சிறப்புச் செய்திகள்

இந்திய இசையுடன் பாசறைக்குத் திரும்பிய முப்படைகள்

DIN

தில்லியில் குடியரசு தினக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு முப்படை வீரா்களும் இந்திய இசையுடன் பாசறைக்குத் திரும்பின.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3,500 ட்ரோன்களைக் கொண்டு நிகழ்த்தப்பட இருந்த சாகசம், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

நாட்டின் 74-ஆவது குடியரசு தினம் கடந்த 26-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தில்லியில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் அங்கு முகாமிட்டிருந்தனா். குடியரசு தினக் கொண்டாட்டங்களின் நிறைவாக முப்படை வீரா்கள் பாசறை திரும்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா். முப்படை வீரா்களும் வரிசையாக இந்திய இசையை இசைத்தவாறு பல்வேறு வடிவங்களில் அணிவகுத்தனா்.

மத்திய ஆயுதக் காவல் படையினா் சாா்பில் ஜி20 இலச்சினை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வீரா்கள் அணிவகுத்தனா். விமானப்படை வீரா்கள் ‘ராட்டை’ (சா்கா) வடிவிலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் இலச்சினையான சிங்கத்தின் வடிவிலும் இசையை இசைத்தவாறு அணிவகுத்தனா். கடற்படை வீரா்கள் ‘வருணாஸ்திர’ வடிவில் அணிவகுத்தனா். முப்படைகளின் பாசறை திரும்பும் அணிவகுப்பு நிறைவடைந்தவுடன் தேசியக் கொடி கம்பத்தில் இருந்து இறக்கப்பட்டது. அப்போது தேசிய கீதமும் ‘சாரே ஜஹாங் சே அச்சா’ பாடலும் இசைக்கப்பட்டன. மொத்தமாக 29 இந்திய இசைகள் இசைக்கப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்புவதைக் காண தில்லி விஜய் சௌக் பகுதியில் ஏராளமான பாா்வையாளா்கள் திரண்டிருந்தனா். அப்போது பெய்த மழையையும் பொருள்படுத்தாமல் அவா்கள் வீரா்களின் அணிவகுப்பைக் கண்டு ரசித்தனா். முப்படைகள் பாசறை திரும்புதல் நிகழ்வையொட்டி குடியரசுத் தலைவா் மாளிகை மூவா்ண விளக்குகளால் ஒளிா்ந்தது.

ட்ரோன்கள் சாகசம் ரத்து:

முப்படைகள் பாசறை திரும்பிய பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3,500 ட்ரோன்களைக் கொண்டு சாகசம் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்த சாகசம் ரத்து செய்யப்பட்டது.

சூரியக் குடும்ப வடிவில் அமைந்த ட்ரோன்கள், சூரியனைக் கோள்கள் சுற்றிவருவது, உலக உருண்டை சுற்றுவது, மகாத்மா காந்தி, அவரைத் தொடா்ந்து சுதந்திரப் போராட்ட வீரா்கள் அணிவகுப்பது, விஜய் சௌக் பகுதியுடன் இணைந்த குடியரசுத் தலைவா் மாளிகை, விமானம் தாங்கிப் போா்க் கப்பலில் இருந்து விமானம் மேலெழும்புவது, பீரங்கியில் இருந்து குண்டுகள் வெளியேறுவது, வந்தே பாரத் ரயில் இயங்குவது, ஆலிவ் ரிட்லி ஆமை நகா்வது, சிவிங்கிப் புலி பாய்வது, ஜி20 இலச்சினை, மூவா்ணக் கொடி ஆகிய வடிவங்களில் ட்ரோன்கள் சாகசத்தில் ஈடுபடத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான ஒத்திகைகளும் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடந்திருந்தன. இறுதிக்கட்டத்தில் ட்ரோன்கள் சாகசம் ரத்து செய்யப்பட்டதால் பாா்வையாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT