சிறப்புச் செய்திகள்

நெரிசல் மிகுந்த அயனாவரத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஆபத்தில் 207 கட்டடங்கள்

18th Jan 2023 01:22 PM

ADVERTISEMENT

 

அயனாவரம் பகுதியில் மெட்ரோ சுரங்கப் பணிகள் இந்த மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் உள்ள மூன்றாவது வழித்தடமான மாதாவரம் - சிப்காட் இடையேயான மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள இந்த வழிதடத்தில், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்பட 50 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதில், 20 ரயில் நிலையங்கள் பாலத்திலும், 30 ரயில் நிலையங்கள் சுரங்கத்திலும் அமைக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கொண்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள அயனாவரம் பகுதியில் இந்த மாத இறுதியில் மேலும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கொண்டு மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை மார்ச் இறுதியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாகவும் ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாவரம் - கெல்லிஸ் இடையே 9 கி.மீ. தொலைவுக்கு இந்த 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை கொண்டு அடுத்த 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள அயனாவரம் சுற்றுப்பகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் குறித்து ஒப்பந்த நிறுவனமான டாடாவின் அதிகாரி ராகுல் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

“மாதாவரம் - கெல்லிஸ் இடையேயான பகுதி மண் மற்றும் கடினமான பாறைகள் நிரம்பியது. இந்த பகுதிகளில் பணிகளை விரைந்து முடிப்பதற்காக பாறைகளை வெட்டக் கூடிய பிரத்யேக இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு 9 முதல் 11 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படும்.

இதையும் படிக்க | 'செத்துப்போன' சென்னை ஆறுகள்!

மக்கள் அடர்த்தியான பகுதிகளில் சுரங்கம் தோண்டுவது பெரும் சவாலான பணியாக அமைந்துள்ளது. 30 மீட்டருக்கு கீழ் சுரங்கம் தோண்டும் போது அப்பகுதிகளில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் பழைய கட்டடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து சுரங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திட்டத்தின் அறிக்கைபடி, மாதாவரம் மற்றும் கெல்லிஸ் இடையே சுமார் 207 குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டடங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

வேகமாகவும், பாதுகாப்பாகவும் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக நாட்டிலேயே முதல்முறையாக ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4 அதிநவீன இயந்திரங்கள் உபயோகிக்கப்படவுள்ளன.

சுரங்கம் தோண்டும் பணிகள் தொடர்ந்து தானியங்கி இயந்திரங்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் என்பதால் மீட்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT