சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘இஞ்சி’ குடல்வாழ் கிருமிகளைக் காக்குமா?  

மரு.சோ.தில்லைவாணன்

‘மாஸ்டர் ஒரு ஸ்பெஷல் இஞ்சி டீ போடுங்க’ என்று தேநீர் கடையில் கேட்பவர் நீங்கள் என்றால் (அல்லது) வீட்டில் ஜின்ஜர் (இஞ்சி) டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நீங்கள் என்றால் நிச்சயம் இந்த கட்டுரையை வாசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நாம் உண்ணும் உணவின் பயன் தெரிந்தால் தான் நாம் அதனை பயன்படுத்துவது அதிகரிக்கும். இல்லாவிட்டால் துரித உணவுகள் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து உடலை துன்புறுத்தும். 

தேநீர்(டீ)-க்கு அடிமையாகாத நாக்கே இல்லை எனலாம். உணவு இல்லாமல் கூட சில சமயம் இருப்பதுண்டு. ஆனால் டீ இல்லாமல் யாரும் அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாது. நம் உணவு முறையோடும், வாழ்வியலோடும் பழகிவிட்ட ஒரு பானம் தேநீர் (டீ) தான். அதிலும் அவரவர் ருசிக்கேற்ப தனித்தனி வகையான தேநீர் வகைகள். சிலருக்கு ஏலக்காய் டீ, சிலருக்கு இஞ்சி டீ, சிலருக்கு மசாலா டீ, சிலருக்கு கிரீன் டீ என்று அவரவர் உடல் நலக்கேடுகளுக்கேற்ப தேநீர் வகைகள் மாறுபடும். இருப்பினும் பலரும் அதிகம் பயன்படுத்தும் தேநீர் வகை ‘இஞ்சி டீ’ தான். 

பருவ நிலை மாறும்போதும், சளி, இருமல், தொண்டைக்கம்மல் ஏற்படும்போதும் சுடச்சுட ஒரு இஞ்சி டீ குடித்தால் பலருக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும். அத்துடன் தொண்டையை பற்றிய கபமும், மூக்கு நீர் ஒழுகல், உடல் வலி, உடல் சோர்வு ஆகிய சீசனல் வைரஸ் இவற்றால் உண்டாகும் குறிகுணங்களும் நீங்கி விடும். அந்தயளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்த ஆன்டி பையாடிக் தன்மையுடைய மூலிகைப் பொருளாக உள்ளது நாம் பயன்படுத்தும் இஞ்சி.

இஞ்சி-க்கு உள்ள மருத்துவ குணங்கள் பல. இஞ்சியினால் தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, உடல் வலி, இருமல், மூட்டு வலி, செரியாமை, வயிறு உப்பிசம் ஆகிய எண்ணற்ற நோய்நிலைகளைப் போக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. அதனைக் கடந்து இன்றைய மருத்துவ அறிவியல் ஆச்சரியப்படும் வண்ணம் இன்னும் பல நோய் நிலைகளை தடுக்கும் தன்மையும் இதற்குண்டு. அவை எல்லாம் ஒருபுறமிருக்க, நலம் பயக்கும் குடல்வாழ் கிருமிகளுக்கும், இஞ்சிக்கும் என்ன தொடர்பு? அதனால் என்ன நன்மை? என்று தெரிந்துகொள்வது அவசியம்.

ஒவ்வொருவர் குடலிலும் கோடிக்கணக்கான கிருமிகள் வாழ்கின்றன. அவற்றில் 10 சதவீதம் கிருமிகள் மட்டுமே நம் குடலை சார்ந்தவை. மீதமுள்ள 90 சதவீதம் கிருமிகள் வெளியுலகில் இருந்து நம் குடலை அடைபவை. அவற்றில் பலவகைப்பட்ட கிருமிகள் நம் குடலுக்கு நன்மைபயப்பதாக உள்ளதை இன்றைய அறிவியல் பல்வேறு ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்துள்ளது. அத்தகைய கிருமிகளில் நடக்கும் ஆராய்ச்சிகளும் ஏராளம்.

இந்த கிருமிகள் நம் உடலில் சகவாழ்வு புரிந்து, அதாவது நம் உடலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டப்படி நம் குடலில் சுமூகமாக வாழ்ந்து கொண்டு, நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடிய வகையில் உள்ளன. சித்த மருத்துவம் இதற்குத் தான், ‘மூத்த தயிர் உண்போம்’ என்கிறது. பிணிகள் அணுகாமல் காக்க தேரையர் சித்தர் கூறிய வரிகள் இவை. 

ப்ரோபையாட்டிக் என்ற குடல் வாழ் நன்மைப் பயக்கும் கிருமிகளைக் கொண்ட தயிரை உணவில் சேர்க்க வலியுறுத்துகிறது சித்த மருத்துவம். இன்று அறிவியலில் இது தனிபிரிவாகி வளர்ந்து வருவது சிறப்பு. ஆனால், நாம் நலக்கேட்டின் போது, மருத்துவர் ஆலோசனை இன்றி, அதிகப்படியாக பயன்படுத்தும் ஆன்டிபையாட்டிக் மருந்துகள் அதிகம் சிதைப்பது இந்த குடல்வாழ்க்கிருமிகளைத் தான். 

நாம் ஒரு வாரம் எடுக்கும் ஆன்டிபையாட்டிக் எனும் கிருமிக்கொல்லி மருந்துகளால். நம் குடலில் நன்மை பயக்கும் கிருமிகளும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் இழப்பை சீர்செய்ய, மீண்டும் குடலை பழைய நிலைக்கு திருப்ப, கிட்டத்தட்ட ஓராண்டுகள் கூட ஆகலாம் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

அப்படி என்ன நன்மை இருக்கு நம் குடலில் வாழும் நன்மை பயக்கும் கிருமிகளால்? என்று பலருக்கும் யோசிக்க தோன்றும். இந்த நன்மை பயக்கும் கிருமிகள் நம் உடலில் பல நொதிகளையும், நரம்பு மண்டலத்திற்கு அவசியமான சில ஹார்மோன்களையும் கூட உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பான ஒன்று.
 
இன்னும் சொல்லப்போனால் இன்று உலகையே அச்சுறுத்தும் சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், இன்சுலின் தடை, புற்றுநோய்க்கு காரணமாகும் நாட்பட்ட அழற்சி போன்ற பல தொற்றா நோய்களுக்கும், இந்த குடல்வாழ் கிருமிகளுக்கும் கூட நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்த நம் சித்த மருத்துவ முன்னோர்கள் ‘ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து’ எடுக்க வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமல்லாமல், அதிக சர்க்கரை சத்துள்ள உணவும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவும் கூட இந்த குடல் வாழ் கிருமிகளை பாதிக்கக்கூடியது. ஆக, பல்வேறு நோய்களில் இருந்து தடுத்துக்கொள்ள இந்த நன்மை பயக்கும் குடல் கிருமிகளை பாதுகாப்பது அவசியமாகின்றது. அதற்கு பயன்படும் முக்கிய மூலிகையாக இருப்பது இந்த இஞ்சி தான். அதுமல்லாது மஞ்சள், லவங்கப்பட்டை, வெந்தயம், கிராம்பு போன்ற பல எளிய மூலிகைப் பொருட்கள் கூட அந்த வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

'சோகோல்' என்ற இஞ்சியில் உள்ள வேதிப்பொருள் குடல்வாழ் கிருமிகளை காக்கும் தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இன்னும் பல்வேறு மூலிகையில் உள்ள பாலிபீனால் போன்ற வேதிப்பொருள்கள் குடல் கிருமிகளுக்கு நன்மை செய்யும் நண்பர்களாக உள்ளன.

இஞ்சி நம் குடலில் நன்மை பயக்கும் லாக்டோபாசில்லஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் ஆகிய கிருமி இனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். மேலும், இது அடிப்படையில் ஒரு பிரீ-பயாடிக் போல செயல்படுகிறது. அதாவது நன்மை பயக்கும் குடல் கிருமிகள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மொத்தத்தில் நோய்கள் அண்டாமல் காத்துக்கொள்ள இன்றைய நவீன மருத்துவம் கூறும் மாற்று வழி குடலை பராமரித்துக் கொள்வது. இந்த கருத்தையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கூறியுள்ளது வியக்கத்தக்கது. 

எனவே, தேநீரில் மட்டுமல்லாது உணவில் கூட அதிகம் இஞ்சி வேரை சேர்த்துக் கொள்வது பல நோய்களின் ஆதார வேரை அடியோடு நீக்கும். குடல்வாழ் கிருமிகளுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும். இது தொற்றா நோய்கள் இல்லாத சமூகத்திற்கு வழிவகுக்கும் எளிய பாரம்பரிய பானம். பயன்படுத்தி பயனடைவோம்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT