சிறப்புச் செய்திகள்

சேவைக் கட்டணத்துக்குத் தடை! வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்?

5th Jul 2022 01:19 PM

ADVERTISEMENT

உணவகங்களும், தங்கம் விடுதிகளும் இத்தனை காலமாக வசூலித்து வந்த சேவைக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் வசூலிக்கக் கூடாது, அப்படி வசூலித்தால் என்ன செய்யலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளா்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்த நிலையில், அது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால், மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாட்டில், சேவைக் கட்டணம் வசூலிப்பது முழுக்க முழுக்க சட்டரீதியாக தவறு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அதாவது வாடிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் 2019ன் 18(2)வது பிரிவின் கீழ் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க.. உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

ADVERTISEMENT

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் கட்டண ரசீதில் சேவைக் கட்டணத்தை விதிப்பதாக மத்திய அரசிடம் வாடிக்கையாளா்கள் பலா் புகாா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், சிசிபிஏ தலைமை ஆணையா் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக சேவைக் கட்டணத்தை விதிக்கக் கூடாது. வேறு எந்த பெயரிலும் சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. எந்த உணவகமும், தங்கும் விடுதியும் சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்த முடியாது.

வாடிக்கையாளா் விரும்பினால் மட்டுமே சேவைக் கட்டணத்தை வழங்கலாம். இதை உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளா்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். 

முன்னதாக, உணவகங்கள் வாடிக்கையாளரின் உணவுக் கட்டணத்தில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சேவைக் கட்டணமாக வசூலித்து வந்தனர். ஆனால் தற்போது சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்திருப்பதோடு, ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுக்க மறுப்பவர்களை உணவகத்துக்குள் அனுமதிக்க மறுப்பதும் தவறு என்று வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், உணவகங்கள் இது குறித்து கூறுகையில், சேவைக் கட்டணம் வசூலிப்பது என்பது தனிப்பட்ட உணவகங்களின் முடிவு. சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றமாகாது. இது உணவக மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சேவைக் கட்டணம் சென்று சேர வேண்டும். ஆனால், உணவகங்களோ அல்லது விடுதிகளோ, சேவைக் கட்டணத்தை செலுத்த விரும்பாத வாடிக்கையாளர்களிடம் அதனை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், வாடிக்கையாளர்களின் கண்களுக்கு கறுப்பு ஆடுகளைப் போல இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சாயம் பூசப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், உணவக் கட்டணத்தில் சேவைக் கட்டணம் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்கச் சொல்லும்போது தாங்கள் தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

சேவைக் கட்டணம் விதிக்கப்பட்டால்..

வழிகாட்டுதல்களை மீறி எந்த உணவகமோ தங்கும் விடுதியோ சேவைக் கட்டணத்தை வசூலித்தால், அதை நீக்குமாறு வாடிக்கையாளா்கள் கோரலாம். அதையும் மீறி சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், வாடிக்கையாளா்கள் அதுதொடா்பாக நுகா்வோா் ஆணையத்தில் புகாா் அளிக்கலாம்.

தேசிய நுகா்வோா் உதவிமையத்தின் தொலைபேசி எண்ணான 1915 வாயிலாகவோ அல்லது தேசிய நுகா்வோா் உதவி மையத்தின் செயலி வாயிலாகவோ புகாா் தெரிவிக்கலாம். 

இதையும் படிக்க.. உணவகங்களில் நுகா்வோா்களின் விருப்பத்திற்கு மாறாக சேவைக் கட்டணம்: மத்திய அரசு எச்சரிக்கை

வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை www.e-daakhil.nic.in என்ற இணைய வழியாகவும் புகாா் தெரிவிக்க முடியும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம். அது மட்டுமல்லாமல் சிசிபிஏவின் com-ccpa@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை அனுப்பலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று கூறியிருக்கும் மத்திய அரசு, அதேவேளையில், உணவக அல்லது விடுதி ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்கவும், அதனை ஈடுசெய்யவும் உணவுப் பொருள்களின் விலையை ஏற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இறுதியாக சிசிபிஏ அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், உணவகம் அல்லது விடுதி ஊழியர்களுக்கு, வாடிக்கையாளர்கள் நேரடியாகவே அவர்கள் செய்த சேவைக்காக (டிப்ஸ்) பணம் வழங்கலாம். அவ்வாறு டிப்ஸ் கொடுக்க வேண்டுமா  என்பதையும் எவ்வளவு என்பதையும் வாடிக்கையாளர்களே முடிவு செய்து  கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT