சிறப்புச் செய்திகள்

முதலிடத்தில் சன் டிவியின் 3 தொடர்கள்: விஜய், ஜீ தமிழ் நிலை இதுதான்?

1st Feb 2022 05:41 PM

ADVERTISEMENT

 

தொலைக்காட்சித் தொடர்களுக்கான வாராந்திர டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் எப்போதும்போல சன் தொலைக்காட்சியின் தொடர்கள் முதலிடம் பிடித்துள்ளன. 

கடந்த எட்டு வாரங்களாக சன் தொலைக்காட்சியின் தொடர்கள் மட்டுமே முன்னிலை இடம் வகித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் விஜய் தொலைக்காட்சியின் 'பாக்கியலட்சுமி' தொடர் முதலிடத்தில் இருந்தது. 

அதனைப் பின்னுக்குத்தள்ளி சன் தொலைக்காட்சி கடந்த எட்டு வாரங்களாக முதலிடத்தில் உள்ளது. இதன் முக்கிய காரணம் கயல் தொடர் என்றால் மிகையாகாது.

ADVERTISEMENT

கயல் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் தொலைக்காட்சியில் வாரநாள்களில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் முக்கிய கதாபாத்திரங்களிலும், அபிநவ்யா, காயத்ரி ஜெயராமன் உள்ளிட்ட பலர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.

கயல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் வாரமே முன்னணி தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. கதைக்களமும், கதாபாத்திர வடிவமைப்பும், ஒளிபரப்பான நேரமும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

பின்னர் சில இறக்கங்களை சந்தித்த கயல் தொடர், கடந்த நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடர்ந்து அதிக புள்ளிகளைப் பெற்று டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக சுந்தரி தொடர். இதுவும் சன் தொலைக்காட்சியில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகக்கூடிய தொடர். இதுவும் கடந்த எட்டு வாரங்களாக டாப் 5 இடத்தில் இடம்பெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ஆரம்பகட்டத்தை விட தற்போது அதிக கவனம் ஈர்த்து வருகிறது.

கிராமத்துப் பெண் தனது திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தடைகளைக் கடந்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவிற்கு போராடி வருவதே தொடரின் முக்கிய கரு. தற்போது கணவனைப் பிரிய நேர்ந்து தைரியமாக முன்னேறும் பெண்ணாக சுந்தரி மாறியுள்ளதால் பல இல்லத்தரசிகளின் விருப்பத் தொடராக கயல் இருந்து வருகிறது.

இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘வானத்தைப்போல..’ தொடர் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களாக டாப் 3 இடங்களில் இந்த தொடர் நீடித்து வருகிறது. அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்த கதை என்பதால் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அண்ணன் சந்திக்கும் துயர்கள், புகுந்த வீட்டில் தங்கை அனுபவிக்கும் துயர்கள் என்று கதைக்களம் நகர்வதால் இந்த தொடருக்கு நாளுக்கு நாள் பார்வையாளர்கள் கூடிக்கொண்டே செல்கின்றனர். 

சன்-க்கு பிறகு விஜய் தொலைக்காட்சி

முதல் மூன்று இடங்களிலும் சன் தொலைக்காட்சி தொடர்கள் இடம் பெற்ற நிலையில், நான்காவது இடத்தில் 'பாரதி கண்ணம்மா' தொடர் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அதிகமாக சமூக வலைதளங்களில் கேளிக்கு உள்ளான தொடர் பாரதி கண்ணம்மா. பல இளம் தலைமுறையினர் வரை இந்த தொடர் சென்றடைந்ததற்கான முக்கிய காரணம் சமூல வலைதளங்களில் வலம் வந்த மீம்ஸ்கள்தான். 

2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கர்ப்பிணியாக வீட்டைவிட்டு தைரியமாக வெளியேறும் கண்ணம்மாவும், குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கச் சொல்லும் பாரதி கதாபாத்திரமும் கேளியையும் தாண்டி பலருக்கு பிடித்தமான தொடராகவே இருக்கிறது. 

இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் ரோஜா தொடர் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாக்கியலட்சுமி தொடர் 6-வது இடத்தையும், கண்ணான கண்ணே 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைப் பெற்ற விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் ராஜா ராணி 9-வது இடத்தையும், சன் தொலைக்காட்சியின் அபியும் நானும் தொடர் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

முதல் 20 இடங்களுக்கான டிஆர்பி பட்டியலில் ஒன்று கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொடர்கள் இடம் பெறவில்லை. விஜய் தொலைக்காட்சியின் தொடர்களுக்கு இணையாக நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் தயாரித்து வந்த ஜீ தமிழ் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பின்தங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT