சிறப்புச் செய்திகள்

அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்

28th Mar 2022 05:21 AM | ஆ. நங்கையார்மணி

ADVERTISEMENT

பாலியல் குற்றச்சாட்டுகளுக்குட்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கையோடு, அந்தந்த துறைத் தலைமை மூலம் சட்ட நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பள்ளி வளாகங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெற்றோர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் மத்தியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளன. அதைத் தடுக்க வேண்டிய காவல் துறையிலும், உயர் அதிகாரிகள் மூலம் பெண் காவலர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரி வரையிலும் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையிலேயே சக ஆசிரியைகளுடன் தகாத தொடர்பில் ஈடுபடுவதாக வெளியாகும் செய்திகள் பெற்றோரை வேதனைக்குள்ளாக்குகிறது.

முக்கியத்துவம் அளிக்கப்படாத விசாகா கமிட்டி: ராஜஸ்தான் மாநிலத்தில் 1992-இல் பெண்ணுக்கு எதிரான பாலியல் வழக்கின் மூலம் விசாகா குழுவை உருவாக்க உச்சநீதிமன்றம் 1997-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதில், விசாகா குழுவின் தலைவராக பெண் அதிகாரியை நியமிக்க வேண்டும். குழுவின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. 

ADVERTISEMENT

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கவும், அதனை விசாரிக்கவும் விசாகா குழு உருவாக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013-இன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் விசாகா குழு அமைக்கப்பட வேண்டும். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அலுவலகங்கள், நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில்  7 ஆண்டுகளுக்கு முன் விசாகா குழுக்கள் அமைக்கப்பட்டன.

பின்னர், உயர் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு இல்லாததாலும், செயல்பாடுகள் ஆய்வு மேற்கொள்ளப்படாததாலும், அரசு அலுவலகங்களில் உருவாக்கப்பட்டிருந்த விசாகா குழுக்களும் பயனற்ற நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்: தனியார் நிறுவனங்களைப் பொருத்தவரை, பெரும்பாலானவற்றில் இதுவரை விசாகா குழு அமைக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வந்தாலும்கூட, அது குறித்து  5 சதவீதத்துக்கும் குறைவாகவே புகார்கள் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

புகார் அளித்தால் சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலும், குடும்ப கௌரவம் காரணமாகவும், சம்பந்தப்பட்ட நபர் மூலம் பிரச்னை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

பணிக்குச் செல்லும் பெண்களின் நிலை இப்படி என்றால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மாணவிகள் மேலும் கடுமையான சூழலை எதிர்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்த வழக்குகளிலும் கூட,  அவதூறுகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினரே புகாரைத் திரும்பப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

இதனால், பாலியல் குற்றவாளிகள் ஊக்கம் அடைவதோடு, தங்களது குற்றங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்: குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பெரும்பாலும் துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. அதனை எளிதாக எதிர்கொள்ளும் சம்பந்தப்பட்ட நபர்கள், மற்றொரு இடத்தில் மீண்டும் தங்களது பாலியல் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைக்க வேண்டும் என்ற கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. சட்ட நடவடிக்கைகள் காரணமாக வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் ஏற்படும் பட்சத்தில், பாலியல்  குற்றங்களைத் தடுக்க வாய்ப்புள்ளது. 

 இது தொடர்பாக  காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்போது,  அதுகுறித்த தகவல் காவல் துறைக்கு கண்டிப்பாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பில் உத்தரவிட வேண்டும். 

தகவல் தெரிவிக்காத துறைத் தலைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் துறை ரீதியான நடவடிக்கைக்குள்பட்ட பாலியல் புகாரில் சிக்கிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும்.  அதே நேரத்தில் பழிவாங்கும் நோக்கில் பாலியல் புகார் அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

இது குறித்து சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: விசாகா குழுவின் செயல்பாடுகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும்.  ஒவ்வொரு அலுவலகத்திலும் விசாகா குழு செயல்படுவது குறித்து பெண் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அந்த துறைகளின் தலைமை அலுவலர் மூலம் மாதாந்திர அறிக்கையைச்  சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக, பஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் விசாகா குழு தீவிரமாகச் செயல்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT