சிறப்புச் செய்திகள்

ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு ஆய்வுகள் கூறும் காரணம் என்ன?

DIN

நெல்லை  மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன் மொழி ஊராட்சி ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு நிரம்பாததற்கான காரணம் குறித்த ஆய்வு அறிக்கை  செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்கபடும் என ஐஐடி பேராசிரியர்கள் குழுவைச் சேர்ந்த பொறியாளர் வெங்கட்ராமன் சீனிவாசன் தெரிவித்தார். 

நெல்லை  மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன் மொழி ஊராட்சி ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் உபரி நீர் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. பல நாள்கள் தண்ணீர் சென்றும் அந்த அதிசய கிணறு நிரம்பவில்லை. இதனையடுத்து இந்த அதிசய கிணறு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஐஐடி பேராசிரியர்கள் கொண்டு நியமிக்கப்பட்டது.  

கடந்த 3 மாதங்களாக ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட  கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் டிரோன் கேமரா, கோப்ரா கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர்.

கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக உள்ளது.  மழை நீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கிணறுகளில் கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும், உபரி நீர் செல்ல செல்ல இந்த கால்வாய் இன்னும் நீரோட்டம் செல்லும் விரிவான கால்வாயாக மாறும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இந்த அதிசய கிணற்றை  தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,  ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் புதன்கிழமை தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறக்கி நவீன ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். 

அதிசய கிணற்றின் ஆய்வுகள் குறித்து ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசனிடம் கேட்டறியும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர்.

கிணற்றுக்குள் ட்ரோன் கேமரா மூலம் நடைபெறும் ஆய்வுகளை கணினி திரையில் ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் மற்றும் சபாநாயகருக்கு விளக்கினார்.

பூமிக்கு கீழே நீர்வழிப் பாதையை மேம்படுத்துவதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து விவசாயிகள் வாழ்வு உற்பத்தி அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.  

தற்போதைய ஆய்வு சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக இந்த அதிசய கிணறு  இருப்பதாக தெரியவந்துள்ளது.  

இந்த ஆய்வின் மூலம் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை இந்த கிணறு வழியாக செலுத்தும் போது 50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு  நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் எனவும் தெரியவந்துள்ளது. 

பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் ஐஐடி பேராசிரியர்கள் குழுவைச் சேர்ந்த பொறியாளர் வெங்கட்ராமன் சீனிவாசன் இந்த அதிசய கிணற்றில் நடத்திய ஆய்வுகள் குறித்து கூறியதாவது: 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளக் காலத்தின் போது வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் சென்றும் நிரம்பாத கிணறு குறித்து ஐஐடி ஆய்வு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியதைத் தொடர்ந்து  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வு செய்யும் போது முதலில் தெரிந்தது ரேபிட் ரீசார்ஜ் எனப்படும் அதிவேக மறு ஊட்டல் முறையில் அதாவது வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும்போது ஒரு மணி நேர அளவில் அந்த கிணறு நிரம்பி விடும். ஆனால், இந்த கிணறு நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் கிணற்றின் அடியில் இருக்கும் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள்தான் என்பதை கண்டறிந்தோம். நிலத்தடி நீரும், மழை நீரும் சேர்ந்து இந்த சுண்ணாம்பு பாறைகளை கரைத்து துளைகளை பெரிதாக்கி உள்ளது. 

கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடைபெற்ற இந்த மாற்றம் காரணமாக கிணற்றுக்குள் சுண்ணாம்பு பாறைகள் பாதாள குகைகளாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக கிணற்றுக்குள் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் உருவாக்கி உள்ளது. இது நெட்வொர்க் போல சுமார் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகளை உருவாக்கியுள்ளது. மேலே நிலத்தில் இருக்கும் நீர்வழிகள் போல பூமிக்கு அடியில் இருக்கும் இந்த இந்த ஓடைகளில் நீர் அதிவேகமாக பரவலாக்கப்படுகிறது. இதனால் பூமிக்கு அடியில் செல்லும் இந்த நீர்வழி பாதையில் துளையிட்டு வெள்ள உபரி நீரை செலுத்தினால் பூமிக்கு அடியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் நீர் அதிவேகமாக சென்று அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது. 

கடந்த மூன்று மாதங்களாக அதிசய கிணற்றில் நடத்திய ஆய்வுகள் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கும் ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன்

நாங்கள் இந்த கிணறு குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டோம். 300 கிணறுகள் வரை ஆய்வு செய்தோம். 160 கிணறுகள் வரை அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் மற்றும் கற்கள் எடுத்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஆராய்ச்சிக்காக நீர் மூழ்கி கேமராவை பயன்படுத்தி சுண்ணாம்பு பாறைகளில் உள்ள துளைகளின் அளவுகளை படம் பிடித்துக் கொண்டோம். இதன் மூலம் இந்த ஆயன்குளம் அதிசய கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான்.

இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகள் நீர்மட்டம் உயர்கிறது. இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள பல கிராமங்களில் உள்ளதை ஆராய்ச்சியில் நாங்கள் கண்டறிந்துள்ளோம். 

கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகள் வரை இதே போன்ற கிணறுகளை ஆய்வு செய்துள்ளோம். சில பகுதிகளில் உள்ளே கார் செல்லும் அளவிற்கு கூட பாதை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது சிறிய அளவிலான ஆய்வு திட்டம் தான். இந்த திட்டத்தை கருமேனியாறு நீர்வழி பாதை அருகில் வரை விரிவுபடுத்த உள்ளோம். 

ராதாபுரம், திசையன்விளை சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகளோ, குகைகளோ இருப்பது அறிந்தால் உடனடியாக இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு 8925010683 தகவல் அனுப்பினால் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கிணற்றின் நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்வதாக தெரிவித்தனர்.
 
மேலும், இதுதொடர்பான ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்கப்படும் என வெங்கட்ராமன் சீனிவாசன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT