சிறப்புச் செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் துரிதப்படுத்தப்படுமா?

6th May 2021 03:30 AM | நமது நிருபர்

ADVERTISEMENT

 

கரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை, புதிதாகப் பொறுப்பேற்கும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பில் காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளனர்.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்யும் காலங்களில், கர்நாடகாவின் கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றபோது மட்டுமே காவிரி ஆற்றில் பல லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை இல்லாத காலங்களில் ஆறு பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. 

மழை பெய்யும்போது வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் மேட்டூர் அணையைத் தவிர பெரிய அளவிலான நீர்த்தேக்கம் இல்லை. மேலும் சமவெளியைக் கொண்ட தமிழகத்தில் பெரிய அளவிலான நீர்த்தேக்கம் கட்ட இயலலாததால் ஆண்டுக்கு சுமார் 300-350 டிஎம்சி வரை கடலில் கலந்து வீணாகும் நீரை சேமிக்கும் வகையிலும், அந்த நீரை வாய்க்கால் மூலம் திசை திருப்பி அவற்றை தென் தமிழகப் பகுதிகள் வறட்சியில் இருந்து மீளவும் கடந்த 2008-இல் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது தான் காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத்திட்டம். 

ADVERTISEMENT

காவிரியின் அகண்ட பகுதியான கரூர் மாவட்டம் மாயனூரில் இந்த திட்டம் இரு திட்டங்களாக உருவாக்கப்பட்டது. முதல் திட்டமாக கதவணைக்கட்டுவது, இரண்டாம் திட்டமாக கதவணையில் இருந்து வாய்க்கால் வெட்டி நதிகளை இணைப்பது என திட்டம் தீட்டப்பட்டது. இதையடுத்து மாயனூரில் 1.04 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே கதவணை ரூ.280 கோடியில் அமைக்கப்பட்டது. 

தொடர்ந்து காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்க வாய்க்கால் வெட்டும் பணி துவங்க வேண்டும் என பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் விளைவாக கடந்தாண்டு வாய்க்கால் வெட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காவிரி பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மகாதானபுரம் இராஜாராம் கூறியது: 

மறைந்த  முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்திற்கு வழங்கிய சிறப்பானத் திட்டங்களில் ஒன்று காவிரி-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்புத்திட்டம். 

இது அவரது கனவுத்திட்டம். மழை பெய்தால் மட்டுமே பாசனம் செய்ய முடியும் என்ற நிலையில் வறண்டு காணப்படும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வாய்க்கால் மூலம் அந்தந்த மாவட்டங்கலில் ஓடும் நதிகளில் இணைத்து அந்தந்த மாவட்டங்களை வளமடையச் செய்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். 

மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து விருதுநகர் மாவட்டத்தின் குண்டாறு வரை, அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தின் வெள்ளாறு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தின் வைகையாறு வழியாக விருதுநகர் மாவட்டத்தின் குண்டாறு வரை சுமார் 158.62 மைல் தொலைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.7,677 கோடியை நிதியை கடந்தாண்டு ஒதுக்கியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மாயனூரில் இருந்து வாய்க்கால் வெட்டும் பணி துவங்கியது. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை தாலுகாக்கள் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் வரை 48 கி.மீ. தூரத்திற்கு வாய்க்கால் வெட்டப்படுகிறது. தற்போது வரை சுமார் 4 கி.மீ. மட்டுமே வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 

இதற்காக கரூர் மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டத்தை புதியதாக பொறுப்பேற்கும் அரசு துரிதப்படுத்தி விரைந்து நிறைவேற்ற வேண்டும். 

ஏனெனில் இது முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள ஸ்டாலின் தந்தையின் கனவுத்திட்டம். இந்த திட்டம் நிறைவேறும்போது 7 மாவட்டங்களிலும் 3.38 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியை பெறுவதோடு, குடிநீர்பற்றாக்குறையும் இல்லாத நிலை உருவாகும் என்றார் அவர்.

கரூர் மாவட்டம், மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் வெட்டும் பணி. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT