சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: 'அடோபி'க்கு அருமருந்தாகுமா ‘தூதுவளை’?

12th Jan 2022 11:57 AM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்

ADVERTISEMENT


                
தலைப்பை படித்தவுடன் பலருக்கும் கேட்க தோன்றும் ஒரே கேள்வி அதென்ன 'அடோபி' (atopy) என்பது தான். அடோபி என்பது நம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலுடன் தொடர்புடைய ஒரு ஒவ்வாமை நோய் நிலை. 

அதாவது சாதாரணமாக நாம் எதிர்க்கொள்ளும் தூசியோ, சாப்பிடும் உணவில் உள்ள ஒரு பொருளோ வழக்கத்திற்கு மாறாக அதிக ஒவ்வாமையை ஏற்படுத்தும் நிலை. 

“டாக்டர் காலையில் எழுந்தவுடன் தும்மல் மூக்கு நீர் ஒழுகல் வருது, அப்புறம் லேசா இருமல் வருது,அப்புறம் அதுவே ஆஸ்துமாவா மாறிடுது” என்று ஒரு சாராரும், அல்லது “தும்மலோ,அது இல்லாவிட்டால் தோலில் நமைச்சலோ மாறி மாறி எதாவது ஒண்ணு வந்துட்டே தான் இருக்கு” என்று இந்த அடோபியால் வருத்தப்படுபவர் இன்னொரு சாரார். மொத்தத்தில் ‘அலர்ஜி’ என்ற ஒன்று ஏதாவது ஒரு வகையில் உடலினை விட்டு நீங்காமல் தொல்லை தந்துக்கொண்டே இருக்கிறது என்பது தான் அவர்களின் வருத்தம்.

ADVERTISEMENT

தூதுவளை

‘டாக்டர் எல்லாரும் சாப்பிடுறது தான் நான் சாப்பிட்டேன், எனக்கு மட்டும் ஏன் இந்த அலர்ஜி வருதுன்னு தெரியல’ என்று அலர்ஜியை கண்டு அலறும் பலருக்கும், உதவும் சித்த மருத்துவ மூலிகைகள் பல பக்க விளைவுகள் இன்றி உள்ளன. அந்த வகையில் இந்த அடோபியை போக்கும் எளிய சித்த மருத்துவ மூலிகைக் கீரை தான் 'தூதுவளை'.  தூதுவளை சளி, இருமலுக்கு நல்லதுன்னு தெரியும். 

கரோனா ஆரம்பித்த காலத்தில் இருந்தே தூதுவளையை பயன்படுத்துவர் ஏராளம். அதெப்படி அடோபிக்கு உதவும்? சித்த மருத்துவம் என்ன சொல்கின்றது ? பார்க்கலாம்.

தூதுவளை-க்கு பெயர்காரணம் பார்த்தால் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நம்மவர்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்று புரிய வைக்கும். தூது என்பது நாம் சொல்கின்ற ஒரு விஷயம் அல்லது வார்த்தை. அந்த வார்த்தையை நம் உடலில் உண்டாக்கும் உறுப்பு குரல்வளை (லாரின்க்ஸ்).இப்போது புரிய வரும் பெயர்க்காரணம். குரல்வளை சார்ந்த நோய்க்களை நீக்குவதால் இப்பெயர் பெற்றுள்ளது. 

சரியாக பேச முடியாமல் 'லாரின்ஜைடிஸ்' என்ற 'குரல்வளை தாபிதத்தால்' அவதிப்படும் பலருக்கும் இது நல்ல பலனை தரும். இதற்க்கு சித்த மருத்துவத்தில் மற்றொரு பெயர் 'சிங்கவல்லி' என்பது. சிங்கம் போன்ற கர்ஜித்தலை உண்டாக்கும் குரல்வளையை பாதுகாக்கும் என்பது இதன் பொருள். ஆமாம், பெயர்க்காரணம் தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பு தன்மை எனலாம்.

கார்ப்பு சுவையும், நாக்கில் பட்டவுடனே விறுவிறு என்ற சிறு கைப்புடன், காரமுடன் உள்ளது இந்த தூதுவளைக் கீரையின் சிறப்பு. இதன் இலைக்கு உள்ளது போல, பூவிற்கும், காய்க்கும், வேருக்கும் கூட நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. ‘கபமல்லாது காசம் சுவாசம் காணாது’ என்பது தேரையர் சித்தரின் நோய்களுக்கான முதல் காரணம். அதாவது இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ‘கபம்’ என்ற சளியை காரணம். இந்த கப குற்றத்தை (சளியை) போக்கக்கூடியது இந்த தூதுவளை. 

சித்த மருத்துவமும், 'காது மந்தம் காத்தெழுச்சி காசம் தினவு மதம், ஓதுமந்தம் முத்தோடம் உட்சூலை' இவற்றை போக்கும் தூதுவளை இலை(கீரை) என்று கூறுகின்றது. இதில் சித்த மருத்துவம் காசம், தினவு என்று இருமலையும், நமைச்சலையும் குறிப்பிட்டுள்ளது ‘அடோபி’யின் குறிகுணங்கள் தான்.
தூதுவளையில் உள்ள சொபடம், சொலசோடின், சோலைன், டோமடிடின், டயோஸ்ஜெனின் போன்ற முக்கிய வேதிப்பொருள்கள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன.

மேலும் இதில் தாவர ஸ்டெராய்டுகள், சபோனின், டேனின், கார்டியாக் க்ளைகோசைடுகள் ஆகியவையும் உள்ளது. சொபடம், சொலசோடின் ஆகிய வேதிப்பொருட்கள் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட குரல்வளை வீக்கம் மட்டுமின்றி, உடலில் பல்வேறு வீக்கங்களுக்கு எதிராக செயல்படுவதாக உள்ளது. 

மேலும் இவை அடோபி-க்கு காரணமான மாஸ்ட் செல்களின் சிதைவை தடுத்து அடோபிக் அலர்ஜியை உண்டவாக்குவதை இயற்கையாக குறைக்கிறது. மேலும் அத்தகைய அலர்ஜியை தூண்டும் காரணிகளான இன்டர்லூக்கின்-1 மற்றும் 8 இவற்றை ஒழுங்குபடுத்துவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும், பிளவனாய்டு நிறமிசத்துக்கள் உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படக்கூடியது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிறப்பான தன்மையும் இதற்குண்டு.  

இத்தகைய சிறப்பான தூதுவளை கீரையை துவையலாகவோ, அல்லது இதனுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், உப்பு, பெருங்காயம் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்களுடன் சேர்த்து ரசமாகவோ வைத்து வாரம் இருமுறை எடுக்க நல்ல பலனை தரும். 

மேற்க்கூறிய நோய் நிலைகளில் இருந்து காக்கும். அடிக்கடி அடோபி அலர்ஜி தன்மையை போக்க ஆன்டி-ஹிஸ்டமின் மருந்துகளை எடுத்து சோர்ந்து போன பலருக்கும், தூதுவளை கீரை பெரும் பயனளிக்கும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com
 

ADVERTISEMENT
ADVERTISEMENT