சிறப்புச் செய்திகள்

எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?

எம்.பாண்டியராஜன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.

ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.

இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.

இதையும் படிக்க.. ஈரோடு அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மோடி, பாஜக தலைவர்கள் படமின்றி பேனர்!

அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.

உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். 

ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.

இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல்,  எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.

இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.

பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.

இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த  பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு  மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.

1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.

2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.

3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.

ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.

இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.

இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான  வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT