சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும் தித்திக்கும் ‘கரும்பு’ 

மரு.சோ.தில்லைவாணன்

கரும்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது, பாரம்பரியமான தமிழர் திருநாளான ‘பொங்கல் விழா’ தான். என்ன தான் கரும்பு சாறினை நாம் ஆண்டு முழுதும் குடித்து வந்தாலும், இதனை பொங்கல் விழாக் காலத்தில் பயன்படுத்துவது தான் சிறப்பு. 

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரைக்கும், வெல்லத்திற்கும் ஆதாரமே இந்த ‘கரும்பு’ தான். அப்படி இருக்கையில் இந்த கரும்பினை பற்றியும், சர்க்கரை, வெல்லம் பற்றியும் சித்த மருத்துவம் என்ன சொல்கின்றது?, உச்சி வெயிலில் குடிக்கும் கரும்பு சாறு பித்தத்தை மட்டுமல்ல, ரத்த அழுத்தத்தையும் எப்படி குறைக்கிறது என்று பார்க்கலாம்.

இனிப்பு என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் சுவை. அறுசுவைகளுள் முதன்மையான இந்த இனிப்பு சுவையை நமக்கு அளிக்கும் கரும்பிற்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் பொங்கல் பண்டிகையில் இதெற்கென்று தனி இடம் உண்டு. 

அதன் இனிப்பு சுவைக்கு அதில் உள்ள ‘சுக்ரோஸ்’ என்ற கார்போஹைட்ரேட் தான் காரணம். இனிப்பு சுவைக்கு அப்பால் கரும்பிற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உண்டு.

ரத்த அழுத்த பரிசோதனை

கரும்பு சாற்றினால் ‘மேகம் பித்தம் மிண்டாமற் சாந்தி உறும்’ என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. அதன்படி தான் கரும்பு சாற்றுடன், இஞ்சியும், எலுமிச்சை பழச்சாறும் சேர்த்து உடலை குளிர்ச்சியாகவும், அதிகரித்த பித்தத்தை போக்கவும் நாம் குடிப்பது காலம்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. 

அதுமட்டுமின்றி சிறுநீரை அதிகரிக்கும் ‘டையூரிட்டிக்’ செய்கையும் இதற்கு உண்டு. மேலும் இதில் சேரும் இஞ்சியும், எலுமிச்சையும் பித்தத்தை குறைக்க உதவும் என்பதோடு அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டது. இவை மூன்றும் சேர்ந்த சாறு குடிப்பது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள வீக்கங்களை குறைக்கவும் உதவும். கிருமிகளை கொல்லும் தன்மையும் கரும்பிற்கு உண்டு. 

பித்தத்தை குறைக்கும் அனேக மருந்துகளுக்கு சித்த மருத்துவத்தில் ‘அனுபானமாக’ கரும்பு சாறு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதிலிருந்து கரும்பு சாறு ‘கல்லீரல் நோய்களுக்கும்’ உதவும் என்றும் அறியப்படுகின்றது. பித்தத்தை குறைக்கும் மருந்தாகையால் கப நோயாகிய ஆஸ்துமா, சளி, இருமல் இவற்றால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்புடையதல்ல.

கரும்பு சாற்றில் 70-75 சதவிகிதம் நீர்சத்தும், 13-15 சதவிகிதம் சுக்ரோஸ் மற்றும் 10-15 சதவிகிதம் நார்ச்சத்தும் உள்ளது. கரும்பு சாற்றின் நிறத்திற்கு காரணம் அதில் உள்ள நிறமிகள் மட்டுமல்ல. அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள பிளவனாய்டுகளும் தான். 

அதில் முக்கியமாக பீனோலிக் அமில வகையான ஹைட்ராக்சி சின்னமிக் அமிலம், கஃபியிக் அமிலமும், அபிஜெனின், லுட்டியோலின், ட்ரிசின் ஆகிய பிளேவோன் வேதிப்பொருட்களும் உள்ளன. இவையே கரும்பின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன .     

இதில் உள்ள ‘பாலிகோசனால்’ என்ற வேதிப்பொருள் நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து (எல்டிஎல்), நல்ல கொழுப்பினை அதிகரிக்கும் (எச்டிஎல்) தன்மையும், கொழுப்பின் அளவையும், ட்ரைகிளிசரைடு அளவையும் குறைப்பதாக உள்ளது. இதன் மூலம் இருதய சம்மந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றது. 

கரும்பு சாறு பிழிந்தெடுக்கும் இயந்திரம்.

மேலும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பையும் கரைக்கும் தன்மை உடையது. கொழுப்பினால் அதிகரித்த ரத்த அழுத்தமும் குறைக்க கூடியது. உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் கால் வலி, நடக்கும் போது ஏற்படும் கால் வலிக்கும் இவை நல்ல பலனை தரும். 

ஆகவே இஞ்சி, எலுமிச்சை பழச்சாறு சேர்ந்த கரும்பு சாறினை தினசரி எடுப்பதால் இருதய நோய்களையும் விரட்ட முடியும். ரத்த பித்தம் குறைந்து ரத்த அழுத்தம் குறையும்.

கரும்பு சாற்றில் செய்த வெல்லத்தால் ‘நீரிழிவு நோய்’ வருமென சித்த மருத்துவம் கூறுகின்றது. ‘மெல்ல மதுநீரை விளைவிக்கும் மாமதுர வெல்லம்’ என்ற பாடல் வரிகளால் இதை அறியலாம். 

கரும்பினால் செய்யப்படும் சீனி சர்க்கரையால் வாந்தி, விக்கல் ,கிருமி நோய்கள் தீரும் என்றும், கெட்டிப்பட்ட சளியை இளக்கி வெளிப்படுத்தும் என்றும் சித்த மருத்துவ பாடல்களால் அறியப்படுகின்றது. 

ஆகையால் இன்றளவும் வாந்தி எடுத்தாலோ, வாந்தி வரும் உணர்வோ ஏற்பட்டவுடன் சர்க்கரை வாயிலிடுவதும் நம் சித்த மருத்துவ வழக்கு முறை தான் என்பதற்கு உதாரணம். 

தெரிந்தோ, தெரியாமலோ அனைவரும் அன்றாட வாழ்வில் சித்த மருத்துவத்தை பழகி வருவது நம் பாரம்பரியத்தின் அடையாளம்.

தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு போன்ற பல்வேறு கபத்தை (சளியை) கரைக்கும் சித்த மருந்துகளில் சர்க்கரை சேருவது சுவைக்காக மட்டுமல்ல மருத்துவ குணத்திற்காகவும் தான். 

மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீசியம் போன்ற கனிம சத்துக்களும் உள்ளதால் எலும்புகளுக்கு வன்மையை தரும்.  

சித்த மருத்துவம் நம் வாழ்வியலோடும், நம் பாரம்பரியத்தோடும் ஒன்றிப்போன ஒன்று. அதற்கு கரும்பு மட்டுமல்ல இன்னும் பலப்பல உதாரணங்களை கூற முடியும். 

பொங்கல் பண்டிகையும், கரும்பும் போன்ற பல்வேறு பாரம்பரிய விழாக்களையும், அதில் பயன்படுத்தும் மூலிகைகள் பற்றியும் சித்த மருத்துவ பார்வையில் உற்று நோக்கினால் அனைத்தும் நம் உடல் நலத்திற்கே என்பது விளங்கும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் நல்வாழ்த்துகள்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT