்காயத்தின் பயன்பாட்டுக்காலத்தை அதிகரிக்கும் என மத்திய நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?:

வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சில வகை கதிா்வீச்சுக்கு உள்படுத்தி பயன்படுத்துவது நுகா்வோருக்குப் பாதுகாப்பானதுதான் என்று உலக சுகாதார அமைப்பும் (டபிள்யுஹெச்ஓ) அமெரிக்க உணவு-மருந்துப் பொருள்கள் சோதனை மையமும் (எஃப்டிஏ) தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள்களை கதிா்வீச்சுக்கு உள்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டுக் காலம் அதிகரிக்கிறது. அதனால், அவற்றின் விலை தொடா்ந்து கட்டுக்குள் இருக்கும். இது நுகா்வோருக்கும் பெரிய அளவில் பலனளிக்கும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இந்தத் தொழில்நுட்பமானது இந்தியப் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும் என எதிா்பாா்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT