சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: மாம்பழம் உண்ட மயக்கத்தை ‘மாவிலை’ தீர்க்குமா..? 

25th May 2022 12:04 PM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்

ADVERTISEMENT

 

‘பழங்களின் அரசன்’ என்று கருதப்படுவது நம்ம ஊர் பழம் மாம்பழம் தான். ஆண்டுக்கு ஒரு முறைதான் மாம்பழ சீசன். அந்த சீசனில் தான் மாம்பழம், பலரின் நாக்கின் சுவை மொட்டுக்களை தூண்டி, அவற்றிற்கு விருந்து கொடுக்கும் இனிப்பான காலம். என்ன தான் வகை வகையாய் பழங்கள் இருந்தாலும் மாம்பழத்திற்கென்று தனி இடமும், எதிர்பார்ப்பும் உண்டு. மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது, நார்சத்து அதிகம் உள்ளது என்று அடிக்கிக்கொண்டே போனாலும் இந்த பழத்தை பயன்படுத்த சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பெரும் தயக்கம் தான். 

முக்கனிகளுக்கு கட்டுப்பாடு: முக்கனிகள் என்று கூறப்படும் மா, பலா, வாழை இவை மூன்றுக்கும் சிவப்பு சிக்னல் காட்டி இனி இவற்றை சாப்பிடக் கூடாது என்று சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை தருவது வழக்கம்.

இயற்கை தந்த கொடை: இத்தகைய நிலையில் ‘மாம்பழ சீசன் வந்தா என்ன? வரலைனா என்ன?’ என்று மாம்பழத்தை சாப்பிட முடியாமல் ஏங்கி தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் ஏராளம். அவர்களுக்கு இயற்கை தந்த கொடை தான் ‘மாவிலை’.

ADVERTISEMENT

என்னடா இது? மாம்பழத்திற்கும் மாவிலைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்?  நிச்சயம் தொடர்பு உண்டு. சித்த மருத்துவம் சிறப்புமிக்க மருத்துவம் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். மாம்பழம் உண்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை, மயக்கத்தை குறைக்கும் மாமருந்து அதன் மரத்திலே உள்ளது என்பது சிறப்பு. 

மாம்பழம் சாப்பிட விரும்பும் சர்க்கரை வியாதிக்காரர்கள் இந்த கட்டுரையை படித்து, சீசன் முழுக்க மாம்பழம் சாப்பிட்டு சர்க்கரை அளவை கூடாமல், மாறாக குறைத்துக்கொள்ள முடியும்.

நாம் உண்ணும் மாம்பழத்தில் இயல்பாகவே 16-18% அளவு சர்க்கரை, அமிலங்கள் மற்றும் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (அஸ்கார்பிக் அமிலம்) மற்றும் பாலிபீனால்கள் (கரோட்டின், வைட்டமின்-ஏ) ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பச்சையாக உள்ள பழுக்காத மாம்பழத்திலும், முதிர்ந்த பழுத்த மாம்பழத்திலும் காணப்படும், முக்கிய கார்போஹைட்ரேட்டுகள் வேறுபடுகின்றன. இதில் சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம் போன்ற பல்வேறு அமிலங்கள் இருப்பதால் பழுக்காத மாம்பழம் புளிப்பு சுவை கொண்டதாக உள்ளது.

ஸ்டார்ச் என்பது பச்சை மாம்பழத்தில் உள்ள முக்கிய கார்போஹைட்ரேட். இது முதிர்ச்சியின் போது, சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகிய எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக மாறுகிறது. இந்த சர்க்கரை மூலக்கூறுகளுடன், பழுத்த மாம்பழத்தில் சிறிய அளவு செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் மற்றும் பெக்டின் ஆகியவையும்  உள்ளன. அதேசமயம் பழுத்த பழத்தின் இனிப்பு சுவையானது சர்க்கரை மற்றும் முக்கிய அமிலங்களின் காரணமாக உள்ளது. 

மா இலை

இவ்வளவு ருசியும், மருத்துவ குணமும் உள்ள மாம்பழத்தை உண்ணக் கூடாது என்பது பலருக்கும் அதிருப்தி தான். அவர்களின் அதிருப்தியை போக்கி மாம்பழம் உண்டாலும் சர்க்கரை அளவை கூடவிடாமல் தடுக்க, அந்த மரத்தின் மற்றொரு பாகம் பயனளிக்கும் வகையில் உள்ளது சிறப்பான ஒன்று. அது என்னவெனில், சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட ‘மா இலைகள்’.

மருத்துவ குணம்: மாவிலையில் மருத்துவ குணம் வாய்ந்த பாலிபினால்களான மாங்கிஃபெரின், கேலிக் அமிலம், கடிச்சின், குர்சிட்டின், கேம்ப்ஃபெரால், எலாஜிக் அமிலங்கள், ரம்னெடின் மற்றும் அந்தோசயனின்கள் இவை அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மருத்துவ தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இருப்பினும் அதன் மருத்துவ செய்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ‘மாஞ்சிபெரின்’. இது ஒரு தாவர இயற்கை பாலிஃபீனால் ஆகும். இயற்கை சி-குளுகோசைடு. இது பல தாவர வகைகளில் காணப்படுகிறது, இருப்பினும் மாவிலைகள் முதன்மையான ஆதாரங்களில் ஒன்றாகும். 

தாது உப்புக்களும் வைட்டமின்களும்: மா இலையில் உடலுக்கு அத்தியாவசிய தாது உப்புக்களான நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் முக்கிய வைட்டமின்களான ஏ, பி, இ மற்றும் சி இவைகளும் உள்ளன. மா இலைகளில் இருக்கும் ஒரு முக்கிய உயிர்ம மூலக்கூறு புரதம் ஆகும். அதனால் தான் வளரும் நாடுகளில் கால்நடைகளுக்கான உணவுப் பற்றாக்குறையைப் போக்க ,அவற்றிற்கு உணவளிப்பதற்கான மாற்று ஆதாரமாக மாவிலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வலி நிவாரணி: மாவிலையில் இந்த மாஞ்சிப்பெரின் இருப்பதனால்,  வலி நிவாரணியாகவும், வீக்கமுருக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியதாகவும், கிருமிக்கொல்லியாகவும் மற்றும் ஆன்டி-வைரஸ் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், இருதயத்தை பாதுகாப்பதாகவும், ஒவ்வாமையை தடுப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பினை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாகவும், புற்று நோயினை தடுக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் தன்மையும் உடையதாக போன்ற பல மருத்துவ பண்புகள் உடையது.  

சர்க்கரை அளவு பரிசோதனை

மாவிலை கசாயம்: மாம்பழத்தில் அதிக அளவு உள்ள β-கரோட்டின் மற்றும் பிற தாவர மூலக்கூறுங்களால், இரத்தப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வண்ணம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், அப்போப்டொசிஸ் எனும் திட்டமிட்ட செல் இறப்பை தூண்டுவதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் திறனையும் பெற்றுள்ளது.
மாவிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருள் மாஞ்சிபெரின் தண்ணீரில் நன்றாக கரையக்கூடியது.

எனவே, மாவிலையை கசாயமிட்டு குடித்தாலும் மேற்கூறிய நன்மைகளை எல்லாம் தரும். மாவிலையை பொடித்து சூரணமாக்கி உள்கொண்டாலும் அதிகரித்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். சர்க்கரை நோயின் பின் விளைவுகளும் தடுக்க முடியும். 

கணைய வாஸ்து சீரமைப்பு: மாமரத்தின் பிசின், மாம்பழத்தின் பருப்பு இவற்றிற்கும் சிறந்த மருத்துவ குணமுண்டு. ஆகவே, மாவிலையை வீட்டு வாசலில் தோரணம் கட்டி அழகு பார்த்து, வாஸ்துவை கட்டுக்குள் கொண்டு வருவதோடு மட்டும் நில்லாமல், மாம்பழம் உள்கொண்ட கையோடு மாவிலையை கஷாயமிட்டு குடித்தால் உடலில் கணையத்தின் வாஸ்து சீரமைக்கப்படும் என்பது உறுதி. இன்சுலினை இயற்கையாக சுரக்க வழிவகை செய்யும். இதனால் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதும் வெளிப்படையான உண்மை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

ADVERTISEMENT
ADVERTISEMENT