சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: உடல் பருமனைக் குறைக்குமா ‘நத்தை சூரி’..?  

26th Jan 2023 02:32 PM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்,

ADVERTISEMENT

 

தொற்றா நோய்க்கூட்டத்தில் உலக அளவில் முக்கிய இடம் பிடிப்பது உடல் பருமன் தான். இந்த உடல் பருமன் சர்க்கரை வியாதிக்கும், இருதய நோய்க்கும், புற்றுநோய்க்கும் ஆதாரமாக உள்ளது நாம் அறிந்ததே. அதில் முக்கியமாக இருதய நோய்கள் உண்டாகக் காரணம் ரத்த குழாய்களில் படியும் அதிகப்படியான கொழுப்பு தான். இது நாளடைவில் ரத்த குழாயில் அடைப்பை உண்டாக்கி, ரத்தம் சீராக பாய்வதைத் தடுத்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆக ரத்தத்தில் சர்க்கரை அளவைப்போல் கொழுப்பின் அளவை சரியாக பராமரிப்பதும் அவசியமான ஒன்று.

சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று மருத்துவரை அணுகும் போது மருத்துவர்கள் முதலில் வலியுறுத்துவது ‘கூடவே இந்த லிப்பிட் ப்ரொபைல் பரிசோதனையும் பண்ணிடுங்க’ என்பது தான். அதாவது கொலஸ்டிரால், ட்ரைகிளிசிரைட், எச்டிஎல் எனும் நல்ல கொழுப்பும், எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் இதில் அடங்கும்.

இவற்றில் கொலஸ்டிரால், ட்ரைகிளிசிரைட், எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பு ஆகிய மூன்றும் இயல்பாக இருக்க வேண்டிய அளவை விட கூடுதலாகவும், நல்ல கொழுப்பு இயல்பை விட குறைவாகவும் இருப்பது ‘ஹைப்பர்லிபிடிமியா’ எனப்படும். இது இருதய நலனுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்று.

ADVERTISEMENT

சித்த மருத்துவ தத்துவப்படி, ‘ஏழு உடல் தாதுக்கள்’ தான் நம் உடலுக்கு அத்தியாவசியம். மேலும் இவை  உடலில் கூடினாலும், குறைந்தாலும் நோயை உண்டாக்குவதாக உள்ளன. அதனை ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற வள்ளுவனின் எளிமையான வரிகளால் அறியலாம். 

அவையாவன சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, சுக்கிலம் அல்லது சுரோணிதம். இவற்றில் ‘கொழுப்பு’ எனும் நான்காவது உடல் தாது அதிகரிப்பதன் விளைவாக உடல் பருமன் உண்டாகிறது. அதாவது நான்காவது உடல் தாதுவான கொழுப்பில் இன்னும் கூடுதலாக கபம் சேர்ந்து நோயினை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக, கபத்தை குறைத்து, கொழுப்பினைக் குறைக்கும் மூலிகைப் பொருட்கள் உடல் பருமனை குறைக்கும்.

பொதுவாக கொழுப்பினை குறைக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுப்பதனால் பல்வேறு உடல் உபாதைகள் பின் விளைவுகளாக உண்டாவதாக நவீன அறிவியலே எச்சரிக்கின்றது. அதில் முக்கியமாக இருப்பது தசை வலி தான். அதுமட்டுமல்லாது ஏற்கனவே கல்லீரல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், ரத்தத்தில் கல்லீரல் சார்ந்த நொதிகள் அதிகரித்த நபர்களுக்கும், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் ஏற்புடையதும் அல்ல. குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தானே எல்லா பிரச்சனையும் வருகிறது. அந்த பிரச்னைகளைத் தடுத்து, கல்லீரலையும் பாதுகாத்துக்கொள்ள எளிய மூலிகை மருந்து இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு வெகுமதி தான். அந்த வகையில் பயன்தரக்கூடியது ‘குழிமீட்டான்’.

கொழுப்பின் அளவைக் குறைத்து, இருதயம் காத்து ஆரோக்கியத்தை நீட்டும் வகையில் பயன் தர பல சித்த மருத்துவ மூலிகைகள் உள்ளன. அதில் முக்கிய இடத்தில் இருக்கும் எளிய மூலிகை ‘குழிமீட்டான்’ எனும் ‘நத்தைசூரி’. அதன் பெயர்க்காரணத்தால் அறியப்படுவது என்னவெனில், அதிகரித்த கொழுப்பாலும், அதிகரித்த கபத்தாலும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களையும் மீட்டுக் காக்கும் தன்மை உடையதாக தெரிகிறது.

நத்தை சூரி தாவரத்தில் டானின்கள், ஃபிளாவனாய்டுகள், பீனால்கள், டெர்பீனாய்டுகள், அல்கலாய்டுகள், சபோனின்கள், ஸ்டீராய்டுகள் மற்றும் கார்டியாக் கிளைகோசைடுகள் ஆகிய பல மருத்துவ குணமிக்க வேதிப்பொருட்கள் உள்ளன. மேலும் முக்கிய உயிரி வேதிக்கூறுகளில் β-சிட்டோஸ்டெரால், உர்சோலிக் அமிலம், குர்செடின், ருடின், கேம்ப்ஃபெரால், டானிக் அமிலம் மற்றும் எபிகல்லோகேடசின் ஆகியவையும் அதில் அடங்கும்.

நத்தை சூரி மூலிகையானது மருத்துவக் குணமுள்ள பல்வேறு வேதிப்பொருள்களை கொண்டுள்ளதால் வலி நிவாரணியாகவும், பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும், புற்றுநோய் தடுக்கும் தன்மையும், இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மையும், உயர் இரத்த அழுத்தத்தை தடுப்பதாகவும், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் ஆகிய உள்ளுறுப்புகளை பாதுகாப்பதாகவும், மன பதட்டத்தை குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைத்து உடல் பருமனை குறைப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘எத்தை சொன்னாலும் கேட்கும் நத்தைசூரி’ என்பது வழக்கு மொழி. அந்த வகையில் உடலில் நோய்க்களுக்கு காரணமாகும் முக்குற்றத்தில் கபத்தை குறைத்து நோயில் இருந்து காத்து ஆரோக்கியத்தை தரக்கூடியது. நத்தைசூரி மூலிகையில் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணமுடையதாக உள்ளது. இருப்பினும், அதன் விதை கொழுப்பை குறைத்து ஆயுளை நீட்டக்கூடியது. இதனை லேசாக வறுத்து பொடித்து காபி பொடிக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதன் விதைகளுக்கு உடல் உரமாக்கி தன்மையும், ஆண்மைப்பெருக்கி தன்மையும் உள்ளது கூடுதல் சிறப்பு. 

உடல் எடையைக் குறைக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து, மருந்து மாத்திரைகளை உண்டு சலித்துப்போன பலரும், நத்தைசூரியை பொடித்து பாலில் கலந்து தொடர்ந்து எடுத்துக்கொள்ள கபத்தினைக் குறைக்கும். இந்த ஐயம் என்ற கபம் தான் உயிர்கொல்லி என்கிறது சித்த மருத்துவம். இதனை 'பித்தம் அடங்கிடின் பேசாதே போய்விடு, எத்திய ஐயம்(கபம்) எழுந்திடின் கிட்டாதே' என்ற திருமூலர் திருமந்திர வரிகளால் அறியலாம்.

இரத்தத்தில் அதிகரித்த கொழுப்பின் அளவைக் குறைத்து உடல் பருமனை குறைக்க விரும்பும் பலரும், அவசியம் பயன்படுத்த வேண்டிய, சித்த மருத்துவ மூலிகை நத்தைசூரித் தான். பயன்படுத்தி பலன் அடைவோம். நம் முன்னோர்கள் நமக்களித்த நன்கொடையில் நலம் காண்போம்.

மருத்துவரின் ஆலோசனைக்கு... இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT