சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: இடுப்பு, முதுகுத்தண்டு வலி பிரச்னைகளுக்கு  தீர்வு தருமா ‘உளுந்து’…?

மரு.சோ.தில்லைவாணன்


பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இடுப்பு மற்றும் முதுகுத்தண்டு எலும்பு சார்ந்த பிரச்னைகள் அதிகம். நவீன வாழ்வியல் நெறிமுறைகளால் அவர்களுக்கு 50-களில் வரக்கூடிய, அதாவது மாதவிடாய் இறுதிக்கு பின் வரக்கூடிய இடுப்பு எலும்பு சார்ந்த வலியும், வேதனையும் அதற்கு முன்னதாகவே வந்துவிடுகிறது. மேலும், இயற்கையாக நடந்து வந்த சுகப்பிரசவம், பல்வேறு காரணங்களினால் அறுவை சிகிச்சை பிரசவமாக (சிசேரியன்) மாறியதும் இத்தகைய இடுப்பு சார்ந்த பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது.

டாக்டர் எனக்கு சிசேரியன் சிகிச்சைக்கு பின்னர் தான் இடுப்பு வலியே வந்தது என்றும், இதனால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை என்றும் புலம்பும் இன்றைய இல்லத்தரசிகள் ஏராளம். மேலும், பிரசவ காலத்திலும், பிரசவத்திற்கு பின்னும் இடுப்பு எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து மிக்க உணவுகளை பலரும் எடுக்க மறுப்பதும், மறப்பதும் நோய் நிலையை நோக்கி பாதையை நகர்த்தும்.

அந்த காலத்துல எங்க பாட்டிக்கு ஏழு பசங்கலாம், எங்க அம்மா கூட பிறந்தவங்க ஆறு பேராம் என்று இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சர்யப்படுவது அவர்களின் எண்ணிக்கையை பார்த்து அல்ல, உடல் வலிமையை பார்த்து தான். இன்றளவும் கால்சியம் மாத்திரைகளையும், வைட்டமின்-டி3 மாத்திரைகளையும் பார்த்திராத பாட்டிகளை பார்த்தால், மருந்தையே உணவாக எடுத்துக்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு சற்று மனக்குமுறல் தான். காரணம் கேழ்வரகு கூழும், தினைமா உருண்டையும், முருங்கை கீரை அடையும் மறந்து போன உணவுப்பொருள்களானதே, நம் உடல் நரம்புகள் மறுத்துப்போக காரணம் ஆகிவிட்டன.

அதில், முக்கியமாக பழங்காலம் முதல் இடுப்பு வன்மைக்கும், உடல் வன்மைக்கும் பயன்படுத்தப்பட்ட முக்கிய சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருள் தான் ‘உளுந்து’. அதிலும் தோலுடன் உள்ள ‘கருப்பு உளுந்து’ மிகச்சிறந்தது. நம் இந்தியாவிற்கே சொந்தமான, இங்கு விளையக்கூடிய நம் பாரம்பரிய மகத்துவம் மிக்க சொத்தாக விளங்கும் தானிய வகைகளுள் ஒன்று தான் உளுந்து. இது போஷாக்களிக்கும் உணவுப்பொருள் என்பது பலரும் அறிந்ததே. 

காலையில் நாம் உண்ணும் இட்டிலியில் உளுந்தையும் சேர்த்து, அதாவது மாவுச்சத்துடன் புரதச்சத்தையும் கூட்டி சரிவிகித உணவாக்கியதே நம் பாரம்பரிய உணவு முறைக்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் மிகச்சிறந்த அடையாளம்.    

பருப்பு வகைகள் ஊட்டச்சத்து மிக்க உணவின் முக்கிய பகுதியாகும். பருப்பு வகைகள் ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளாக உள்கொள்ளப்படுகின்றன. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும். அவை புரதம் மற்றும் நார்ச்சத்து மற்றும் இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளன. 

அதிலும் முக்கியமாக உளுந்து என்றவுடன் அதிக புரதசத்து கொண்டது என்ற பொதுவான கருத்து அனைவருக்கும் ஏற்படும். இதனால் உடல் எடையை குறைக்க பலரும் உளுந்துவை நாடுவதும் வாடிக்கை தான். உணவுக்கு பதில் ஒரு வேலை உளுந்து கஞ்சினை எடுத்து வர உடல் எடை குறையும். உடல் எடையை கூட்ட வேண்டின், உணவோடு சேர்த்து அவ்வப்போது ‘உளுந்து மா’ கஞ்சினை எடுத்துக்கொள்ள எடை கூடும். 

100 கிராம் உளுந்தில், கிட்டத்தட்ட 40 கிராம் வரை புரதசத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், புரதசத்து என்பதை கடந்து, மருத்துவ தாவர வேதிப்பொருள்களான சப்போனின்கள், டேனின்கள், அல்கலாய்டுகள், மற்றும் எண்ணற்ற விட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளது. இத்தகைய மருத்துவ வேதிப்பொருள்களால் உளுந்து ஆன்டி ஆர்த்ரைடிஸ் எனும் எலும்பு மூட்டு வலிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையும், வீக்கமுருக்கி தன்மையும் உடையது.  

உளுந்து, இடுப்பு எலும்புகளுக்கு வன்மை தந்து இடுப்பு வலி வராமல் தடுக்கும் என்பதை “என்புருக்கி தீரும் இடுப்புக்கதி பலமாம் முன்பு விருத்தியுண்டாம் முன்” என்ற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம். 

அந்த வகையில் உளுந்துவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், அது மூட்டுக்களின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைத்து நடத்தையில் கணிசமாக முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

மேலும், கருப்பு தோலுடன் கூடிய உளுந்து பிளவனாய்டுகள் உள்ளபடியால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், அதிக புரத சத்தினை கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் கொழுப்பினை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கும், ஆண்மையை அதிகரிக்கும், நரம்புகளை வலுப்படுத்தும், உடலை உரமாக்கிடும் தன்மையும் உடையது.

கருப்பு உளுந்து ஆல்பா அமைலேஸ் எனும் நொதியின் செயல்பாட்டை தடுப்பதாக உள்ளது. இதன் மூலம் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதாகவும், உணவுக்குப் பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு உச்சநிலையை அடைவதை தடுப்பதாகவும் உள்ளது. அதிக நார்ச்சத்தும், அதிக புரதச்சத்தும், குறைந்த கிளைசெமிக் குறியீடும் உடையதால் கருப்பு உளுந்து சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு அதிக பயனளிக்கும்.

சித்த மருத்துவத்தில் உளுந்துவை முதன்மையாக கொண்டு சொல்லப்பட்டுள்ள உளுந்து தைலத்தை தினசரி மேற்பூச்சாக பயன்படுத்தினாலும் இடுப்பு வலி, முதுகு தண்டு இவற்றின் தேய்மானத்தால் ஏற்பட்ட வலியில் நல்ல முன்னேற்றம் காணுவதுடன் இடுப்புக்கு வன்மை தரும். 

அல்லது ஆவாரம் இலை, முருங்கை இலை, இவற்றுடன் உளுந்து மா சேர்த்து முட்டை வெண்கருவுடன் பற்று போட்டாலும் இடுப்பு வலி குறைந்து வன்மை பெறும். 

எச்சரிக்கை: உளுந்து வெப்ப வீரியத்தை உடைய மூலிகை ஆதலால், அளவுக்கு அதிகமாக வெளிப்பூச்சில் பயன்படுத்தினால் தோலில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பரிந்துரைக்கப்படும் பஞ்ச முட்டி கஞ்சியிலும் உளுந்து சேருவது சிறப்பு. பருவ காலத்தில் பெண்கள் பூப்பு எய்தும் போதும், உளுந்தினை களியாக்கி கொடுப்பது காலம் காலமாக இருந்து வரும் நம் தமிழ்நாட்டு வழக்கு முறை. இது வெறும் வழக்கு முறை மட்டுமல்ல, நம் பாரம்பரிய வாழ்க்கை முறையும் கூட தான். இது இடுப்பினை மட்டுமல்ல, கருப்பையையும் பலப்படுத்தவே.

ஆக கருப்பு உளுந்து மாவில் பனைவெல்லம் சேர்த்து கஞ்சியாகவோ, அடையாகவோ, களியாகவோ செய்து பாரம்பரிய முறை தவறாமல் எடுத்துக்கொள்ள இடுப்புக்கு மட்டுமில்லாமல் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வன்மை உண்டாகும்.

மாதவிடாய் இறுதிக்கு பின் வரக்கூடிய ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோயையும், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் மூட்டு தேய்மானத்தையும் தடுத்து ஆரோக்கியமான வாழ்வினை அடைய முடியும். 

சித்த மருத்துவம் நமக்கு தந்த இயற்கை கால்சியம் மற்றும் புரத உருண்டைகள் தான் இந்த உளுந்து. இதை தான் சித்த மருத்துவம் ‘உணவே மருந்து’ என்று ஆணித்தரமாக கூறுகின்றது. 

சித்த மருத்துவம் நம் மருத்துவ முறை மட்டுமல்ல. தமிழ் கூறும் நல்லுலகின் பாரம்பரிய அடையாளம். இது நம் ஆரோக்கியத்தின் அடையாளம் கூட தான். எனவே, நாம், நம் சித்த மருத்துவ அடையாளத்தை இழந்தால் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்பது தான் வெளிப்படை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT