சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘கோவைக்காய்’ சர்க்கரை நோய் பற்றிய பயத்தை போக்குமா?

26th Jan 2022 11:59 AM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்

ADVERTISEMENT


நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் மக்கள்தொகை போல், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகின்றது. மறந்து போன பாரம்பரிய உணவு முறைகளும், உடல் உழைப்பும், மாறிபோன வாழ்வியல் கலாச்சாரமும் அதில் முக்கிய பங்காற்றுகின்றன. 

சர்க்கரை வியாதி இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல், வருங்கால சந்ததிகளுக்கும் மிகப்பெரிய சவால். 

சர்க்கரை நோய் என்றாலே பலருக்கு பயம் தான். ஏனெனில் சர்க்கரை வந்துவிட்டாலே மற்ற எல்லா நோய்களும் அழையா விருந்தாளியாக நம் உடலினை வந்தடையும். அதிலும் முக்கியமாக சர்க்கரை நோயின் சிக்கல்கள் (காம்ப்ளீகேஷன்) என்பது கொடுமையிலும் கொடுமை. சிறு மற்றும் பெரு ரத்த குழாய்களில் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண் நரம்பு பாதிப்பு, உடல் நரம்புகளில் பாதிப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதுவும் இது மரபு வழி நோய் என்பதால் தாய், தந்தையரின் பிரிக்கப்படாத சொத்தாக அடுத்த சந்ததிக்கும் வந்து சேருவது நினைக்கும் போதே பலருக்கும் பயம் தான்.

“டாக்டர் எங்க அப்பா, அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருக்கு. எனக்கும் சர்க்கரை நோய் வந்துடுமா?, வராமல் இருக்க என்ன செய்வது? சர்க்கரை நோய் வருவதை நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு” என்று அச்சத்தில் ஆழ்ந்து கிடப்பவர்கள் ஏராளம். 

ADVERTISEMENT

"அன்றாடம் செய்யும் உடற்பயிற்சியும், அவ்வப்போது சேர்த்துக்கொள்ளும் பாரம்பரிய உணவு முறைகளும் சர்க்கரைநோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்". 

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு மூலிகை உணவுப் பொருள்களுக்கு இன்சுலின் ஹார்மோனை சுரக்கும் (இன்சுலினோட்ரோபிக்) தன்மையுள்ளதாக உள்ளது. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் (ப்ரீ-டயாபெடிக்) உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் உள்ள பயத்திற்கு பதில் சொல்லும் வகையில் பல சித்த மருத்துவ மூலிகை உணவுப் பொருள்கள் வரிசைக்கட்டிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான் நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் ‘கோவைக்காய்’.

‘டாக்டர் நாங்க கோவைக்காயை அடிக்கடி உணவில் பயன்படுத்திக்கொண்டு தான் வருகிறோம், அது வாய்ப்புண்ணிற்கும், வயிற்றுப்புண்ணிற்கும் தானே உதவும்? என்று பலருக்கும் தோன்றும். அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது, கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு மட்டுமல்ல, மருந்தும் தான். கோவைக்காயை உணவில் அதிகம் சேர்ப்பதனால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். அதோடு சர்க்கரை நோயினால் ஏற்படும் பின் சிக்கல்களையும் தடுக்க முடியும்.  

சர்க்கரையின் சிக்கல்களுக்கு (காம்ப்ளீகேஷன்) காரணம், நோயின் நாள்பட்ட நிலையில் கபக் குற்றம் பாதிக்கப்படுவதே என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.  

‘பித்தம் அடங்கிடின் பேசாதே போய்விடு, எத்திய ஐயம்(கபம்) எழுந்திடின் கிட்டதே’ என்று, கப குற்றம் அதிகமானால் உயிர் பிழைக்க வைப்பது மிகக் கடினம் என்ற பொருள் மேற்கூறிய சித்த மருத்துவ வரிகளால் விளங்கிடும். 

கோவைக்காய் கபக் குற்றப் பாதிப்பை நீக்கும் என்பதை ‘வாயின் அரோசகம் போம் மாற அழலை அறும், நோயிற் கபம் அகலும் நுண்ணிடையே’ என்ற அகத்தியர் குணவாகப்பாடலால் அறியலாம். 

கோவைக்காயில் உள்ள அல்கலாய்டுகள், டானின்கள், சப்போனின்கள், பீனோல், எல்லாஜிக் அமிலம், ட்ரைடெர்பீனாய்டுகள், க்ளைக்கோசைடுகள் அதன் மருத்துவ குணங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளன. இதன் காயில் அதிகப்படியாக உள்ள லைகோபீன்கள், கரோடினாய்டுகள் மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுடையதாக உள்ளது. 

இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சர்க்கரை நோயின் சிக்கல்களை தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

கோவைக்காயில் உள்ள இத்தகைய வேதிப்பொருள்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதோடு, சர்க்கரை நோயின் முக்கிய சிக்கல்களுக்கு (சிறு ரத்த குழாய் அடைப்பு, நரம்பு பாதிப்பு) காரணமான ஏஜீஈ எனப்படும் இறுதி வேதிப்பொருள்கள் உண்டாவதை தடுப்பதாகவும் உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோய்கள் உண்டாகாமல் தடுக்க முடியும். 

மேலும் அதில் உள்ள பெக்டின் வகையான கரைக்கூடிய நார்சத்து நேரடியாக ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை வாய்ந்தது. கோவைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப்பொருள்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க உதவும் (இன்சுலினோட்ரோபிக்) செய்கையும் இதற்குண்டு. இவை கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது. சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பையும் தடுத்து நிறுத்தும்.

ஆகவே சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாளுக்குநாள் மருந்தின் எண்ணிக்கையை கூட்டுவதை விட, உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி பக்க விளைவுகள் இல்லாத, பயம் இல்லாத ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியும். 

அடிக்கடி சித்த மருத்துவ மூலிகையான கோவைக்காயை உணவில் ஏதாவது ஒருவகையில் சேர்த்துக்கொள்ள, அன்றாடம் அதைக் கொத்தி தின்னும் கிளியை போல நாமும் சர்க்கரை நோய் பற்றிய கவலை இன்றி சிறகடித்து வாழ முடியும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT