சிறப்புச் செய்திகள்

புற்றுநோய் மருந்தையே கரோனாவிற்கு பயன்படுத்தலாமா?

கி.ராம்குமார்

கரோனா தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூமெடுத்துள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவலும் அதனால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கரோனா சிகிச்சைக்காக காத்திருப்பதும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன், படுக்கை மற்றும் மருந்து தேவைக்காக தவித்து வருவதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ முறைகளையும், அவசர பயன்பாட்டுக்கான மருந்துகளையும் அனுமதித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அத்தகைய வகையில் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 டிஆக்ஸி 2 குளுகோஸ் மருந்து கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரப் பயன்பாட்டுக்கான ஒப்புதலை அளித்துள்ளது.

அடிப்படையில் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் இந்த 2 டிஆக்ஸி 2 குளுகோஸ், புற்று செல்களை மேலும் பெருக விடாமல் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்ததைய மருந்து, பவுடர் நிலையில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு பல்வேறு அறிவியலாளர்களிடமும் கேள்வியை எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவரும், மதுரா கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியருமான தினகரன் அவர்களிடம் பேசினோம்.

“நம் உடலுக்கு ஆதாரமான ஆற்றல் தேவையாக இருப்பது குளுகோஸ். ஒரு குளுகோஸ் மூலக்கூறு முற்றிலுமாக சிதைந்து 38 ஏடிபி மூலக்கூறுகளைத் தரும். இந்த ஏடிபி மூலக்கூறுகள் தான் மனித உடலின் அனைத்து செயல்பாடுகளுக்குமான ஆற்றலைக் கொடுப்பவை. எந்த செயலுக்குமே ஏடிபி மூலக்கூறுகள் தேவை.

இந்த குளுக்கோஸை சிதைப்பதை அறிவியலில் க்ளைகோலைசிஸ்  அழைக்கின்றனர். இந்த க்ளைகோஸைசிஸ் மூலம் உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது. உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றல் தொடர்ச்சியாகக் கிடைக்க க்ளைகோலைசிஸ் நடைபெற்றாக வேண்டும்.

ஹெக்ஸோகைனேஸ் என்ற நொதி குளுக்கோஸ் வளர்சிதைமாற்றத்தின் முதல் படி. ஹெக்ஸோகைனேசை ஒடுக்குவதன் மூலம் புற்று செல்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். 

இது ஒருபுறமிருக்க புற்றுநோய்க்கு எதிராக 2 டிஆக்ஸி 2 குளுகோஸ் எப்படி செயல்படுகிறது என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அனைத்து வைரசுகளுமே ஏடிபி மூலக்கூறுகளை உருவாக்கும் திறனற்றது. அதனை ஈடுகட்ட வைரஸ்கள் தான் சார்ந்த ஓங்குயிரி தயாரிக்கும் ஏடிபி மூலக்கூறுகளை எடுத்துக்கொள்ளும். 

இந்த 2 டிஆக்ஸி 2 குளுகோஸ் நமது செல்களில் நடைபெறும் ஹெக்ஸோகைனேஸ் நொதிகள் உற்பத்தியாவதைத் தடுக்கும்.  வைரஸ்களில் புரத உற்பத்தியைச் செய்யும் ரைபோசோம் கட்டமைப்புகள் கிடையாது என்பதால் 2 டிஆக்ஸி 2 குளுக்கோஸ் செல்களில் நடைபெறும் க்ளைகோலைசிஸை பொதுவாகத் தடுப்பதில்லை.

அதேசமயம் புற்றுநோய்க் கட்டுப்பாட்டில் 2 டிஆக்ஸி 2 குளுகோஸ் மருந்து வேலை செய்யும் சாத்தியம் அதிகம். காரணம், புற்று செல்கள் இருக்கும் பகுதிகளுக்கு துல்லியமாக செலுத்திவிட முடியும்.

2 டிஆக்ஸி 2 குளுகோஸ் மருந்தை பவுடர் வடிவில் எடுத்துக் கொள்வதால் குடல், ரத்த நாளங்களால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தின் மூலம் அனைத்து பாகங்களுக்கு கொண்டு செல்லப்படும்போது சாதாரண செல்களில் க்ளைக்கோலைசிஸ் நடைபெறுவதைத் தடுத்தால் எப்படி நம் ஆற்றல் தேவை பூர்த்தியாகும். நுரையீரல் செல்களுக்குச் சென்றாலும் நுரையீரலின் ஆற்றல் தேவையும் நின்று போகும் தானே?

உண்மையில் வைரஸ்கள் தனது அனைத்துத் தேவைகளுக்கும் குறிப்பாக கொரானா வைரஸ்கள் நுரையீரல் செல்களைத்தானே நம்பியிருக்கும். நுரையீரலில் ஆற்றல் உற்பத்தி தடைப்படும் எனில் சுவாசிக்கவே இயலாது.

இங்கும் கூட க்ளைகோலைசிஸ் ஆக்சிஜனற்ற சூழலில் தானே நடைபெறும் எனும் கேள்வி எழலாம். ஆனால் அங்கே ஒரு குளுகோஸ் மூலக்கூறுச்சிதைவில் 8 ஏடிபி மூலக்கூறுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். மீதி 30 ஏடிபி மூலக்கூறுகள் ஆக்சிஜனை பயன்படுத்திய சிதைவினால் ட்ரைகார்பாக்சிலிக் அமில சுழற்சி மற்றும் எலக்ட்ரான் பரிமாற்ற சுழற்சி மூலம் நடைபெறுபவை” எனத் தெரிவித்தார். 

மேலும் இது குறித்த அடிப்படை உயிர் வேதியியல் புரிதலின்றி நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதாக தெரிவித்த தினகரன் உயிர் வேதியியல் புரிதலற்ற மொழிபெயர்ப்பு எந்தவிதத்திலும் சரியான அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்காது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்த மருந்து க்ளைகோலைஸிசைத் தடுக்குமா? அல்லது வைரஸ்களில் க்ளைக்கோசைலேசனைத் தடுக்குமா? அவ்வாறெனில் பவுடர் வடிவில் குடல் உறிஞ்சிகளால் நுகரப்பட்டு ஒவ்வொரு செல்களுக்கும் செல்லும் போது மற்ற செல்களின் புரதக்கட்டுமானம் தடைபட்டு உடற்செயல்பாடுகளை பாதிக்காதா? என்ற கேள்விகளும் எழுகின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படியே இதில் 221 பேர் தான் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது போதுமான ஆய்விற்கு உண்டான எண்ணிக்கை இல்லை. இந்த மருந்து சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இது உயிர் வேதியியல் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டதா? இதை வெளியிட்டதன் நோக்கம் யாரை ஆற்றுப்படுத்த? மக்களையா? எதிர்கட்சியினரையா? என்ற கேள்விகளைப் பகிர்ந்து கொண்டார்.

மனித உயிர்களைக் காக்கும் வேளையில் அறிவியல் பார்வை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை முறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும் கூட...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT