சிறப்புச் செய்திகள்

அகவிலைப்படி உயர்வு காத்திருப்பில் 86,000 போக்குவரத்து ஓய்வூதியர்கள்

DIN

தேர்தல் வாக்குறுதி, ஆட்சி மாற்றம், நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றாலும் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு வந்து சேரவில்லையே என்று போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சுமார் 86 ஆயிரம் பேர் 7 ஆண்டுகளாக ஆதங்கத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருங்கால வைப்பு நிதிச் சட்டம் பொருந்தாது எனக் கூறி, கடந்த 1998ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. 

இதனால் 1998-க்கு முன்பு வரை வருங்கால வைப்பு நிதித் திட்ட ஓய்வூதியத்தில் இருந்த அனைவரும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஓய்வூதிய நம்பகம் என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஓய்வூதியத் திட்டத்தைச் சீரமைக்க கடந்த 2008இல் சீரமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நம்பகத்துக்கு வருமான வரிச் சட்டத்திலிருந்து விலக்கும் பெறப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளாலும், சீரமைப்புக் குழுவாலும் தங்களுக்கு பலன்கள் வந்து சேரும் எனக் காத்திருந்த ஓய்வூதியர்களுக்கு வேதனையே பரிசாகக் கிடைத்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு என தனி நிதிக் கணக்குத் தொடங்கி ஓய்வூதியப் பலன்களை வழங்கலாம்; ஓய்வூதிய நம்பகத் திட்டம் தேவையில்லை; அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியத்தை தமிழக அரசே முழுப் பொறுப்பேற்றுச் செயல்படுத்த வேண்டும் என சீரமைப்புக் குழு பரிந்துரைகளை வழங்கியது.

எனினும், அரசு இவற்றைப் பரிசீலிக்கவில்லை. இதனால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தங்களது பணப்பலன்கள் பெறுவதில் பெரிதும் சிக்கலைச் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வே வழங்கப்படவில்லை. 

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதெல்லாம் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களும் அகவிலைப்படி உயர்வு பெறத் தகுதி பெற்றவர்கள் என்பது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய நம்பக விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊதிய ஒப்பந்த ஷரத்துகளிலும் இது வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் பயனில்லை. அதிமுக ஆட்சி மீது குறைகூறி, போராட்டக் காலத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குத் துணையாக இருந்த திமுக கூட்டணிக் கட்சிகளும் மௌனமாகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஓய்வூதியர்கள். 

மேலும், தேர்தல் பிரசாரத்திலும், வாக்குறுதியிலும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பணப்பலன்கள் முழுமையாகப் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 19 மாதங்களாகியும் பாராமுகமாகவே உள்ளது என்கின்றனர்.

வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியது ஓய்வூதியர்கள் தரப்பு. சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஓய்வூதியர்கள் தரப்பில் பல்வேறு சங்கங்கள் மனு தாக்கல் செய்தன. 

இவற்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் கடந்த செப்டம்பரில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி போக்குவத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 2022-நவம்பருக்குள் வழங்கவும், வரும் நவ.25ஆம் தேதி அதற்கான விவரங்களைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இருப்பினும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 80 நாள்களாகியும் ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
எனவே, நீதிமன்றத்துக்கு வரும் 25ஆம் தேதி எத்தகைய பதிலைத் தயாரித்து அரசுத் தரப்பினர் அளிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள்.

இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலருமான ஆர். ராதாகிருஷ்ணன் கூறியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால், 31 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில், மத்திய அரசானது 34 சதவீத அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு என்பது 7 ஆண்டுகளாக எட்டாக்கனியாகவே உள்ளது. மேலும், 2015ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய 2 மாத நிலுவையையும் வழங்கவில்லை.

தற்போதைய சூழலில், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு மாதம் ரூ.108.25 கோடி செலவிடுகிறது. உயர்வு அளித்தால் கூடுதலாக ரூ.40 கோடி செலவிட வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் உயர்வு வழங்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த நிதியில்லை என்றால் அரசுதான் பொறுப்பேற்று வழங்க வேண்டும் என விதிகள் உள்ளன. 

ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றோருக்கு ஒரு விகிதத்திலும், 2016-க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு விகிதத்திலும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த முரண்களையும் களைய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உயர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்தோம்; ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் தனியாக அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. தற்போது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வழங்க மறுப்பதை ஓய்வூதியர் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. எங்களுக்கு பதில் தராவிட்டாலும், வரும் 25ஆம் தேதி நீதிமன்றத்துக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நல்ல பதில் கிடைக்கும் என 86 ஆயிரம் ஓய்வூதியர்களும் காத்திருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT