சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: மூச்சு இரைப்புக்கு முடிவு கட்டுமா ‘கோழையறுக்கி’..?

DIN

பருவநிலை மாறுபாட்டால் தட்ப வெப்பநிலை மாறும்போது பலருக்கும் உடல்நலம் குறித்த அச்சமான சூழ்நிலை ஏற்படும். வெப்பகாலம் சட்டென்று தட்பமாக மாறும்போது, பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். 

சுவாச மண்டலத்தை சார்ந்த நோய்கள் அதில் முக்கிய இடம் பிடித்தவை. சிலருக்கு மேல் சுவாசப்பாதையில் கிருமிகளால் நோய்த் தொற்றும், அடுக்கடுக்காய் தும்மலை ஏற்படுத்தி உடம்பை அதிரச் செய்யும் அலர்ஜி எனும் ஒவ்வாமை பிரச்னையும், சிலருக்கு கீழ் சுவாசப்பாதை தொற்றும், ஆஸ்துமா போன்ற மூச்சு இரைப்பு பிரச்னையையும் ஏற்படுத்தும். ஏன்தான் இந்த தட்ப வெப்பநிலை மாறுகிறதோ என்ற அளவுக்கு மனக் குமுறலை முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏன் இந்த கவலை ஏற்படுகிறது என்றால், அதனால் ஏற்படும் உயிர்போகின்ற பயம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். 

ஆம். திடீரெனெ குளிர்ச்சியான காற்றோ அல்லது ஒவ்வாத தூசி, புகை கலந்த காற்றோ நுரையீரலுக்குள் செல்வதால், மூச்சுக் குழல் தசைகள் சுருங்கி மூச்சுக் காற்று செல்லக்கூடிய பாதையை சுருங்க செய்வதால், தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் நுரையீரலும், இருதயமும் துன்பப்படும் நிலையால்தான் அந்த உயிர் போகின்ற பயம். 

பருவகாலம் தவறாமல் பெய்கின்ற மழை மேகங்கள் போல, பருவகாலம் தவறாமல் வந்து வேதனையை கொடுக்கும் முக்கிய நுரையீரல் தொற்றா நோய்தான் ‘இரைப்பு’ எனும் ‘ஆஸ்துமா’.  

“டாக்டர், எனக்கு ஆஸ்துமா இருக்குனு சொல்லி இருக்காங்க, ஆரம்ப நிலையில் தான் இருக்காம், ஆனால் கூட தவறாமல் இன்ஹேலர் எடுக்கச் சொல்லிட்டாங்க. காலத்துக்கும் வேற வழியே இல்லையா?” என்று இன்ஹேலர் எடுத்து எடுத்து சளித்துப்போன மனமும், நோயால் வருந்தி குன்றிப்போன உடலும், பலருக்கும் ஆரோக்கியமின்மையும், பயத்தையும் கொடுக்கும். 

‘கபமல்லாது காசம் சுவாசம் காணாது’ என்கிறது சித்த மருத்துவம். நோய்க்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் அதிகரித்த கபக் குற்றமானது, நுரையீரலில் தங்கி இயல்பாக விடும் மூச்சுக்காற்றை பாதித்து ஆஸ்துமாவை உண்டாக்குகிறது என்கிறது சித்த மருத்துவம். கபத்துடன் சேர்ந்த வாதம், அதாவது சளியுடன் சேரும் குளிர்ந்த காற்று இந்நோய்க்கு மூலக் காரணமாகிறது.

இத்தகைய நோய்நிலை ஒருபுறம் நோயாளியை வாட்டியெடுக்க, அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆஸ்துமா உறிஞ்சிகளை (இன்ஹேலர்) வழக்கமாக அடிக்கடி பயன்படுத்துவால் ஏற்படும் பின் விளைவுகளும் மற்றொரு பக்கம் அவர்களை பலவீனப்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

“சரிங்க டாக்டர், அவசர சிகிச்சையாக இன்ஹேலர் பயன்படுத்துவது இருக்கட்டும், வழக்கமான பயன்பாட்டுக்கு மூலிகைகள் ஏதேனும் உள்ளதா? அதை பயன்படுத்தினால் மூச்சு வாங்கும் நோய்நிலையில் மாற்றம் வருமா? 

இன்ஹேலர் பயன்பாட்டினைக் குறைக்க முடியுமா?” என்று கேட்க நினைப்போருக்கு உதவும் பாரம்பரியமிக்க சித்த மருத்துவ மூலிகைக் கடை சரக்குதான் ‘கோழையறுக்கி’ அல்லது ‘திப்பிலி’.

காரச்சுவையை ஆதாரமாகக் கொண்ட திப்பிலி கபத்தினால் நுரையீரலில் கெட்டிப்பட்ட சளி(கோழை)யை வெளியே எடுக்கும் தன்மையுடையதால், அதற்கு ‘கோழையறுக்கி’ என்ற பெயர் வந்ததாக தெரிகிறது. அவ்வாறு கபத்தை வெளியாக்கி, மூச்சுவிட சிரமம் உள்ளதை நீக்கி, மூச்சு சீராக பாய்வதற்கு வழிவகை செய்யும் அதனால் இதற்கு ‘சரம்’ என்ற பெயரும் உண்டு. சரம் என்ற சொல் சுவாச ஓட்டத்தை குறிக்கும் என்பது பலரும் அறிந்ததே. 

மேலும், ஆதி காலம் முதலே கபத்தை நீக்குவதற்காக, சுவாச மண்டல நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் ‘ஆதி மருந்து’ என்ற பெயரும் இதற்குள்ளது. திப்பிலி கொடியின் காய் மட்டுமல்லாது, வேரும் கூட மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

‘திரிகடுகம்’ என்பது சித்த மருத்துவத்தில் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்தில் கூட அதிகம் பேசப்படும். கார்ப்பு சுவையை அடிப்படையாகக் கொண்ட திரிகடுகு எனும் மருந்து சித்த மருத்துவத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. அத்தகைய திரிகடுகில் திப்பிலி சேருவது என்பது கூடுதல் சிறப்பு. இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகளையும் கொண்டது. 

மேலும், நோய்களுக்கு காரணமாகும் முக்குற்றத்தையும் சமப்படுத்த வல்லது. இதில் உள்ள சுக்கு வாதத்தையும், மிளகு பித்தத்தையும், திப்பிலி கபத்தையும் சமப்படுத்தி நோய்களை அணுகவிடாமல் பாதுகாக்கும், நோய்கள் வந்தாலும் தீர்க்கும் தன்மை உடையது.

திப்பிலியில் உள்ள பல தாவர வேதிப்பொருள்களான அல்கலாய்டுகள் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு மருத்துவத் தன்மையைப் பெற்றுள்ளன. 

பைப்பரின், மெதைல்பைபரின், பைபர்லாங்குமைன், பைபர்லாங்குமினைன் ஆகிய பல வேதிப்பொருள் இருப்பினும் பைப்பரின் அதில் அதிகமாக உள்ளது. இவைதவிர, செசமின், டெர்பினோலீன், ஜின்ஜிபெரீன் மற்றும் டைஹைட்ரோ கார்வியோல் ஆகியவை திப்பிலியின் நறுமண எண்ணெயில் உள்ளன. 

பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த ‘பைப்பரின்’ எனும் முக்கிய வேதிப்பொருள் இதன் மருத்துவ குணத்தை தாங்கி பிடிக்கின்றது.
 
மிளகிலும் இந்த வேதிப்பொருள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பைப்பரின் என்ற அல்கலாய்டு சேர்மத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், மற்ற மருந்துகளின் மருத்துவ குணத்தை இது அதிகரிப்பதாக, அதாவது பயோஎன்ஹான்சர்-ஆக இருப்பதாக நவீன அறிவியல் கூறுகின்றது. இதை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்த நம் முன்னோர்கள் திப்பிலியையும், திரிகடுகையும் பல்வேறு சித்த மருந்துகளில் சேர்த்திருப்பது அறிவியலை விஞ்சும் வியப்புதான்.

திப்பிலியில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களால் இது புற்றுநோயை தடுக்கும் தன்மையும், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், வீக்க முருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், மூட்டுவலியை போக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை குறைப்பதாகவும், குடல்புழுக்களை அழிக்கும் தன்மையும், உடல் பருமனை குறைப்பதாகவும், இருதயத்தை பாதுகாப்பதாகவும், ஆண்மையை பெருக்குவதாகவும், ஒவ்வாமையை நீக்கும் தன்மையும், சுவாசக் கோளாறுகளை நீக்குவதாகவும் மற்றும் செரிமானத்தை சீராக்குவதாகவும் உள்ளது. 

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பிரபலமான சித்த மருந்தாகிய கபசுர குடிநீரில் திப்பிலி சேருவதும் குறிப்பிடத்தக்கது.

திப்பிலியில் உள்ள பைப்பரின் என்ற வேதிப்பொருளால் இது, டிஎச்-2-சைட்டோகைன் எனப்படும் உயிர் வேதிப்பொருளை தடுப்பதன் மூலமாகவும், ஆஸ்துமாவிற்கு காரணமாகும் ஈசினோபில் ஊடுருவலை தடுப்பதன் மூலமாகவும், மூச்சுக் குழாய் வீக்கத்திற்கு காரணமாகும் பல்வேறு வேதிப்பொருளை தடுப்பதன் மூலமாகவும், மூச்சு இரைப்பு நோய் எனும் ஆஸ்துமாவைத் தடுக்கும் தன்மையும், நோயில் இருந்து மீட்கும் தன்மையும் உடையதாக ஆய்வு முடிவுகள் கூறுவது சிறப்பு.

சித்த மருத்துவத்தில் திப்பிலியை கொண்டு செய்யப்படும் ‘திப்பிலி ரசாயனம்’ எனும் மருந்து ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பயனளிக்கக் கூடியதாக உள்ளது.

பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பயணித்த வந்த திரிகடுகத்தில் ஒன்றான திப்பிலியை, இன்றைய நாளில் பயன்படுத்துபவர்கள் ஒரு சிலரே. 

பாரம்பரியம் உணவும், பாரம்பரிய மருந்தும், அதற்கு ஆதாரமான பாரம்பரிய மூலிகைக் கடை சரக்குகளையும் பயன்படுத்த மறந்ததனால், தெறித்தோடும் பல நோய்களும் தொற்றா நோய்களாக வாழ்நாள் முழுதும் நம்மை இன்று வதைத்து வருகின்றன. 

சுக்கு, மிளகு பயன்படுத்துவதைப் போல திப்பிலியையும் பயன்படுத்த தொடங்கினால், முக்கடுகும் நமது முக்குற்றத்தையும் அடக்கி ஆரோக்கியத்தை அள்ளித் தரும் என்பது உறுதி.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT