சிறப்புச் செய்திகள்

ஆத்தூரில் திமுகவின் சாதனை வெற்றிக்கு மீண்டும் வாய்ப்பளித்த பாமக!

3rd May 2021 07:25 PM | நங்கையார் மணி

ADVERTISEMENT

 திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் களம் இறங்கி, திமுக சாதனை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பாமக தற்போது ஆத்தூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் திமுக சாதனை வெற்றி பெறுவற்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 1972-ஆம் ஆண்டு அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர். அப்போது நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் முதல்முறையாக வேட்பாளரை களம் இறக்கி வெற்றிக் கணக்கை தொடங்கி வைத்தார்.

அப்போது முதல் தேர்தல் வரலாற்றில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.  1952 முதல் 2104 வரை நடைபெற்ற 17 தேர்தல்களை சந்தித்துள்ள திண்டுக்கல்  மக்களவைத் தொகுதியில், திமுக 3 முறை மட்டுமே வெற்றிப் பெற்றிருந்தது.

1973 இடைத் தேர்தல், 1980, 1984, 1991, 1999, 2014 என 6 முறை நேரடி மோதலில், 5 முறை அதிமுக வேட்பாளர்களை வெற்றிப் பெற்றிருந்தனர்.

ADVERTISEMENT

சாதனை வெற்றிக்கு வித்திட்ட பாமக:

இதுபோன்ற வெற்றி வரலாற்று பின்னணி கொண்ட திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை, கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு  ஒதுக்கீடு செய்தது அதிமுக தலைமை.

2014 மக்களவைத் தேர்தலின்போது 50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியிருந்தது அதிமுக. ஆனால், 2019 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட பாமக 17 சதவீத வாக்குகளை (2.07 லட்சம்) மட்டுமே கைப்பற்றியது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இல்லாததால் உற்சாகத்துடன் களம் இறங்கிய திமுக, சுமார் 7.46 லட்சம் வாக்குகளை (64 சதவீதம்) கைப்பற்றி வெற்றிக் கனியை பறித்தது. சுமார் 5.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது திமுக.

சாதனைக்கு மீண்டும் வழிவிட்ட பாமக:

இந்நிலையில் 2021 தமிழக சட்டப்பேரவைத் தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆத்தூர் தொகுதியை பொருத்தவரை, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கோட்டையாக வைத்துள்ள திமுகவின் ஐ.பெரியசாமிக்கு, அதிமுக  நேரடியாக களம் இறங்காததால் வெற்றி எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாமக வேட்பாளர் போட்டியிட்டதால், தமிழக அளவில் திமுகவுக்கு மீண்டும் சாதனை வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திலகபாமாவுக்கு, அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் வாக்கு சேகரிப்பதற்கு வரவில்லை.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மட்டும் ஒருமுறை பரப்புரை மேற்கொண்டார்.  அதிமுக நிர்வாகிகளும், திண்டுக்கல்,  நத்தம் தொகுதிகளில் போட்டியிட்ட சீனிவாசன், விசுவநாதன் ஆகியோருக்கு ஆதரவாக பணியாற்ற சென்றுவிட்டனர்.

குறிப்பாக பாமகவினர் கூட அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைப்பதற்கு முக்கியத்துவம் அளித்தனர். இதனால், தனி ஒருவராக வலம் வந்த திலகபாமா, ஆத்தூர் தொகுதியை முழுமையாக சுற்றி வருவதற்குள் தேர்தலும்  முடிந்துவிட்டது.
 
1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி:

ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி, பாமகவின் திலகபாமா,  நா்ம தமிழர் கட்சியின் சைமன் ஜஸ்டின் உள்பட நோட்டாவையும் சேர்த்து 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 2.30 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், அதில் 1.66 லட்சம் வாக்குகளை (72.11 சதவீதம்) திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி கைப்பற்றினார். அவருக்கு அடுத்து 2ஆவது இடம் பிடித்த பாமக வேட்பாளருக்கு 13.15 சதவீத (30,238) வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சுமார் 1.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்திலேயே மிகப் பெரிய வெற்றியை திமுக பெறுவதற்கு பாமக மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

சொந்த வாக்குகளை இழக்கும் அதிமுக:

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சராசரியாக 40 முதல் 45 சதவீத வாக்குகளை ஒவ்வொரு தேர்தலின்போதும் அதிமுக தக்க வைத்து வந்துள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது போட்டியிடுவதை முதல் முறையாக தவிர்த்தது அதிமுக.

பாமகவுக்கு வாக்களிக்க விரும்பாத அதிமுகவினர், பிற கட்சிகளுக்கு அந்த தேர்தலில் வாக்களிக்கத்தனர். அந்த வகையில் திமுகவுக்கு 23 சதவீீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 4.7 சதவீதமும், மக்கள் நீதி மய்யத்திற்கு 3.3 சதவீதமும் அதிமுக வாக்குகள் சிதறின.

அதேபோல் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும், ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், பாமகவின்  மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு  மாறாக திமுகவுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி 1.21 லட்சம்  வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.

அவருக்கு அடுத்தப்படியாக 2ஆவது இடம் பெற்ற அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விசுவநாதன் 94,591 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய குணசேகரனுக்கு 1,013 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 17,168 வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாமகவுக்கு கிடைக்க வேண்டிய அதிமுக வாக்குள், திமுகவுக்கு கிடைத்ததால் சாதனை வெற்றி சாத்தியமாகியுள்ளது.

Tags :  திண்டுக்கல் periyasamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT