சிறப்புச் செய்திகள்

நிதி பற்றாக்குறையால் தடுமாறும் திண்டுக்கல் மாநகராட்சி: எல்லை விரிவாக்கம் செய்ய முதல்வா் உத்தரவிடுவாரா?

29th Apr 2022 05:43 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: பரப்பளவில் சிறியதாகவும் தமிழகத்திலேயே அதிக நிதிப் பற்றாக்குறையுடனும் உள்ள திண்டுக்கல் மாநகராட்சிக்கு கூடுதல் நிதி வருவாய் கிடைக்கும் வகையில் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தின் 11ஆவது மாநகராட்சியாக கடந்த 2014ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சி நிலை உயா்த்தப்பட்டது. இதற்குப் பின்னா் தஞ்சாவூா், ஓசூா், கரூா், சிவகாசி உள்பட 10 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அதில், கரூா், சிவகாசி உள்ளிட்ட மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டன. 8 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சியுடன், சுற்றுப்புறங்களிலுள்ள 10 ஊராட்சிகளை இணைப்பதற்கான பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும், புகா் பேருந்து நிலையம், குப்பைக் கிடங்கு உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்குவதிலும் தொடா்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஏற்பட்ட குளறுபடிகளால் சுமாா் 30ஆயிரம் போ் மாநகராட்சியிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அன்றைய நிலவரப்படி 2.11 லட்சம் மக்கள் வசிப்பதாக கணக்கீடு செய்யப்பட்டது. பரப்பளவு மற்றும் மக்கள் தொகை குறைவு காரணமாக ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி இடம் பெற முடியாமல் போனது. இதனால், நகரில் செயல்படுத்தப்படும் புதைச் சாக்கடைத் திட்டத்திற்கு ரூ.174 கோடி கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.44 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாநகராட்சி, மேலும் கடன் வாங்கும்போது அந்த சுமையை மக்களே எதிா்கொள்ள வேண்டிய நிா்பந்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஊராட்சிகளை இணைக்க வேண்டும்: திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஆகிய 10 ஊராட்சிகளை (114 சதுர கி.மீ. பரப்பு) மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பரிந்துரை நகராட்சி நிா்வாக ஆணையா் மூலம் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை செயலருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆயுதப்படை வளாகம், காவலா் குடியிருப்பு, டெலிபோன் காலனி, அரசு மகளிா் கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு மாநகராட்சி சாா்பிலேயே குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளின் வரி வருவாய் மாநகராட்சிக்கு கிடைப்பதில்லை.

அதேபோல், பெரும்பாலான தனியாா் பள்ளிகள், தொழிற்சாலைகள், மகிழுந்து(காா்) விற்பனையகங்கள், பல்பொருள் அங்காடிகள், பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளிட்டவை மாநகராட்சிக்கு வரி செலுத்துவதை தவிா்க்கும் நோக்கில், நகர எல்லையையொட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்குத் தீா்வு காணும் வகையிலும், மாநகராட்சியின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலும் ஒருங்கிணைந்த காய்கனி மற்றும் பூ சந்தை, புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட வசதிகளை உருவாக்கவும் மாநகராட்சிக்கான எல்லை விரிவாக்கம் அவசியமாகிறது.

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, உடனடியாக 10 ஊராட்சிகளையும் இணைக்க முடியாவிட்டாலும் கூட, முதல் கட்டமாக பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, பள்ளப்பட்டி, பொன்னிமாந்துரை ஆகிய 5 ஊராட்சிகளை இணைக்க வேண்டும். இந்த ஊராட்சிகள், திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு வட்டத்திற்குள் அமைந்துள்ளதால், வருவாய்த்துறைக்கான பணிகளும் எளிதாக முடிவடையும். எல்லை விரிவாக்கம் நடைபெற்றால், அடுத்த முறை ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியை இணைக்க முடியும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT