சிறப்புச் செய்திகள்

உங்கள் வங்கிக் கணக்கை முடிக்கப் போகிறீர்களா? இந்த 5 விஷயங்களை மறந்துடாதீங்க..!

29th Sep 2022 01:46 PM

ADVERTISEMENT

இன்றைய சூழ்நிலையில் தனிப்பட்ட மற்றும் வேலை காரணமாக ஒரே வங்கியில் இரண்டு கணக்குகள் அல்லது வெவ்வேறு வங்கிகளில் கணக்குகள் என ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருப்போர் அதிகம். 

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளினால் நன்மைகள் பல இருந்தாலும் நடுத்தர மக்களுக்கு அவற்றை நிர்வகிப்பது இன்று பெரும் சவால்தான். ஏனெனில் வங்கிகள், பணப்பரிவர்த்தனை விதிமுறைகளில் தொடர்ந்து மாற்றங்களை கொண்டு வருகின்றன.

வட்டி விகிதம், குறைந்தபட்ச இருப்புத்தொகை, அபராதம் உள்ளிட்டவை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், பயன்படுத்தாத வங்கிக் கணக்குகளை சிலர் முடிக்க விரும்புகிறார்கள். 

குறைந்தபட்ச இருப்புத் தொகை பின்பற்றவில்லை எனில் அபராதம், இதர சில கட்டணங்களைத் தவிர்க்க பயன்படுத்தாத, தேவையில்லாத வங்கிக்கணக்குகளை 'க்ளோஸ்' செய்வதே நல்லது. 

ADVERTISEMENT

நேரடியாக உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்றோ அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமோ வங்கிக்கணக்கை முடித்துவைக்கலாம். 

வங்கிக் கணக்கை பாதுகாப்பாக மூட சில வழிமுறைகள் 

1. இருப்புத் தொகை, மாத அறிக்கை 

நீங்கள் முடித்துவைக்க விரும்பும் உங்கள் சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்ப்பது முக்கியம். இருப்புத் தொகையை சரிபார்ப்பதுடன் குறைந்தது கடந்த 2-3 ஆண்டுகளில் அந்த கணக்கில் செய்த பணப்பரிவர்த்தனை விவரங்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பரிவர்த்தனைகளையும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். இது எதிர்காலத்தில் உங்கள் செலவினங்களை சரிபார்க்கவும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் உதவும். 

2. செலுத்தப்படாத பாக்கிகள், சேவைக் கட்டணங்கள் 

உங்கள் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை போதுமான அளவு இல்லையென்றாலோ, இதர சேவைக் கட்டணங்களை செலுத்தாமல் இருந்தாலோ அபராதம் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்து, இருப்புத் தொகை எதிர்மறை எண்ணில் இருந்தால் உங்கள் வங்கிக் கணக்கை 'க்ளோஸ்' செய்ய முடியாது. எனவே, வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை முறையாக செலுத்திவிட்டு கணக்கை முடித்துவையுங்கள். இல்லையெனில் அது உங்களின் பணப்பரிவர்த்தனை தொடர்பான சிபில் ஸ்கோரை(CIBIL score) பாதிக்கும். 

இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..

3. இஎம்ஐ கணக்கு 

இஎம்ஐ முறையில் கடன் அல்லது இதரக் கட்டணங்களைச் செலுத்த இந்த வங்கிக் கணக்கை பல்வேறு செயலிகள் அல்லது கிரெடிட் கார்டுகளில் இணைத்திருக்கலாம். 

எனவே, அவற்றை சரிபார்த்து 'தானாக பணம் எடுத்துக்கொள்ளக்கூடிய' 'automatic debit' முறையில் இருந்து மாற்றிவிட வேண்டும். இல்லையெனில் அதற்குப் பதிலாக நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தவுள்ள வங்கிக் கணக்கை இணைக்கலாம். 

4. கணக்கை முடிப்பதற்கு கட்டணம்

பொதுவாக வங்கிகள், சேமிப்புக் கணக்கு துவங்கிய ஓராண்டுக்குள் அதை 'க்ளோஸ்' செய்ய கட்டணம் வசூலிக்கின்றன. எனவே, ஓராண்டுக்குள் என்றால் கண்டிப்பாக வங்கிக் கணக்கை முடித்துவைப்பதற்கு நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும். இந்தக் கட்டணத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் நீங்கள் ஓராண்டு முடியும்வரை காத்திருக்க வேண்டும். 

5. அரசு சார்ந்த சேவைகள்

சேவையை நிறுத்த விரும்பும் வங்கிக் கணக்கை, வருங்கால வைப்பு நிதி, வருமானவரிக் கணக்கு, காப்பீடு, அரசுத் திட்டங்களின் மூலம் வரும் நிதி உள்ளிட்ட அரசு சார்ந்த சேவைகளில் இணைத்திருந்தால், அதை முறையாக நீக்கிவிட்டு பதிலாக, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த உள்ள வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். அரசு சார்ந்த அனைத்து சேவைகளிலும் இதனை மாற்றியதை  உறுதிசெய்த பின்னரே வங்கிக் கணக்கை 'க்ளோஸ்' செய்ய வேண்டும். இது அரசு சேவைகளைத் நீங்கள் சிக்கலின்றித் தொடர உதவும். 

இதையும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்? அதிகம் குடித்தால் என்னவாகும்?

ADVERTISEMENT
ADVERTISEMENT