சிறப்புச் செய்திகள்

காது கேளாதோருடன் பேசுவது எப்படி? - சைகை மொழி நாள் இன்று!

DIN

இன்று (செப். 23) சர்வதேச சைகை மொழிகள் தினம்...

காது கேளாதோர் தங்களுக்குள் தொடர்புகொள்ளவும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளவும் உலகம் முழுவதும் சைகையால் ஆன மொழியொன்றைப் பயன்படுத்துகின்றனர், சின்னச் சின்ன மாற்றங்களுடன்.

ஒவ்வொரு நாட்டிலும் சில வேறுபாடுகள் இருக்கும், நம் நாடு முழுவதும் இந்திய சைகை மொழி (ஐஎஸ்எல்)தான் காதுகேளாதோருக்கு இடையிலான கருத்துப் பரிமாற்ற சாதனமாகப் பயன்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, இந்தியாவில் 6.3 கோடி காது கேளாதோர் உள்ளனர். இவ்வளவு பெரிய புள்ளிவிவரம் இருந்தபோதிலும், 120 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள்தொகையில் ஒருசிலர் மட்டுமே காது கேளாதோருடன் தொடர்புகொள்ளும் அறிவைப் பெற்றுள்ளனர். 

மக்கள் தங்களுடைய மொழி தவிர ஆங்கிலம் மற்றும் பிற மாநில மொழிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு மரியாதையும் கொடுக்கின்றனர். ஏன், வெளிநாட்டு மொழிகளைக்கூட பலரும் கற்றுக்கொள்ள விருப்பப்படுகின்றனர். ஆனால், நம் நாட்டில் நம்முடன் இருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாதோருடன் தொடர்புகொள்ளக் கூடிய இந்திய சைகை மொழியைக் கற்றுக்கொள்ள மக்கள் விரும்புவதில்லை.

இந்த சைகை மொழியே உலகின் முதல் மொழியாக, மூத்த மொழியாக இருந்ததை இன்று பலரும் மறந்துவிட்டனர். மனிதனிடையே தகவல் பரிமாற்றத்திற்கு முதலில் சைகை மொழிகளே பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னரே பேச்சு, எழுத்து வடிவங்கள் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. 

முன்பெல்லாம் காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் தொலைபேசி வழி யாருடனும் தொடர்புகொள்ள இயலாது. ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் செல்போனில் விடியோ அழைப்பு மூலமாக சைகை மொழியைக் கொண்டு தொலைவிலுள்ள  தங்கள் நண்பர்களுடன் பேசுகின்றனர்.

சாதாரண மொபைல் போனில் பேச முடியாத அவர்களுக்கு தற்போதைய ஆண்ட்ராய்டு போன்களும் பல்வேறு செயலிகளும் அவர்கள் எந்நேரமும் யாருடனும் தொடர்புகொள்ள ஒரு தகவல் பரிமாற்றத் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

இந்நிலையில், தங்களுடைய தனிப்பட்ட அறிவுக்காக, பயன்பாட்டுக்காக மற்ற மொழிகளை கற்றுக்கொள்பவர்கள் நம் நாட்டில் 6 கோடிக்கும் அதிகமாக உள்ள காது கேளாதோருக்காக எளிய இந்திய சைகை மொழியை ஏன் கற்றுக்கொள்ள கூடாது? என்று கேள்வி எழுப்பும் காது கேளாதோர் அறக்கட்டளையின் நிறுவனர் ரம்யா மிர்லா, இந்திய சைகை மொழியை கற்றுக்கொள்ள EduSign Academy என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, 'தற்போது, சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் என 325 பேருக்கு மட்டுமே ​​இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) சான்றளித்துள்ளது. இந்திய சைகை மொழியை பல்வேறு நிலைகளில் கற்றுக்கொள்ள முடியும். இதில், A நிலை என்பது அடிப்படை தகவல்தொடர்பு, சில சொற்றொடர்கள் மற்றும் எழுத்துக்களைக் கற்றுக்கொள்வது.  B நிலை என்பது காது கேளாதோருடன் தொடர்புகொள்பவர்கள், அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கானது. C நிலை என்பது தொழில் ரீதியாக மொழிபெயர்க்கக்கூடிய மொழி பெயர்ப்பாளர்களுக்கானது. A நிலையில் பலர் இருந்தாலும் C நிலையில் அரிதாகவே இருக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் சைகை மொழியில் சில மாறுபாடுகள் உள்ளன. ஆனால், பெரும்பாலாக சைகை மொழி, சீராக ஒன்றுபோலவே இருக்கும்' என்கிறார் ரம்யா.

சர்வதேச சைகை மொழிகள் தினத்தில் காது கேளாதோருடன் தொடர்புகொள்வதற்கு இந்திய சைகை மொழியின் சில அடிப்படை மற்றும் முக்கியமான சைகைகளைதெரிந்துகொள்வோம். 

புன்சிரிப்பு (smile) 

இந்த சைகை பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். லேசான புன்முறுவலுடன் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் விரித்தவாறு மற்ற 3 விரல்களையும் மடக்கி தாடைக்கு அருகில் வைத்துக் காட்டுவது.

வருத்தம் / துயரம்/ மன்னிப்பு (Sorry) 

உங்கள் வலது கையை மார்புக்கு அருகே கொண்டுவந்து கடிகாரத் திசையில்(clockwise) சுற்றுவது. 

பாராட்டு / கைதட்டல் (Applause)

இரண்டு கைகளையும் மேலே தூக்கி திறந்த உள்ளங்கைகளை முன்னும்  பின்னும் திருப்புங்கள். 

நன்றாக இருக்கிறது / நன்று (Good) 

மீதமுள்ள விரல்களைத் திறந்து வைத்துக்கொண்டு உங்கள் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை ஒன்றாக இணைத்து, அதை முன்னும் பின்னுமாக லேசாக நகர்த்துவது.

எக்ஸ்க்யூஸ் மீ (Excuse me)

மற்றவரது கவனத்தைப் பெறவேண்டுமெனில், எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்வதற்கு உங்கள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை இணைத்து முன்னோக்கி நீட்டிக் காட்டுவது. 

தயவுசெய்து (please)

உங்களுடைய வலது கையின் அனைத்து விரல்களையும் ஒன்றாகக் குவித்து சற்று முன்னே நகர்த்திக் காட்டுவது. 

நன்றி (thank you)

நன்றி சொல்ல, உங்கள் உள்ளங்கையைத் திறந்து விரல்களை தாடையின் அருகே வைத்து முன்னோக்கி நீட்டுவது. 

எல்லாம் நன்மைக்கே (All is well)

வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்தபடியும் இடது கையைத் தாழ்த்திக் கட்டை விரலை மட்டும் உயர்த்தியும் காட்டுவது, தொடர்ந்து, இரண்டாவதாக ஆள்காட்டி விரல்களை உயர்த்தியவாறு இரண்டு  கைகளையும் (thumbs up) மேல்நோக்கிக் காட்டுவது.

காலை வணக்கம் (Good morning)

வலதுகையில் ஆள்காட்டி விரலை மட்டும் மேலுயர்த்தி அதாவது 'தம்ப்ஸ் அப்'(thumbs up)செய்து, பின்னர் பூ விரிவதைப் போன்று கையைத் திறந்து காட்டுவது. 

நல்வரவு (Welcome)

வலதுகையை திறந்து வயிற்றுப் பகுதிக்கு அருகே கிடைமட்டமாக வைத்துக் காட்டுவது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT