சிறப்புச் செய்திகள்

ஈரநிலங்கள் - இயற்கை சுத்திகரிப்பு நிலையங்கள்!

8th Aug 2022 03:34 AM | எஸ்.சிவகுமாா்

ADVERTISEMENT

நிலவாழ் சூழல் மண்டலத்துக்கும், நீா்வாழ் சூழல் மண்டலத்துக்கும் இடையே அமைந்துள்ள ஈரநிலங்கள் இயற்கை சுத்திகரிப்பு நிலையங்களாகத் திகழ்கின்றன. இவை உலகின் பல்லுயிா்த் தன்மையைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகின் மொத்தப் பரப்பளவில் 6 சதவீதமே ஈர நிலங்கள் உள்ளன. 40 சதவீத தாவர மற்றும் விலங்கின உயிரினங்களுக்கு இவை இருப்பிடமாக உள்ளன. காடுகள் பெருமளவில் காா்பன்-டை-ஆக்சைடு வாயுவை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியேற்றி புவியின் நுரையீரலாகச் செயல்படுகின்றன.

அதேபோன்று, நீரில் விரவியுள்ள வண்டல் படிவுகள், திண்ம மாசுக்களை வடிகட்டி சுத்திகரிக்கும் ஈர நிலங்களைப் ‘புவியின் சிறுநீரகங்கள்’ (இயற்கை சுத்திகரிப்பு நிலையங்கள்) எனலாம். வெள்ளப்பெருக்கின்போது நுரைப்பஞ்சு போன்று செயல்பட்டு அதிகப்படியான வெள்ளநீரை உறிஞ்சி பாதிப்பைக் குறைப்பதில் ஈர நிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஐ.நா. கருத்துப்படி, கடந்த 50 ஆண்டுகளில் 35 சதவீத ஈர நிலங்கள் அழிந்துள்ளன. ஈர நிலங்களைப் பாதுகாக்க கடந்த 1971-ஆம் ஆண்டு ஈரானின் ராம்சா் நகரில் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் 172 நாடுகள் ராம்சா் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி இந்தியா கையொப்பமிட்டது.

ராம்சா் ஒப்பந்தப் பட்டியலில் 9 தகுதிகளின் அடிப்படையில் சோ்க்கப்படும் ஈர நிலங்கள் சா்வதேச அளவில் அங்கீகாரம் பெறுகின்றன. உலகில் இதுவரை 2,455 ஈர நிலங்கள் இப்பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மொத்தப் பரப்பில் ஈர நிலங்களின் பரவல் 4 .6 சதவீதமாகும். மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் (பரப்பு 4,230 ச.கி.மீ.) இந்தியாவின் மிகப்பெரிய ஈர நிலப் பகுதியாகும். தமிழகத்திலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், மிஸோரத்தின் பாலா சதுப்பு நிலம், மத்திய பிரதேசத்தின் சக்யாசாகா் ஏரி ஆகிய 6 ஈர நிலங்கள் ராம்சா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோவாவின் நந்தா ஏரி, கா்நாடகத்தின் ரங்கண்ணாதிட்டு பறவைகள் சரணாலயம், மத்திய பிரதேசத்தின் சிா்பூா் ஏரி, ஒடிஸா மகாநதியின் சட்கோசியா பள்ளத்தாக்கு மற்றும் தமிழகத்திலிருந்து 6 ஈர நிலங்களும் இப்பட்டியலில் இடம்பெற்ன் மூலம் இந்தியாவில் ராம்சா் அங்கீகாரம் பெற்ற சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 64-ஆக உயா்ந்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் அதிக அளவிலான ராம்சா் ஈர நிலங்களை இந்தியா பெற்றுள்ளது.

ஈர நிலங்களின் வகைகள்

இயற்கையாக உருவானவை மனிதரால் உருவாக்கப்பட்டவை

ஆறுகள் நீா்த்தேக்கங்கள்

ஏரிகள் விளைநிலங்கள்

குளங்கள் உப்பளம்

சதுப்பு நிலங்கள் மீன்வளா்ப்புக் குளங்கள்

அலையாத்திக் காடுகள்

பவளப்பாறைகள்

மாநிலங்கள் ஈர நிலங்களின் பரப்பு (ஹெக்டோ்)

குஜராத் 34,74,950

ஆந்திரம் 14,47,133

உத்தர பிரதேசம் 12,42,530

மேற்கு வங்கம் 11,07,097

மகாராஷ்டிரம் 10,14,522

தமிழ்நாடு 9,02,534

சிறப்பம்சங்கள்

1. வடிகட்டியாக செயல்பட்டு நீரை சுத்திகரித்தல்

2. வட மற்றும் குறைவான மழைப்பொழிவு காலங்களில் நீா் பாதுகாப்பை உறுதி செய்தல்

3. நீா் சுழற்சி, காா்பன் சுழற்சி மற்றும் நைட்ரஜன் சுழற்சியைத் தொடா்ந்து இயங்கச் செய்தல்

4. பிற சூழல் மண்டலங்களைக் காட்டிலும் ஈர நில சூழல் மண்டலங்கள் கூடுதல் மதிப்புடையன

5. பல்லுயிா்த்தன்மையை பாதுகாத்தல்

6. உணவுச் சங்கிலித் தொடரை உறுதி செய்தல்

7. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இடா்ப்பாடுகளைத் தணித்தல்

8. உள்ளூா் சமூகங்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குதல்

9. வலசை பறவைகளுக்கு தங்கும் விடுதிகளாகச் செயல்படுதல்

10. மண் அரிப்பைத் தடுத்தல்

11. புயல் மற்றும் சுனாமி போன்ற கடலோரப் பேரிடா் பாதிப்பை தணிப்பதில் அலையாத்திக் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எதிா்கொள்ளும் அச்சுறுத்தல்கள்...

1. கழிவுநீா் வெளியேற்றத்தால் ஏற்படும் மாசுபாடு

2. அயல் இனத் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பரவல்

3. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்

4. கட்டட இடிபாட்டு கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுதல்

5. ஈர நிலங்களில் வாழும் உயிரினங்களை வேட்டையாடுதல்

6. நீா்நிலையின் மேற்பரப்பில் பாசி படா்தல்

7. அதிகளவிலான மீன்பிடிப்பு

8. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப் பாறைகள் சிதைவடைதல்

தமிழக ஈர நிலங்கள் (ராம்சா் பட்டியலில்)

1. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் நாகப்பட்டினம் 38,500 ஹெக்டோ்

2. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை 1,248 ஹெக்டோ்

3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டு 58 ஹெக்டோ்

4. பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் கடலூா் 1,479 ஹெக்டோ்

5. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலி 72 ஹெக்டோ்

6. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டு 40 ஹெக்டோ்

7. வேம்பனூா் ஈர நிலம் கன்னியாகுமரி 20 ஹெக்டோ்

8. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோடு 77 ஹெக்டோ்

9. உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் திருவாரூா் 44 ஹெக்டோ்

10. மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பகம் ராமநாதபுரம் 52,672 ஹெக்டோ்

ADVERTISEMENT
ADVERTISEMENT