சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: டீலோமரை நீட்டி வாழ்நாளை அதிகரிக்குமா ‘அமுக்கரா கிழங்கு’...?

மரு.சோ.தில்லைவாணன்


தலைப்பை பார்த்ததும் அதென்ன டீலோமெர்? வாழ்நாளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? என்ற ஐயப்பாடு பலருக்கும் ஏற்படக்கூடும். அதனைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதும் இன்றைய நாளில் அவசியம். நவீன வாழ்வியல் தான், வாழ்நாள் குறைவுக்கும், ஆரோக்கிய குறைவுக்கும் காரணம் என்பதை வாய்மொழியாக ஏற்றுக்கொள்வது பலரும் அறிந்ததே.

“அந்த காலத்துல இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள், நல்லதொரு வாழ்வியலை கடைப்பிடித்தார்கள். அதனால் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள்” என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, நிதர்சனமான உண்மையும் கூட தான். அதை இன்றைய அறிவியலும் நிரூபணம் செய்து ஏற்றுக்கொள்கிறது.

இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறையால் உண்டாவது மன அழுத்தம் மட்டுமல்ல, அந்த மன அழுத்தத்தால் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஏற்படக்கூடிய அழுத்தமும் அதிகம். இவை நம் உடலில் செல்களுக்குள் உள்ள மரபணுவின் மூடிவரை சென்று தாக்கி நோய்களுக்கு நம்மை ஆட்படுத்துவதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து ஆரோக்கியமான வாழ்வியலை கடைபிடித்தனர் நம் முன்னோர்கள்.

அத்தகைய மரபணுவின் தொப்பி போன்ற மூடி தான் டீலோமெர். இந்த மூடிப்பகுதியான டீலோமெர் வளர்ச்சி குறுகினால் ஆயுள்காலமும் குறையும் என்கிறது இன்றைய நவீன அறிவியல். 

இதன் வளர்ச்சி அதிகரிப்பது என்பது பல்வேறு தொற்றா நோய்களை தடுத்தால் ஆயுள்காலம் கூடும். இது தான் மரபணு மூடி டீலோமெருக்கும், வாழ்நாளுக்கும் உள்ள தொடர்பு. வயது மூப்பு என்பதற்கு டீலோமெர் தேய்மானத்தின் அடையாளம் என்கிறது அறிவியல்.

இத்தகைய டீலோமெரை காத்து ஆயுள்காலத்தை கூட்ட வேண்டியது இன்றைய நவீன வாழ்வியலில் அவசியமான ஒன்றாகிறது. ஏனெனில் மன அழுத்தமும் அதோடு தூக்கமில்லாமல், உடல் பயிற்சி இல்லாமல் அரக்க பறக்க ஓடும் வாழ்வியல் நெறிமுறையும், பசியைத் தாண்டி ருசியை அதிகம் தூண்டும் செயற்கை வேதிப்பொருள்கள் அடங்கிய உணவு வகைகளும், அதனால் உண்டாகும் உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும், ஆயுள்காலத்தை குறைக்கும் இன்னும் பல நோய்களுக்கும் காரணம் என்று அறிவியல் கூறும் பதில், பாதிப்படைந்த மரபணுவின்  டீலோமெர் பகுதி தான்.

புகைபிடித்தல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமில்லாத உணவு வகைகள் உள்கொள்வது போன்ற நவீன வாழ்வியல் முறைக் காரணிகள் டீலோமெர் சுருக்கத்தின் வேகத்தை அதிகரிக்கக் கூடும். மேலும் இது நோய்நிலைக்கும், இளம் வயது மரணத்திற்கும் வழிவகுக்கும் என்கிறது நவீன அறிவியல். 

கரோனரி இதய நோய், இதய செயலிழப்பு, நீரிழிவு, அதிகரித்த புற்றுநோய் ஆபத்து உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கும், வயது மூப்பு தொடர்பான உடல்நல சீர்கேட்டிற்கும் மரபணுவுடன் சேர்ந்த டீலோமெர் சுருக்கம் தொடர்புடையது என்றும் கூறுகிறது அறிவியல்.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த டீலோமேரை காத்து ஆயுள்காலத்தை அதிகரிக்க செய்யும் எளிய மூலிகைகளுள் ஒன்று தான் ‘அமுக்கரா கிழங்கு’. இந்த அமுக்கரா கிழங்கினை காய சித்தி அளிக்கும் மூலிகை மருந்தாக சித்த மருத்துவம் கூறுகின்றது. 

காய சித்தி என்பது உடலினை அழியாமல் காக்கக் கூடியது. ‘இந்தியன் ஜின்செங்’ என்ற பெயர் பெற்ற இந்த மூலிகை பல ஆயிரம் ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமுக்கரா கிழங்கு எனும் சித்த மருத்துவ மூலிகை பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமுக்கராவில் உள்ள ‘வித்தனோசைடு’ என்ற மூலக்கூறு  ஜின்செங்-கில் உள்ள முக்கிய செயல்படும் மூலக்கூறான ‘ஜின்செனோசைடு’  போன்று மருத்துவகுணம் அளிப்பதால் அமுக்கரா ‘இந்தியன் ஜின்செங்’ என்ற பெயர் பெற்றது. 

உலக அரங்கில் அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ள மூலிகை என்பது இதன் சிறப்பு. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, கர்ப்பிணி பெண்கள், பல்வேறு நோய்நிலையில் சிக்குண்டு அவதிப்படுவோர்கள் என அனைவருக்கும் பயன்படக்கூடிய மூலிகை இது. அமுக்கரா கிழங்கு அனைவரும் பயன்படுத்த ஏற்புடையதாக உள்ளது என்பது இயற்கை நமக்கு அளித்த கொடை தான்.

அமுக்கரா கிழங்கில் உள்ள விதாஃபெரின் போன்ற ஸ்டீராய்டால் லாக்டோன்களும், சப்போனின்களும் அதன் மருத்துவ செய்கைக்கு காரணமாக உள்ளது. இதில் வித்தாபெரின்-ஏ மற்றும் பி மிக முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் வித்தாபெரின்-ஏ என்ற மூலக்கூறு அமுக்கராவின் டீலோமெர் நீட்சிக்கு உதவுதாகவும், இதன் மூலம் காய சித்தியாக, ஆயுள்காலத்தை அதிகரிப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. புற்றுநோய் சிகிச்சையிலும் இதுவே குணம் தருவதாக உள்ளது.

அமுக்கரா கிழங்கு எனும் அசுவகந்தா மூலிகையை பயன்படுத்த மூட்டு வலி, உடல் வலி, நரம்பு சார்ந்த வலி, தூக்கமின்மை, கட்டிகள், மன பதட்டம், ஆண்மைக்குறைவு, மாதவிடாய் கோளாறுகள், தொற்றா நோய்க்கூட்டங்கள் போன்ற பல்வேறு நோய்க்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதைக் கடந்து, ஆயுளை அதிகரிக்கும் மூலிகையாக பயன்படுத்த தொடங்கினால், எட்ட கனியாக இருக்கும் ஆரோக்கியத்தை எளிதில் பறிக்கலாம். சித்த மருத்துவம் இத்தகைய நோயில்லா நெறியைத் தான் வலியுறுத்துகிறது.

உடல் சோர்வு ,மன சோர்வு என்பது மட்டுமின்றி அமுக்கரா கிழங்கு மரபணுவின் சோர்வையும், அதன் மூடிப் பகுதியில் உள்ள டீலோமெர் சோர்வையும் குறைத்து அதன் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. ஆகவே அமுக்கரா கிழங்கு தானே என்று எளிமையாக எண்ணாமல், மரபணு வரை சென்று பாதுகாத்து தொற்றா நோய்களை தடுக்கும் தன்மை உடைய மகத்துவம் உள்ள மூலிகையாக கருதி, அனைவரும் முறையாக பயன்படுத்த தொடங்கினால் வயது மூப்பின்றி எப்போதும் இளமையாக வாழ முடியும். நோயில்லா சமூகத்தை உருவாக்கிட முடியும். 

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT