சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்குமா ‘இனிப்பு நறுமணப் பட்டை’ ?

6th Jul 2022 02:31 PM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்

ADVERTISEMENT

 

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது என்பது பலருக்கும் மிகப்பெரிய சவால். எத்தனை எத்தனை மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் சில நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு குறைவதே இல்லை. மருந்துகளை சரியாக எடுத்துக்கொண்ட போதிலும், உணவு முறைகளை சரிவர கடைப்பிடிக்க முடியாத காரணத்தால் இத்தகைய அவல நிலை அவர்களுக்கு ஏற்படும். 

இன்னும் சொல்லப்போனால், ‘டாக்டர் டையட்டிஷியன் கிட்ட போக சொன்னாங்க, அவங்க சொன்னதை விடாம பின்பற்றுகிறேன், இருந்தும் என் சர்க்கரை அளவு குறைந்தபாடில்லை’ என்று மனம் நொந்து உடல் நொந்து திரிபவர்கள் ஏராளம்.

பொதுவாகவே, நீரிழிவு நோயில் மருத்துவம் மேற்கொள்ளும் பலருக்கும் ஒரு பெருத்த சந்தேகம் உண்டு. என்னவெனில் டாக்டர் நீங்க கொடுக்கற மாத்திரை எல்லாம் சாப்பிடுறேன், டயட் பாலோவ் பண்றேன், வாக்கிங் (நடை பயிற்சி) கூட போறேன். ஆனால், சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க முடியவில்லை என்று வருந்துபவர்கள், இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், கொய்யா இலை போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாமா? என்று கேள்வி அனைவருக்கும் தோன்றும். இதை அவர்கள் மருத்துவம் பார்க்கும் நவீன முறை மருத்துவரிடம் கேட்டால் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற வருத்தமும் பலருக்கு உண்டு. 

ADVERTISEMENT

நீரிழிவு நோய்க்கான நவீன மருத்துவ முறையில் பின்பற்றப்படும் மருந்துகள் வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, நம் நாட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மருந்து மட்டுமே. நம்ம ஊரில் கிடைக்கும் வெந்தயமும், கருஞ்சீரகமும், கொய்யா இலைகளும், நாவல் பழ கொட்டையும், மாம் பருப்பும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதையே வேத வாக்காக எண்ணி மருத்துவம் செய்பவர்களுக்கு, நம் பாரம்பரிய மருத்துவத்தின் அருமை புரிவதில்லை. 

இருப்பினும் சித்த மருத்துவ மூலிகைகளை பயன்படுத்துவோருக்கு சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் வரும். இதனால் தீங்கொன்றும் வரப்போவது இல்லை. ஏதோ ஒரு வகையில், ஏன் இயற்கை வழியில் சர்க்கரை அளவு குறைந்தால் நல்லது தானே. அந்த வகையில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஒரு சித்த மருத்துவ மூலிகை நறுமணப்பொருள் ‘லவங்கப்பட்டை’.

லவங்கப்பட்டை

மனம் சரி இல்லாத உடலும், மணம் சரி இல்லாத உணவும் என்றுமே கெடுதி தான். எவ்வாறு உடலின் நன்மைக்கு மனம் மிக முக்கியமோ, உணவின் தன்மைக்கு அதன் மணம் சிறந்த பங்களிப்பை தருகிறது. 

நம் உணவில் ‘மணம்’ என்றாலே நறுமண மூலிகைப் பொருள்களுக்கு தனி பங்களிப்பு உண்டு. ஆனால் உண்மையில் இந்த நறுமணப் பொருள்களை நம் முன்னோர்கள் காலம் காலமாக சேர்த்து வருவது மணத்திற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணத்திற்கும் கூட தான். அத்தகைய சிறப்பு மிக்க, மருத்துவ குணமுள்ள, நறுமணப் பொருள்களில் முக்கிய இடத்தை வகிப்பது ‘இனிப்பு நறுமண பட்டை’ என்று கருதப்படும் ‘லவங்கப்பட்டை’.

லேசான காரமும், இனிப்பு சுவையும், உஷ்ண வீரியமும் உடைய லவங்கப்பட்டை மசாலா பொருள்களுள் தலையாய ஒன்று. இந்தியாவிற்கும்,தெற்கு ஆசியாவிற்கும் சொந்தமான மணமுள்ள இந்த மருத்துவப் பட்டை அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 

லவங்கப்பட்டையில் 82% அளவிற்கு ‘சின்னமால்டிஹைடு’ எனும் நறுமண எண்ணெய் உள்ளது. மேலும் 1.5% அளவிற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள ‘யூஜெனால்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை இரண்டுமே இதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

இருமல், இரைப்பு நோய்க்காக சொல்லப்பட்டுள்ள பல்வேறு சித்த மருந்துகளில் லவங்கப்பட்டை சேருவது இன்னும் சிறப்பு. இதனை ‘ஆட்டும் இரைப்போடு இருமல் ஆதிய நோய்க் கூட்டமற ஓட்டும் லவங்கத்துரி’ என்ற அகத்தியர் குணவாகடப்பாடல் வரிகளால் அறியலாம். 

மேலும் இதில் உள்ள பாலிபீனோல் வேதிப்பொருட்கள் இன்சுலின் போன்று செயல்படும் தன்மை உடையதும் குறிப்பிடத்தக்கது.

லவங்கப்பட்டை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதாகவும், கெட்ட கொழுப்பினை குறைப்பதாகவும் உள்ளது. மேலும் இது வைரஸ் பாக்டீரியாக்களை கொல்லும் கிருமி கொல்லியாகவும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை அதிகம் உள்ளதால் புற்று செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், கல்லீரல் செயல்பாட்டை தூண்டுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. லவங்கப்பட்டை பாரம்பர்ய சீன மருத்துவத்தில், வலிப்பு நோய்க்கு எதிராகவும், தூக்கமின்மைக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவிய காலத்தில் பிரசித்தி பெற்ற ‘ஆயுஷ் குவாத்’ எனும் ‘ஆயுஷ் குடிநீர்’ துளசி, மிளகு, சுக்கு இவற்றுடன் லவங்கப்பட்டை சேர்வது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் லவங்கப்பட்டை சளி காய்ச்சலை உண்டாக்கும் இன்ப்ளுயன்சா கிருமிக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

மேலும், வயிறு வலி, வாய்குமட்டல், அசீரணம், மந்தம் போன்ற வயிறு சார்ந்த நோய் நிலைகளில் கூட நல்ல பலன் தரும். வயிறுப்புண் எரிச்சல் உள்ளவர்கள் அளவோடு பயன்படுத்தல் நல்லது.

லவங்கப்பட்டையில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உடலில் கணையத்தில் உள்ள ஆல்பா அமைலேஸ் மற்றும் குடலில் உள்ள ஆல்பா குளூக்கோஸிடேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதன் மூலமாகவும், நம் உடல் செல்களில் குளுக்கோஸ் உட்கிரகித்தலை அதிகரிப்பதன் மூலமாகவும், கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுவதன் மூலமும், இன்சுலின் ஏற்பிகளின் செயலை தூண்டுவதன் மூலமும்  ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பிரியாணி போன்ற உணவுப்பொருள்களில் லவங்கப்பட்டையை சேர்ப்பதன் காரணத்தை ஊகித்தால், வயிறு நிரம்ப உணவு உண்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்காக தான் என்பது இதில் தெரிய வருகிறது. இதை தான் நம் முன்னோர்கள் 'உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்று குறிப்பிட்டு வந்தனர் போலும். சித்த மருத்துவம் நம் வாழ்வியல் முறை என்பதற்கு இதுவே உதாரணம்.

ஆக, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க மாத்திரைகளோடு மன்றாடுபவர்கள், நாள்தோறும் லவங்கப்பட்டை, சீரகம், வெந்தயம், துளசி இவை சேர்ந்த தேநீர் செய்து பருகி வந்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவும், கொழுப்பின் அளவும் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமிடலாம். 

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள நறுமணப் பொருள்களை உணவாக எடுத்துக்கொண்டால் உடலும் மனமும் செம்மையாகி சுகம் கிட்டும் என்பது உறுதி.  

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

ADVERTISEMENT
ADVERTISEMENT