சிறப்புச் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!

DIN


சென்னை: பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட, அதன் உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும் என்ற வகையில் தமிழக அரசின் குடியிருப்பு உரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு உரிமைச் சட்டம், 1994ல் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த புதிய சட்டப்படி, மாநில அரசு புதிய விதிகளை அறிவிக்கும் நாளிலிருந்து இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, ஒரு குடியிருப்பு வளாகத்தில், நான்குக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்திருந்தால், கட்டாயமாக ஒரு சங்கம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு குடியிருப்புக்கு ஒரு சங்கம் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு வேளை ஒரு குடியிருப்பில் இருக்கும் ஒருவர், பொதுவான கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தத் தவறினால் அதன் மீது இந்த சங்கம் உரிமை எடுத்துக் கொண்டு அவர்கள் இந்த கட்டணங்களை செலுத்தாமல், அந்தக் குடியிருப்பை விற்க முடியாத வகையில் கட்டுப்பாடுகளை உருவாக்க முடியும்.

இந்தச் சட்டம் - தமிழ்நாடு குடியிருப்பு உரிமை சட்டம், 2022 - கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். முத்துசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையை கட்டுமான நிறுவனங்களும், கட்டுமான மேம்பாட்டு நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

பழைய மிகப்பெரிய குடியிருப்புகள் இடிக்கும் பணியில் இதுவரை இருந்த மிகப்பெரிய தடை உடைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

புதிய குடியிருப்புக் கட்டுவதற்காகக் காத்திருக்கும் மிகப் பழைமையான குடியிருப்புகளில் வசித்து வரும் உரிமையாளர்களுக்கும் இதன் மூலம் நிம்மதி கிடைக்கும். உடனடியாக தமிழக அரசு இந்த சட்ட விதிகளை வெளியிட்டு, மிக விரைவாக சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் பல பழைய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் வலியுறுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இந்தச் சட்டத்தின் மூலம், புதிய குடியிருப்புக்கு ஒப்புதல் அளிக்காதவர்கள், கட்டாயமாக வெளியேற்றப்படுவதையும் தவிர்க்கும் வகையில் சட்ட விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குடியிருப்பு வளாகங்கள் கட்டும் பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல பழைய கட்டடங்கள் பார்ப்பவர்களை அச்சமடையச் செய்யும் வகையில் நின்று கொண்டிருக்கின்றன. இந்த சட்டம் விரைவாக நடைமுறைக்கு வந்தால், அந்தக் கட்டடங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது.

பழைய கட்டடங்களை மறுஆக்கம் செய்வதற்கான விதிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சுதந்திரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பழைய மற்றும் புதிய குடியிருப்புகளில் வசிப்பவர்களின் ஒருமித்த கருத்து. பல நகரங்களில் புதிய குடியிருப்புகள் கட்ட நிலங்களே இல்லாத நிலையில், இந்தச் சட்டத்தின் மூலம் கட்டுமான நிறுவனங்களும் புதிய வெளிச்சத்தைப் பெற்றுள்ளன. அதேவேளையில், பழைய கட்டடங்கள் இருந்த இடம் என்பதால், விலையும் வாங்கும் நிலையில்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT