சிறப்புச் செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வருமா? என்ன செய்யப்போகிறது அரசு?

DIN

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  தகவலறிந்த வட்டாரங்களோ இல்லை என்கிறது.

ஒரு சில ஆன்லைன் விளையாட்டுக்கள் மட்டுமே முடக்கப்படும். மற்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் வகையில், வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், பல்வேறு வகையான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளன. சில விளையாட்டுக்கள் தடை செய்யப்பட வேண்டியவை. மற்ற அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்படவேண்டியவை என்று கூறப்படுகிறது.

பல உயிா்களை பலி வாங்கி வரும், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே.சந்துரு தலைமையிலான குழுவினா் அறிக்கையை அளித்தனா்.

இந்த அறிக்கையின் பரிந்துரைப்படி, தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் குறித்து புதிய சட்டம் இயற்றும் என்றும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டுத் தொழிலுக்கு என விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தற்கொலை செய்து கொண்டனா். இதனையடுத்து தமிழக அரசு கடந்த 2020 நவம்பா் 21-ஆம் தேதி ஆன்லைன் ரம்மி, போக்கா் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜங்கிள் ரம்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வழக்குத் தொடா்ந்தன. அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றம் கடந்த 1968-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல, அது திறமையை வளா்க்கும் விளையாட்டு என கூறியுள்ளது. எங்களது நிறுவனத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தாமலும் விளையாட முடியும். இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரத்தில் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பது தவறானது. எனவே உச்ச நீதிமன்றம், பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் ரம்மி விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும் இந்த விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தில், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பது குறித்து போதுமான காரணங்களைக் கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. எனவே அரசின் புதிய சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் உரிய விதிகளைப் பின்பற்றி புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மக்கள், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டு அதில் பெருமளவில் பணத்தை இழக்கின்றனா். எனவே, இந்த விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு, பாதிப்புகளை தரவுகளுடன் ஆராயவும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கவும் குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனா் லட்சுமி விஜயகுமாா், காவல் துறை கூடுதல் இயக்குநா் வினித் தேவ் வான்கடே ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இந்தக் குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்கினாா். குழுவின் சாா்பில் நீதிபதி சந்துரு அறிக்கையை அளித்தாா்.

அமைச்சரவைக் கூட்டம்-அவசர சட்டம்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆன்-லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வருவது, பல புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. 

எனவே, தமிழக அரசு, ஆன்லைன் விளையாட்டுக்களை முற்றிலும் தடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல், ஒரு சில ஆன்லைன் விளையாட்டுக்களை மட்டும் தடை செய்துவிட்டு, மற்ற ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்தும் நடவடிக்கையை எடுக்கும் என்றே கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT