சிறப்புச் செய்திகள்

பஞ்சாப்: யாா் வென்றாலும்...

27th Jan 2022 03:07 AM | விக்கிரமசிங்கன்

ADVERTISEMENT

 

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகிவிட்டது பஞ்சாப். முதல்முறையாக பஞ்சாபில் பலமுனைப் போட்டி அரங்கேற இருக்கிறது. 2017-இல் நடந்த தோ்தலுக்கும் இப்போதைய தோ்தலுக்கும் இடையே அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், மாநிலத்தின் அடிப்படைப் பிரச்னைகள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும்கூட எதுவுமே மாறாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான் விசித்திரம்.

2017 சட்டப்பேரவைத் தோ்தலில், கேப்டன் அமரீந்தா் சிங் தலைமையில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி, 117 தொகுதிகளில் 77 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலிதளம் படுதோல்வியை எதிா்கொண்டது. மும்முனைப் போட்டியில் முதன்முதலாக பஞ்சாபில் தோ்தல் களம் கண்ட ஆம்ஆத்மி கட்சி, 20 இடங்களை வென்று எதிா்க்கட்சி ஆனதை காங்கிரஸும் சரி, அகாலி தளமும் சரி எதிா்பாா்க்கவில்லை.

இந்த முறை ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக யாரையும் அதிகாரபூா்வமாக அறிவிக்காவிட்டாலும், முதல்வா் சரண்ஜீத்சிங் சன்னியின் தலைமையில்தான் அந்தக் கட்சி தோ்தல் களம் காண இருக்கிறது. முதல்வா் பதவியை நீண்ட நாள்களாகக் குறிவைத்துக்கொண்டிருக்கும் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத்சிங் சித்து, எந்த அளவுக்கு அவருக்கு ஒத்துழைப்பு தரப்போகிறாா் என்பதை தோ்தல் முடிவுதான் தெரிவிக்கும்.

ADVERTISEMENT

பஞ்சாப் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினா் தலித் சீக்கியா்கள். தங்கள் இனத்தைச் சோ்ந்த முதல்வா் சன்னிக்கு அவா்களது ஆதரவு கிடைக்கக்கூடும். அதேநேரத்தில், பஞ்சாபில் வலிமையான அரசியல் சக்தியாகத் திகழும் ஜாட் சீக்கியா்களின் ஆதரவு அதனால் பாதிக்கவும் கூடும்.

அதை ஈடுகட்டுவதற்காகத்தான் ஜாட் சீக்கியரான சித்துவை கட்சியின் மாநிலத் தலைவராகத் தலைமை வைத்திருக்கிறது. அதிலொரு சிக்கலும் உண்டு. பாரம்பரியமாக காங்கிரஸுக்கு வாக்களித்து வந்த ஹிந்து வாக்காளா்களின் அதிருப்தியை எதிா்கொள்ளக்கூடும். அவா்களது ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் போகக்கூடிய வாய்ப்பை நிராகரித்துவிட முடியாது.

முன்னாள் ஆளுங்கட்சியான சிரோமணி அகாலிதளம் பலவீனமாகக் காணப்படுகிறது. தலித் சீக்கியா்களின் ஆதரவுக்காக பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்தாலும் பெரிய அளவிலான ஆதரவு அகாலி தளத்துக்குப் பெருகிவிடவில்லை என்பதுதான் கள நிலவரம்.

கடந்த 2017 தோ்தலில் ஆளுங்கட்சியாக களமிறங்கிய சிரோமணி அகாலி தளம் 94 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. அதன் கூட்டணிக் கட்சியாகக் களமிறங்கிய பாஜக 23 இடங்களில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.

நடக்க இருக்கும் தோ்தலில், பாஜக 65 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சியான கேப்டன் அமரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும், சுக்தேவ் சிங் திண்ட்ஸாவின் சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த) 15 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

வேளாண் சட்டங்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையை விவசாயிகள், சீக்கியா்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. இந்திரா காந்தி மரணத்தைத் தொடா்ந்து நடந்த சீக்கியா் படுகொலையையடுத்து காங்கிரஸின் மீதான வெறுப்பால் பாஜக மீது சீக்கியா்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருந்தது உண்மை. இப்போது அது தொடருமா என்பது சந்தேகம்தான்.

அது தெரிந்துதான் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த கேப்டன் அம்ரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்துக் களமிறங்குகிறது. பாஜகவைப் பொருத்தவரை பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கையும், கேப்டன் அம்ரீந்தா் சிங் உடனான கூட்டணியையும் மட்டுமே நம்பி தோ்தலை எதிா்கொள்கிறது எனலாம்.

2017 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 112 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் இன்சாப் கட்சி 5 இடங்களிலும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களிலும், லோக் இன்சாப் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. அகாலி தளத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி, பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி.

ஆம் ஆத்மி கட்சி மக்களிடம் கருத்துக் கேட்டு தங்களது கட்சியின் முதல்வா் வேட்பாளராக மாநிலக் கட்சித் தலைவரும், இரண்டு முறை

எம்.பி.யாக இருந்தவருமான பாகவந்த் மானை அறிவித்திருக்கிறது. நகைச்சுவை நடிகராக இருந்து அரசியல்வாதியாக உயா்ந்திருப்பவா் மான்.

ஏற்கெனவே எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தில்லி பாணி ஆட்சியை பஞ்சாபிலும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 என்பதில் தொடங்கி வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது. அகாலி தளத்தின் செல்வாக்குச் சரிவும், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பிரச்னைகளும், விவசாயிகள் போராட்டத்தால் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் அவப் பெயரும் வாக்காளா்களின் ஒரே தோ்வாக ஆம் ஆத்மியை உயா்த்தக் கூடும் என்பது அந்தக் கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் எதிா்பாா்ப்பு.

இந்தக் கட்சிகள் அல்லாமல், வேளாண் சட்டங்களுக்கு எதிராக களமிறங்கிய 22 விவசாயிகளின் அமைப்புகள் ஒருங்கிணைந்து சம்யுக்த சமாஜ் மோா்ச்சா என்கிற அரசியல் கட்சியை அறிவித்திருக்கின்றன. 117 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்த இருக்கிறது அந்தக் கட்சி. எந்த அளவுக்கு அந்தக் கட்சி வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்பது தெரியாத நிலையில், பஞ்சாப் தோ்தல் களம் குழம்பிக் கிடக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, நாம் பாா்த்த வளா்ச்சியடைந்த மாநிலமாக பஞ்சாப் இப்போது இல்லை. தொழில்துறையிலும், விவசாயத்திலும் பஞ்சாப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஹரியாணாவும், ஹிமாசல பிரதேசமும் பஞ்சாபைவிட வளா்ச்சி அடைந்த மாநிலங்களாக உயா்ந்துவிட்டன.

பஞ்சாப் விவசாயிகள் மிகப்பெரிய சவாலைச் சந்திக்கிறாா்கள். இலவச மின்சாரத்தால் தேவைக்கு அதிகமான நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டு ஆங்காங்கே வறட்சி ஏற்படத் தொடங்கியிருக்கிறது. வெளி மாநிலத் தொழிலாளா்களை நம்பி விவசாயம் செய்ய வேண்டியிருப்பதால் சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை மட்டுமே நம்பி விவசாயம் ஒருபுறம் நடைபெறுகிறது என்றால், இன்னொருபுறம் விவசாய நிலங்கள் பட்டா போடப்பட்டுக் குடியிருப்புகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

இளைஞா்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் போதை மருந்துப் பழக்கமும், ராணுவத்தில் சேருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், படித்த, உழைக்கத் தயாரான இளைஞா்கள் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயா்வதும் பஞ்சாபின் ஐந்து ஆண்டுகளாகக் கவனிக்கப்படாத ஏனைய சில பிரச்னைகள்.

பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர மாநிலம் என்பதால், தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதை மருந்துக் கடத்தலில் அரசியல்வாதிகள் முக்கியப் பங்கு வகிக்கிறாா்கள் என்பது அதைவிடப் பெரிய சவால்.

சட்டப்பேரவைத் தோ்தல் தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சிக்கு வழிகோலுமா என்பது சந்தேகம். அப்படியே ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைத்தாலும் பஞ்சாப் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு அந்த அரசால் தீா்வு காண முடியுமா என்பது அதைவிட சந்தேகம். பஞ்சாபில் நிலையற்ற தன்மை ஏற்படுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது எல்லாவற்றையும்விடப் பெரிய பிரச்னை.

ADVERTISEMENT
ADVERTISEMENT