சிறப்புச் செய்திகள்

பிகாரில் ஜன. 7 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு! அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

DIN

பிகாரில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜூன் 1 ஆம் தேதி பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி, பிகார் மக்களின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அனைத்து மக்களின் மதம், சாதி, துணை சாதி கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, சாதிவாரி கணக்கெடுப்புக்கான காலக்கெடு 2023, மே வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பிற்காக மாநில அரசு ரூ. 500 கோடியை செலவிடவுள்ளது. 

இதன்படி, பிகாரில் பேசுபொருளாகிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாநில பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 7-ல் தொடங்கும் முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜனவரி 21-ம் தேதிக்குள் முடிவடையும். இதுதொடர்பாக கணக்கெடுப்பாளர்களுக்கு டிசம்பர் 15 முதல் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்ட கணக்கெடுப்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். அடுத்து மார்ச் மாதம் தொடங்கும் இரண்டாவது கட்ட கணக்கெடுப்பில் மதம், அனைத்து சாதிகள், துணை சாதிகள் தொடர்பான தரவுகளுடன் மக்களின் பொருளாதாரம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட உள்ளன.

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், கடந்த 2021 ஜூலையில் மக்களவையில் பேசும்போது, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளைத் தவிர பிற சாதியினருக்கு சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெளிவுபடுத்தினார். இந்நிலையில் பிகாரில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு மாநில அரசு முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகிறது என்று கூறலாம். 

முன்னதாக, இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட ஏழு மக்கள்தொகை கணக்கெடுப்பில், எஸ்சி, எஸ்டி பிரிவு தொடர்பான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மற்ற சாதிகள் தொடர்பான தரவுகள் இல்லாத நிலையில், ஓபிசி எனும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை சரியாக மதிப்பிட முடியாத நிலையே உள்ளது. ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் அரசு, 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அவர்களுக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயித்தது. 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி மக்கள்தொகை 52 சதவீதமாக மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2011 ஆம் ஆண்டு சமூக - பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் அந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து பிகார் மாநில அரசு, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் சாதி அடிப்படையிலான எண்ணிக்கைக்கு ஆதரவாக இரண்டு தீர்மானங்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி மத்திய அரசிடம் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தி வந்தார். 

சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர், இடஒதுக்கீடு பெற்று பலனடைகின்றனர். ஆனால், ஓபிசி பிரிவினருக்கு அதுபோன்று கிடைப்பதில்லை என்று வாதிடுகின்றனர் சாதிவாரி கணக்கெடுப்பைக் கோருபவர்கள். 

இந்த சூழ்நிலையில் பிகார் அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் மூலமாக, மாநில மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்படும் என பிகார் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 

பிகாரைப் போல தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதனால் பிகாரைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் என்றும் ஒருசாரார் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர். 

பிகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய, மாநில அரசியலில், மக்களிடையே எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT