சிறப்புச் செய்திகள்

சிதறும் முதலியார் சமூக வாக்குகள்! திமுக கூட்டணி கட்சிகள் கலக்கம்

16th Mar 2021 06:32 AM | நமது நிருபர்

ADVERTISEMENTதிருமுருக கிருபானந்த வாரியாரின்  பிறந்தநாள்  (ஆகஸ்ட்  25) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அதிமுக அரசின் உத்தரவு, தமிழகத்தில் முதலியார் சமூகத்தினர் அதிகமுள்ள தொகுதிகளில் வாக்குகள் சிதறும் நிலையை உருவாக்கியுள்ளது. 

இது திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் முதலியார் சமூகத்தினர் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

 தமிழகத்தில் சமயம், இலக்கியம், பேச்சு, எழுத்து, இசை என பலதுறைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். தீவிர முருக பக்தரான அவர் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே காங்கேயநல்லூரை பூர்விகமாகக் கொண்டவர். 

1906 ஆகஸ்ட் 25-இல் பிறந்த வாரியார், தனது 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்ததுடன், பன்னிரு வயதில் பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்து பதினெட்டு வயது முதலே ஆன்மிக சொற்பொழிவில் வித்தகரானார். 

ADVERTISEMENT

வீணை பயிற்சி பெற்றிருந்த வாரியார், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான பாடல்களை இன்னிசையுடன் பாடி வந்தார். நாள்தோறும் ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்து 1993-இல் சித்தி அடைந்த அவரை அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி எனவும், 64-ஆவது நாயன்மாராகவும்  மக்கள் போற்றி வழிபடுகின்றனர். 

இத்தகைய பெருமை மிக்க கிருபானந்த வாரியாருக்கு மரியாதை சேர்க்கும் வகையில் அவரின் பிறந்த நாள்  அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதன்படி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணையும் வெளியிட்டது. 

முதலியார் சமூக மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய இந்த உத்தரவு வட மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள முதலியார் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அதேசமயம், அரசின் இந்த உத்தரவால் பேரவைத் தேர்தலில் முதலியார் சமூக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தேர்தலில் திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் முதலியார் சமூகத்தினர் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், திருத்தணி, சோளிங்கர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட வடமாவட்டத் தொகுதிகள் மட்டுமின்றி சேலம் தெற்கு, திருச்செங்கோடு, ஈரோடு கிழக்கு, பவானி, காங்கேயம், திருப்பூர் தெற்கு, பல்லடம், சங்கரன்கோவில் என அச்சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்  என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. 

இதற்கு மற்றுமொரு முக்கிய காரணத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். திமுக என்றாலே முதலியார் கட்சி என்று ஒரு பெயர் இருந்தது. அதன் மூத்த தலைவர்களும், ஆதரவாளர்களும் ஆரம்பத்தில் முதலியார் சமுதாயத்தவர்களாக இருந்ததுதான் அதற்குக் காரணம். அண்ணாவைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலர் பதவியை இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் என முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வகித்து வந்தனர். 

திமுகவில் கருணாநிதியின் தலைமை வந்ததுமுதல் முதலியார் சமுதாயத்தின் முக்கியத்துவம் குறையத் தொடங்கிவிட்டது. அதனால்தான், எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுகவில் இருந்த முதலியார் சமுதாயத் தலைவர்கள்  பலர் அதிமுகவில் இணைந்தனர். 

அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் முதலியார் சமூகத்துக்கு இருந்து வந்த முக்கியத்துவம் முற்றிலும் குறைந்து விட்டது. இது தற்போது திமுக வேட்பாளர் பட்டியலிலும் உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் முதலியார் சமூகத்தினர் அதிகளவில் உள்ள தொகுதிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை. அதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் முதலியார் சமூகம் இருந்து வருகிறது. 

எனினும், தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முதலியார் சமூகத்துக்கு பெயரளவிலேயே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவையும் திமுகவுக்கு எதிராக முதலியார் சமூக வாக்குகள் சிதற அடிப்படைக் காரணம் என்கின்றனர்.

இதன்மூலம், ஏப்ரல் 6-இல்  நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார் சமூக வாக்குகள் சிதறினால், அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும்  சற்று கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT