சிறப்புச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியிடம் என்ன எதிர்பார்க்கிறது பாஜக?

கி.ராம்குமார்

Erode eastஅதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் கைப்பற்றுவதில் முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி அத்தொகுதிக்கு ஒரு மாத காலத்திற்குள்ளாகவே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. 

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப். 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிப். 7-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், பிப். 8-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும் நடைபெறும்.

ஆளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தொடங்கி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது வரை வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது ஆளும் தரப்பு. ஆனால் இதற்கு எதிர்வரிசையில் இருக்கும் கட்சிகளிடையோ நிலவும் குழப்பமான, தனித்தியங்கும் தன்மையால் பூசல்கள் தொடர்ந்து வருகின்றன. 

தேமுதிக, நாம் தமிழர், அமமுக கட்சிகளைத் தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது திமுக கூட்டணிக்கு எதிரான ஒருமித்த ஓட்டுகளைப் பெறுவதில் தொய்வை ஏற்படுத்தும் சூழல் உருவாக்கியுள்ளது. 

பாஜக இந்த விவகாரத்தில் இதுவரை நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் பொதுக்குழு கூடி வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் எனவும், இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை இறுதி செய்யும்வரை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை என கருத வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அணியினரை இணைத்துக் கொண்டு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எடப்பாடி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடக்கம் முதல் பாஜகவுக்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே சென்று தேர்தல் பணிமனை பேனர்களில் பாஜக கொடியையும், தலைவர்களின் படங்களையும் சேர்க்காமல் அதிர்ச்சி கொடுத்தார். 

இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தில்லி சென்று திரும்பிய அண்ணாமலை முன்னதாக இன்று காலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை தனித்தனியாக சந்தித்துப் பேசினார். கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி இருவரும் (ஓபிஎஸ், இபிஎஸ்) இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், ஒருங்கிணைந்த அதிமுகவையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எதிர்ப்பையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து பச்சைக் கொடியையும் எதிர்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்கிறது பாஜக. 

அதிமுகவின் பொன்னையன், “பாஜகவின் நட்பு கட்சிகள் எப்படி தங்களது ஆட்சியை இழந்தனர் என்பது தெரியும். அந்த ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜகவினர் பிடித்தனர் என்பது எங்களுக்கு தெரியும். எனவே எச்சரிக்கையாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகப் பார்க்கப்படுகிறது. 

தவிர, உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக தனித்து போட்டியிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது என்பதில் பொருள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முட்டுக்கட்டையாக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுடன் இணங்கிப் போவாரா அல்லது தனிச்சின்னத்தில் தேர்தலை சந்திப்பாரா என்பது முன்னணியில் உள்ள கேள்வியாக உள்ளது. 

சசிகலா தொடங்கி பாஜக வரை ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் இணைந்து செயல்பட வேண்டும் என தூதுவிடும் நிலையில் பாஜகவிற்கு பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 

இருவரது கையொப்பமுமின்றி இரட்டை இலை சின்னத்தைப் பெற முடியாது என்கிற நிலையில் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் எடுக்கும் முடிவுகள் அதிமுக இணையப் போகிறதா அல்லது தனித்தனி வழிகளில் பயணிக்கப் போகிறதா என்பதற்கு விடையாக அமையும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT