சிறப்புச் செய்திகள்

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி

28th Nov 2021 12:47 PM | ந.முத்துமணி

ADVERTISEMENT

 

பெங்களூரு: பெங்களூரில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அரசு தமிழ்ப்பள்ளி செயல்பட்டுவருவது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, அசோக் நகர் பகுதியில் கம்மிஷரியேட் தெருவில் 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் அரசு தமிழ் உயர் ஆரம்பப்பள்ளி. இந்த பள்ளி ஆட்சி அதிகாரபீடமான விதானசௌதாவில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இந்த பள்ளி செயல்பட்டு வந்துள்ளது. 

1 முதல் 5-ஆம் வகுப்புவரை 10 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார். மின்சார கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு பள்ளிக்கு வருமானம் இல்லாததால், 7 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

பள்ளியில் மின்சாரம் இல்லாததால் மாணவர்களால் பள்ளியின் உள்ளே அமர முடியாத நிலை உள்ளது. மின் விளக்கு, மின்விசிறி போன்ற எந்தவசதியும் இல்லை. மேலும், கழிவறைக்கு தண்ணீர் வசதியும் இல்லை. குடிநீரும் இல்லை. பள்ளி கட்டடமும் பழமையானது என்பதால், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் பள்ளியில் படித்துவந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதாக அப்பகுதியில் வாழும் ஒருவர் கூறுகிறார். 

இந்த பள்ளிக்கு மின்வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதர பள்ளிக்கல்வித்துறையோ, மக்கள் பிரதிநிதிகளோ அக்கறை செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. 

பெங்களூரு, அசோக் நகர் பகுதியில் கம்மிஷரியேட் தெருவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளி.

ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளி என்பதால், இப்பள்ளியின் வளர்ச்சியில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை என்று அப்பகுதியை சேர்ந்த தமிழ் பெற்றோர் ஒருவர் கூறுகிறார். இப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தநிலையில் உள்ள தமிழர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வியை கொடுக்க நினைத்தாலும், அதற்கான வாய்ப்பு அரசுப்பள்ளிகளில் இல்லாததை குறையாக தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து தமிழ்பெற்றோர் ஒருவர் கூறுகையில்,"இந்த தமிழ்ப்பள்ளியை கன்னடப்பள்ளியாக மாற்றும் முயற்சி ஒருபுறம் நடந்து வருகிறது. அதேநேரத்தில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தில் வணிக நிறுவனங்களை கொண்டுவரவும் தனியார் சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருளாதார பலமோ, அரசியல் பலமோ, ஆள் பலமோ எங்களிடம் இல்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த தமிழ்ப்பள்ளியை மூடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சதி செய்துள்ளதாகவே நாங்கள் சந்தேகப்படுகிறோம். ஒருவேளை தமிழ்ப்பள்ளி மூடப்பட்டால், எங்கள் குழந்தைகள் எங்கு சென்று படிப்பார்கள்? என்பது தெரியவில்லை. 

தற்போது அந்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்." என்றார் அவர்.

"இந்த பள்ளியின் கட்டடத்தை இடித்துவிடும் திட்டம் இருப்பதால் தான், மின்சார வசதி அளிக்கப்படவில்லை" என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில்,"சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரியை அனுப்பி பள்ளியை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்வேன். அதன்பிறகு, பள்ளிக்கு மின்வசதி செய்துதரப்படும்." என்றார் அவர்.

பிரபல வரலாற்று அறிஞரான சுரேஷ்மூனா கூறுகையில், "ஒரு கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால், அதற்கு பாரம்பரிய கட்டட அந்தஸ்து கிடைக்கிறது. இந்த பள்ளி கட்டடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளதால், 75 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அக்கட்டடத்திற்கு பாரம்பரிய கட்டட அந்தஸ்து அளித்திருக்க வேண்டும். 

இது போன்ற கட்டடங்கள் பெங்களூரின் அடையாளங்களாக திகழ்கின்றன. அண்மையில் 120 ஆண்டு பழமையான கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் கட்டடம், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டது. இந்த கட்டடத்தின் பழமையான‌ அழகு மாறாமல், அதை மீட்டெடுக்க முடியும். அதற்கு பெங்களூரின் பழம்பெருமைகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் வரவேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT