சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்:  ‘சிறுகுறிஞ்சான்’ வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகளை தடுக்குமா?

மரு.சோ.தில்லைவாணன்

அதென்ன வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள்? வாங்க தெரிஞ்சுக்கலாம். இன்றைய நவீன உலகில் வாழும் பலரும் இதனை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் உழைப்பும், உணவு கட்டுப்பாடும் இல்லாத நபர்கள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பது அவதிப்படும் அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவருக்கும் பிற்காலத்தில் சர்க்கரைநோய் ஏற்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அத்துடன் நில்லாது உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு மற்றும் இவற்றின் பின்விளைவுகளாக பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல அச்சுறுத்தும் தொற்றா நோய்களும், பற்றிக்கொள்ளும் அபாய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. 

இத்தகைய ஒட்டு மொத்த நோய் குறிகுணங்களின் தொகுப்பு தான், ‘வளர்ச்சிதை மாற்ற நோய்குறிகள்’, அதாவது ‘மெட்டபாலிக் சின்ரோம்’ (Metabolic syndrome) என்று கூறப்படும்.

வளர்ச்சிதை மாற்ற நோய்குறிகளுக்கு காரணம் என்ன? என ஆராய்ந்தால் இன்றைய அறிவியல் கூறுவது இன்சுலின் தடை (Insulin Resistance) தான். இன்சுலின் எனும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் ஹார்மோன் நம் உடலில் உள்ள கணையத்தில் சுரப்பது என்பது அனைவரும் அறிந்ததே. 

இன்சுலின் தடை என்பது, நம் உடலில் உள்ள தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள் இன்சுலினின் கட்டளையை ஏற்காது. இதனால், நம் உடலில் ஆற்றலுக்காக இரத்தத்தில் இருந்து சர்க்கரையை (குளுக்கோஸை) பயன்படுத்த முடியாது. அதை ஈடுசெய்ய, கணையம் அதிக இன்சுலினை சுரக்கிறது.

காலப்போக்கில், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதுவே நீரிழிவு எனும் சர்க்கரை நோய் எனப்படுகின்றது. MetS என்று அறியப்படும் பல்வேறு வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள் உலகளவில் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் சவாலாகும்.  இதுவே உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இளமைக்கால மரணங்களுக்கும் காரணம்.

‘டாக்டர் நான் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். உடல் உழைப்பு, உடல் பயிற்சி என்பதெல்லாம் எங்களால் யோசித்து கூட பார்க்கமுடியாது’ என்று வருத்தப்படும் பலரின் இந்த ஒட்டு மொத்த நோய்குறி குணங்களுக்கும் ஒற்றை தீர்வாக நம்ப வேண்டியது சித்த மருத்துவத்தை தான். 

ஒரே மூலிகை, பாதுகாப்பான மூலிகை, வளர்ச்சிதை மாற்ற நோய்குறி குணங்களுக்கு காரணமான இன்சுலின் தடையை சரி செய்து, அனைத்து நோய் குறிகளையும் தடுத்து, சர்க்கரை போன்ற கொடிய அரக்க வியாதியிடம் இருந்து காத்து, இயல்பான வாழ்வியலை வாழ்வதற்கு வழித்துணையாக வரும் சித்த மருத்துவ மூலிகை தான் ‘சிறுகுறிஞ்சான்’.

நஞ்சு முறிப்பான்: சித்த மருத்துவத்தில் மிகப்பிரசத்தி பெற்ற மூலிகையான நிலவேம்புக்கு சற்றும் குறையாத கசப்பு சுவை உடைய மூலிகை சிறுகுறிஞ்சான். பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திலும் இன்றளவும் பாம்புக்கடி நஞ்சினை நீக்கவும், பல்வேறு கடிவிஷங்களை போக்கும் நஞ்சு முறிப்பானாகவும் சிறுகுறிஞ்சான் இலையும், வேரும் பயன்படுத்தப்பட்டு வருவது பலரும் அறிந்ததே. நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்க்கும்) பலரும் இதனை காரணம் அறியாமலே பயன்படுத்தியும் வருவது சிறப்பு தான். சித்த மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்காக இம்மூலிகை பயன்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுகுறிஞ்சான் இலையை வாயிலிட்டு மெல்ல நாக்கின் சுவை சிறிது நேரம் மங்கி, சுவை அறியாதன்மை அடையும். காரணம், இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலங்கள் நம் நாக்கில் இனிப்பு சுவையை அடக்குகின்றன. இலைகளை மென்று தின்ற பிறகு, இனிப்புப் பொருளில் உள்ள சுவை, இனிப்பு ஏற்பியுடன் பிணைப்பதை ஜிம்னெமிக் அமிலம் தடுக்கிறது என்று கருதப்படுகிறது. 

உடல் பருமனை கட்டுப்படுத்தும்: சிறுகுறிஞ்சானில் உள்ள செயல் மூலக்கூறுகள் ஜிம்னிமிக் அமிலம், ட்ரைடர்பீன் கிளைகோசைடுகள் மற்றும் குர்மரின் போன்றவற்றால் டைப் 1 மற்றும் 2 - நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக பயன்படுத்த நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் ஆதரிக்கின்றன. ஜப்பானில் சிறுகுறிஞ்சான் இலையை உடல் பருமனை கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

சிறுகுறிஞ்சான் இலைகளில் மருத்துவ குணம் வாய்ந்த அல்கலாய்டுகள், பீனால்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின் ஆகியவை உள்ளன. இன்சுலின் தடையை நீக்கும் மருத்துவ குணம் இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் என்ற வேதிப்பொருளுக்கு உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. 

மேலும் கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை மறுசீரமைப்பு செய்து புத்துணர்வு தருவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள சிறப்பு வாய்ந்த வேதிப்பொருட்கள் நம் குடலில் சர்க்கரை சத்து உறிஞ்சுவதை தடுத்து ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கக் கூடியது. இதனால் உடல் பருமனையும் குறைக்கும் தன்மை உடையது.

கொழுப்பை குறைக்கும்: சிறுகுறிஞ்சான் இலையானது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதோடு மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதாகவும், வீக்கமுருக்கியாகவும், பிளவனாய்டுகள் இருப்பதால் புற்று நோயை தடுப்பதாகவும், கிருமிகளை கொல்லும் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-வைரல் செய்கையும், பல்வேறு கடி நஞ்சுகளை போக்கும் தன்மையும் உடையது. 

அறிவியலை விஞ்சும் ஆச்சரியம்: பாம்புக்கடி மருத்துவத்தில் சிறுகுறிஞ்சான் வேர் பழங்குடி மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பிசிஓஎஸ் (PCOS) எனப்படும் சினைப்பை நீர்கட்டிக்கும் இதே இன்சுலின் தடை தான் காரணம் என நவீன அறிவியல் கூறுவதால் சிறுகுறிஞ்சான் நீர்கட்டியை கரைத்து மாதவிடாயை முறைப்படுத்தும் தன்மையும் உடையது. இதனை அறிவியல் வளர்ச்சி இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “மறு உதிரம் இல்லாத மாந்தர்க்கு” நற்பலனை தரும் என்று அகத்தியர் குணவாகடம் கூறியுள்ளது அறிவியலை விஞ்சும் ஆச்சரியம்.

ஆரோக்கியமான எதிர்காலம்: ஆக இளம் வயதிலே உடல் எடை அதிகம் உள்ளவர்களும், சர்க்கரை நோயை பற்றி கவலை உள்ளவர்களும், MetS குறிகுணங்களை பெற்று, வரப்போக்கும் நோய்நிலையை எண்ணி வருந்தும் பலரும் இந்த சித்த மருத்துவ மூலிகையை நாடினால் நலம் நிச்சயம். இதன் இலைப்பொடியை தினசரி எடுத்துக்கொள்ள மேற்கூறிய பலன்களை அளிக்கும்.

சிறுகுறிஞ்சான் நோய்குறிகளுக்கான தீர்வு மட்டுமல்ல. நோய் நிலைக்கு ஆதாரமாகும், வேரூன்றி இருக்கும் காரணத்தை, இன்சுலின் தடையை அடியோடு அறுக்கும் தன்மை கொண்டது. இது ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்க தரமான அடித்தளத்தை அளிக்கும். பயன்படுத்தி பாருங்கள் சித்த மருத்துவம் நிச்சயம் சுகம் தரும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT