சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஜெர்ட்’பிரச்னைக்கு தீர்வு தரும் ‘நிலாவாகை’

மரு.சோ.தில்லைவாணன்



‘ஜெர்ட்’ (GERD) எனப்படும் நோய் நிலையை பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், நாட்டில் முக்கால் வாசி பேர் இந்த நோய் நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பது தான். ஆம். உணவு உண்பதும், அது சீரணமாவதும் இயற்கையாக நிகழும் ஒன்று. அந்த இயற்கை நிகழ்வுக்கு கூட, உதவி தேவைப்பட்டால் நிச்சயம் அது நோய் நிலை தான். 

தவறான உணவு முறையும், அந்த உணவு செரிக்க காற்றேட்டப்பட்ட குளிர்பானங்களும், நோய்நிலையை அதிகரிக்கும் நவீன வாழ்வியல் முறையின் அடையாளம். உணவு செரிக்கலையா? கொஞ்சம் சீரகமும், ஓமமும் கஷாயம் போட்டு குடிங்க, சரியாகிடும் என்ற நம் பாட்டி வைத்தியத்தை பத்திரமாய் காக்காமல், மறந்த போன மருத்துவமாக்கியதே இன்றைய பல நோய் நிலைகளுக்கும்  காரணம்.

நவீன வாழ்வியல் முறை, காலம் தவறிய உணவு முறைகள், துரித உணவு வகைகள், மறந்து போன எண்ணெய் குளியல் இவை அனைத்தும் ‘ஜெர்ட்’(GERD) நோயை வாசலில் நின்று இரு கரம் கூப்பி வரவேற்கும். 

சரிங்க டாக்டர் ஜெர்ட்-னா என்ன? நாம் வாயின் மூலம் உண்ணும் உணவு, உணவுக்குழாயை தாண்டி இரைப்பையை அடைந்து அங்குள்ள அமில நீரால் செரிக்கப்பட்டு அடுத்து சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று அடுத்தடுத்த சீரணமண்டல உறுப்புகளை அடைவதே இயல்பு. இதற்க்கு மாறாக இரைப்பையில் உள்ள உணவும், அமிலமும் மேலே உள்ள உணவுக்குழாயில் எதிரெடுப்பதே ஜெர்ட் நோய் நிலை.

குறிகுணங்கள்: இதனால் நெஞ்சு எரிச்சல், புளியேப்பம், வயிற்றில் உள்ள அமிலம் மேலே எதிரெடுப்பதால் வறட்டு இருமல், நாட்பட்டு இந்த குறிகுணங்கள் தொடர்ந்தால் வயிற்று புண் முக்கியமாக அமில அரிப்பினால் உணவுக்குழாயில் அழற்சி(புண்) போன்ற பல்வேறு நோய் நிலைகளை ஏற்படுத்தும். பல வருடங்களாக இந்நோய் நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு புற்றுநோய் கூட வரக்கூடும் என எச்சரிக்கிறது ஆய்வுகள்.

டாக்டர் நான் காலையில் எழுந்ததும் பல் துலக்குகிறேனோ இல்லையோ, காஸ் ட்ரபுள் மாத்திரையை கடந்த பல மாதங்களாக எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று மருத்துவர் பரிந்துரையை வேத வாக்காக எண்ணி பின்பற்றுபவர்கள் பலரும் இந்த ஜெர்ட் பாதிப்பு உடையவர்கள் தான்.

டாக்டர் நடு இரவில் திடீரென புளியேப்பம் வந்து, உணவு மேலெடுத்தல் வந்து, தூக்கமே கலைந்து விடுகிறது. நானும் பல நாள்களாக மருந்து எடுத்தும் பயனில்லை என்று மனக்குமுறலுடன் சொல்பவர்கள் பலர். 

உலகில் இந்நோயால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 30% பேர் மருந்து எடுத்தும் எந்த முன்னேற்றம் கிட்டாமல் நாள்தோறும் வருத்தமுடன் வாழ்க்கையை தொடர்வதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.

சரிங்க டாக்டர்... இதற்கான தீர்வே இல்லையா? என்று கேட்க நினைப்பவர்கள் முதலில் மாற்ற வேண்டியது உணவு முறையைத் தான். அடுத்து அணுக வேண்டியது சித்த மருத்துவ மூலிகையினை.

ஜெர்ட் எனப்படும் நோய் நிலை, சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள எட்டு வகை குன்மங்களில் பொருந்துவதாக உள்ளது. ‘வாதமலாது மேனி கெடாது’ என்கிறது சித்த மருத்துவம்.

வயிற்றில் சேரும் வாதம் அல்லது வாயுவே உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் காரணம். சரி, ஜெர்ட் நோய்க்கும் வாயுவுக்கும் என்ன தொடர்பு? இரைப்பையில் உண்ட உணவு சீரணமாகி அடுத்த பகுதிக்கு செல்லவும், இறுதியில் மலத்தை வெளித்தள்ளவும் அபானன் வாயு என்ற பெயரில் கீழ்நோக்கி மலத்தை தள்ளும். ஜெர்ட் நோயில் மாறாக மேல்நோக்கி வரும் வாயுவால் (உதானன் என்கிறது சித்த மருத்துவம்)  அந்நோயின் குறிகுணங்கள் உண்டாகிறது. ஆகவே அபானனை தூண்டி மலத்தை இளக்கும், புண்ணை ஆற்றும் ஒற்றை மூலிகை ஒன்று உண்டானால் நிச்சயம் அது ஜெர்ட் நோயாளிகளுக்கு அமிர்தம் தான். அத்தகைய சிறப்பு மிக்க சித்த மருத்துவ மூலிகை தான் ‘நிலாவாரை / நிலாவாகை’.

மலமிளக்கியாக 19-ஆம் நூற்றாண்டின் துவக்கம் முதல் உலக நாடுகள் பலவற்றிலும் பயன்படுத்தப்படும் மூலிகை நிலாவரை. இது பெருங்குடலின் உள்ளே திரவ சுரப்பை அதிகரிப்பதன் மூலமும், குடலை சுருங்குவதன் மூலமும் மலமிளக்கியாக செயல்படுவதாக கருதப்படுகிறது. இதன் சித்த மருத்துவ செய்கையினை “பொல்லாத குன்மம் பொருமு மலக்கட்டு முதல் எல்லாம் அகற்றுமென எண்” என்ற அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம். மலச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி அன்று முதல் இன்று வரை ஆராய்ச்சி பொருளாக உள்ள ஒரே மூலிகை இந்த நிலாவாகை தான். 

சென்னோசைடு ஏ  மற்றும் பி என்பது நிலாவாரை இலையில் இருந்து கிடைக்கும் இயற்கையான டையாந்த்ரோன் கிளைகோசைடு ஆகும். இதுவே இதன் மலமிளக்கி செய்கைக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. நவீன அறிவியல் இந்த வேதிப்பொருட்களை மருந்தாக்கி சந்தைப்படுத்தி வருகிறது. அமெரிக்கா நாட்டிலும் FDA-வால் அங்கீகரிக்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. 

நிலாவாரை இலை பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில், மலமிளக்கியாகவும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் நிலாவரை இலையானது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், கட்டிகளை கரைக்கவும், பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் இவற்றை எதிர்த்து செயல்படும் கிருமிக்கொல்லியாகவும், நரம்பு தேய்மானத்தை தடுக்கும் தன்மையும் உடையதாக அறியப்படுகின்றது. 

ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையதால் தோல் நோய் மருத்துவத்தில் கூட பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சென்னாசைடு ‘எ’ வேதிப்பொருள் சர்க்கரை நோய்க்கு காரணமான இன்சுலின் தடையை நீக்கும் தன்மையும், வைரஸ் கிருமியின் ரிவெர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டஸ் நொதியின் செயல்பாட்டை தடுப்பதாகவும் உள்ளது.

நிலாவரை சூரணத்தை 500 மிகி முதல் 2 கிராம் வரை இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள நோய்க்கு காரணமாகும் வாதத்தை சீர்செய்து, மலச்சிக்கலை போக்குவதோடு, பல்வேறு நோய் நிலையில் இருந்து மீட்கும். அதிக அளவில் குடலை எரிச்சலூட்டும் தன்மை உடையதால் அளவோடு பயன்படுத்த நன்மை தரும்.  

ஆக, ஜெர்ட் நோயால் தூக்கம் கெட்டு அவதியுறும் பலரும், இந்த நிலாவாரை மூலிகையினை நாடினால் நலம் நிச்சயம் நாடி வரும். சித்த மருத்துவம் நோயின் குறிகுணங்களுக்கு மட்டுமல்ல, நோய்க்கான ஆதாரத்திற்கும் தான்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT