சிறப்புச் செய்திகள்

பா.ஜ.க. அணி வேட்பாளர் வெற்றி சாத்தியமா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

10th Jun 2022 01:29 PM | ததாகத்

ADVERTISEMENT

 

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா?

புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிப் பேசத் தொடங்கியதிலிருந்தே நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம் இது.

ஏனெனில், ஆளும் பாரதிய ஜனதா அணிக்கு வெற்றி பெறத் தேவையான வாக்குகள் சற்றுக் குறைவாகவே இருக்கின்றன.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுடைய சட்டமன்றங்களின் உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வாக்குகளின் எண்ணிக்கையில் மதிப்பு கணக்கிடப்படும்.

இதையும் படிக்க.. குடியரசுத் தலைவா் தோ்தல்: ஒரு விளக்கம்...

தற்போதுள்ள நாடாளுமன்ற (மக்களவை, மாநிலங்களவை சேர்த்து) உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 767. இவர்களின் வாக்கு மதிப்பு 5.36 லட்சம். தற்போது நாடு முழுவதுமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கை 4,790. இவர்களுடைய வாக்குகளின் மதிப்பு  5.42 லட்சம். இவற்றின்  மொத்தம் 10.78 லட்சம்.

தற்போது ஆளும் தேசிய ஜனநாயகக் (பா.ஜ.க.) கூட்டணியின் வசம் 5.26 லட்சம் வாக்குகளும் ஐக்கிய முற்போக்கு (காங்கிரஸ்) அணியின் வசம் 2.59 லட்சம் வாக்குகளும் இருக்கின்றன. இரண்டையும் சாராத திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜவாதி மற்றும் இடதுசாரிகள் வசம் 2.92 லட்சம் வாக்குகள் இருக்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட, காங்கிரஸுடன் பிற கட்சிகள் அனைத்தும் சேர்த்து, 5.51 லட்சம் வாக்குகள் வைத்திருக்கின்றன. 26 ஆயிரம் வாக்குகள் அதிகம். தேஜக வெற்றிக்கு சுமார் 14 ஆயிரம் அதிகம் பெற வேண்டியது அவசியம்.

அல்லாமல், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, ஏற்கெனவே முந்தைய தேர்தல்களில் நடந்ததைப் போல, பொது வேட்பாளரை நிறுத்தினால், பாஜகவின் வெற்றி சந்தேகத்துக்குரியதாகிவிடும்.

ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாரதிய ஜனதா தளத்தின் ஆதரவைப் பெற முடிந்தால் எளிதில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். (ஒய்எஸ்ஆர் காங்கிரஸிடம் 43,500 வாக்குகள், பிஜு ஜனதா தளத்திடம் 31,700 வாக்குகள்). 

இதையும் படிக்க.. ஜூலை 18-இல் குடியரசுத் தலைவா் தோ்தல்

அண்மையில் ஜகன்மோகன் ரெட்டியும் நவீன் பட்நாயக்கும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகளில் என்ன விவாதிக்கப்பட்டன என்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றபோதிலும் குடியரசுத் தலைவர் பற்றிப் பேசப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ஆளும் கூட்டணிக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதிலும்கூட இவர்களுடைய ஆதரவும் முக்கிய பங்காற்றும் வாய்ப்புள்ளது.

மிகக் கடுமையாக ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்க்கும், விமர்சிக்கும், பிரதமர், மாநில ஆளுநர் கூட்டங்களைக்கூட புறக்கணிக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் உத்தி என்ன, என்ன செய்யப் போகிறது? என்பதும் கவனிக்கப்படுகிறது.

இதனிடையே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானவுடனேயே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே, மும்பையில் சரத் பவாரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து, ஒரே கருத்துள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. 

இதையும் படிக்க.. பா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளரின் தெரிவைப் பொருத்து எதிர்க் கட்சிகளின் அணிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பிஜு ஜனதா தளமும் வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்றும் அலசப்படுகிறது. ஏனெனில், தற்போதுள்ள சூழலில் - காங்கிரஸ் தனிப்பெரும் பலம் பெற்றிராத நிலையில் - எதிர் அணியில் காங்கிரஸ் அல்லாத ஒருவரே பொது வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, கூட்டு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துவது தொடர்பாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் பேசவிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் தங்களுடைய முடிவை அறிவிக்கும் வரை இது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், இந்த வெற்றி அடுத்து வரக்கூடிய மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29. வாக்குப் பதிவு ஜூலை 18. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21.

ADVERTISEMENT
ADVERTISEMENT