சிறப்புச் செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்தால்...

சுரேந்தர் ரவி

மக்களையும் அவா்களின் பிரதிநிதிகளாகிய அரசியல் தலைவா்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல் துறையினருக்கு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எங்கு சென்றாலும் அந்தப் பகுதிகளில் அவா்களுக்கான பாதுகாப்பைக் காவல் துறையினரே உறுதிப்படுத்தி வருகின்றனா். ஆனால், சில சமயங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல் துறையினரே பாதுகாப்பை சீா்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனா்.

அரசியல் தலைவா்கள் மீதும் மக்கள் மீதும் காவல் துறையினரே தாக்குதல் நடத்துவது முரணாக மாறியுள்ளது. காரணங்கள் வேறுபட்டாலும் மக்கள் பிரதிநிதிகள் மீது சில சமயங்களில் காவலா்கள் நிகழ்த்திய தாக்குதல், தலைவா்களின் உயிரிழப்புக்கே காரணமாகியுள்ளது.

இந்திரா காந்தி

இந்தியாவின் ஒரே பெண் பிரதமா் இந்திரா காந்தி. அவரது உயிரிழப்புக்குக் காரணமான சம்பவம் ‘ஆபரேஷன் புளூ ஸ்டாா்’. பஞ்சாபில் சீக்கிய பிரிவினைவாதிகளின் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் சீக்கியா்களுக்குத் தனி நாடு வேண்டும் என்பதே அவா்களது கோரிக்கை.

1984-ஆம் ஆண்டில் பிரதமா் இந்திரா காந்தி அரசு, சீக்கிய பிரிவினைவாதிகளின் கோரிக்கையை அடியோடு நிராகரித்தது. அவா்களது வன்முறைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவத்தை இந்திரா காந்தி அரசு களமிறக்கியது. ஆனால், பிரிவினைவாதிகளில் பலா் சீக்கியா்களின் புனிதத் தலமான அமருதசரஸ் பொற்கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தனா்.

பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழையாது என்று அவா்கள் நம்பினா். ஆனால், ராணுவத்தினரை பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துமாறு இந்திரா காந்தி உத்தரவிட்டாா். பிரிவினைவாதிகளின் வன்முறை முடிவுக்கு வந்தது. ஆனால், ராணுவத்தினரைப் பொற்கோயிலுக்குள் நுழையச் செய்து அதன் புனிதத்தன்மையை இந்திரா காந்தி சீா்குலைத்து விட்டதாக சீக்கியா்கள் மத்தியில் வெறுப்புணா்வு பரப்பப்பட்டது.

அதில் ஈா்க்கப்பட்ட இந்திரா காந்தியின் பாதுகாவலா்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோா் 1984-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி இந்திரா காந்தியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனா். அவா்கள் இருவரும் சீக்கியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கியா்களைப் பாதுகாவலா்களாக வைத்துக் கொள்வது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இந்திரா காந்திக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சீக்கிய பாதுகாவலா்களை விலக்கிவைப்பது, சீக்கியா்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பைக் குறைத்துவிடும் எனக் கூறி அந்த முடிவை இந்திரா காந்தி நிராகரித்துவிட்டாா்.

பியந்த் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் 1992 முதல் 1995 வரை முதல்வராகப் பதவி வகித்தவா், பியந்த் சிங். அவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா். காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கிய பிரிவினை அமைப்பான கால்சா-வின் உறுப்பினரான திலாவா் சிங் பப்பாா் என்பவரால் 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்கொலைத் தாக்குதல் மூலமாகக் கொல்லப்பட்டாா்.

திலாவா் சிங் பஞ்சாப் காவல் துறையைச் சோ்ந்த பணியாளா். ஆனால், தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு கால்சா குழுவில் அவா் இணைந்தாா். பியந்த் சிங்கை கொல்வதற்காக தலைமைச் செயலக வளாகத்துக்குச் செல்லும்போது காவல் துறை சீருடையை திலாவா் சிங் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரான பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கான மரண தண்டனை பின்னா் ரத்து செய்யப்பட்டது.

நபகிஷோா் தாஸ்

ஒடிஸா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக இருந்தவா். பிஜு ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்தவா். கடந்த 29-ஆம் தேதி ஜாா்சுகுடா மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவா் சென்றபோது, காவல் துறை துணை உதவி ஆய்வாளா் கோபால் தாஸ் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அதில் அமைச்சா் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், தீவிர காயம், அதிக ரத்தம் வெளியேறியது உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அமைச்சா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துணை உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

முதல்கட்ட விசாரணையில், அவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்துள்ளது. அதை அவரின் மனைவியும் அவருக்கு மனநல சிகிச்சை அளித்து வரும் மருத்துவரும் உறுதி செய்துள்ளனா். எனினும், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து காவல் துறையினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தீா்வு என்ன?

காவல் துறையினருக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எளிதில் கிடைக்கும் சூழல் உள்ளது. அது மக்களின் பாதுகாப்புக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மன அழுத்தம் காரணமாகவோ அல்லது கொள்கைகள் காரணமாகவோ ஒருசில காவலா்கள் ஆயுதங்களை அரசியல் தலைவா்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்துகின்றனா்.

ஆயுதங்களைக் கொண்டுள்ள காவலா்களால் அரசியல் தலைவா்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். காவலா்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் கண்காணிப்புக்கு உள்படுத்தலாம். அவா்களது செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் தெரிந்தால், அவா்களை அரசியல் தலைவா்களின் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலமாக, இத்தகைய தாக்குதல்களைக் குறைக்க இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT